Published:Updated:

ஏன் அந்த மாணவன் தேர்வுக்கு வரவில்லை?

வாட்ஸ் அப்பில் பறந்த வினாத்தாள்!

பிரீமியம் ஸ்டோரி

பீகார் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பெற்றோரே பிட் பேப்பர்களை வீசிய காட்சியைக் கண்டு தேசமே அதிர்ந்து போயிருக்கும் இந்தச் சமயத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கேள்வித்தாளை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி, ஆசிரியர் சமுதாயத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள், இரண்டு ஆசிரியர்கள்.

தமிழகம் முழுவதும் கடந்த 5-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. கடந்த 18-ம் தேதி கணிதத்தேர்வு நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்கிற தனியார் பள்ளியில் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்களாக மகேந்திரன், கோவிந்தன் ஆகிய  இரண்டு ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள்,  தங்கள் செல்போன் மூலம் கேள்வித்தாளைப் புகைப்படம் எடுத்து, உதயக்குமார் மற்றும் கார்த்திகேயன் என்ற இரு ஆசிரியர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இவர்கள் நான்கு பேரும், விஜய் வித்யாலயா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள். அவர்கள்  ஒரே பள்ளியைச் சேர்ந்தவர்கள்  என்பதால் அந்தப் பள்ளியின் மீதும் சந்தேக ரேகை படிந்துள்ளது. விஜய் வித்யாலயா என்ற அந்தப் பள்ளி ஓசூரிலும் தர்மபுரியிலும் உள்ளது. கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகளில், அந்தப் பள்ளியின் மாணவர்கள் மாநில அளவில்  மதிப்பெண்களைக் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏன் அந்த மாணவன் தேர்வுக்கு வரவில்லை?

மகேந்திரன், கோவிந்தன் ஆகிய இருவரையும் கையும்களவுமாகப் பிடித்தவர், அன்றைக்கு  பரிமளம் பள்ளிக்குப் பறக்கும்படையாகச்  சென்ற  எஸ்.எஸ்.ஏ  சி.இ.ஓவான பொன்.குமார்.  

இந்த விவகாரம் குறித்து ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம். 'அன்றைக்கு ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியில் 323 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வின்போது மாணவர்கள் மட்டுமின்றி, தேர்வு அறைக் கண்காணிப்பாளராகச் செல்லும் ஆசிரியர்களும் தேர்வு அறைக்குள் செல்போன் எடுத்துச்செல்லக் கூடாது என்பது விதி. ஆனால், அன்றைக்குத் தேர்வு ஆரம்பித்து ஒரு மணிநேரத்துக்குப் பிறகு, காலை 11.10 மணி அளவில், அந்தத் தேர்வு மையத்தின் தேர்வு நடத்தும் அலுவலரான சீனிவாசனிடம் தனது செல்போனை ஆசிரியர் மகேந்திரன் கொடுத்துள்ளார். இவ்வளவு நேரமாக செல்போனை ஏன் கொடுக்கவில்லை? என்று மகேந்திரனைக் கடிந்துகொண்டு,  அந்த செல்போனை வாங்கி பீரோவுக்குள் வைத்துள்ளார் சீனிவாசன். அதன் பிறகு கோவிந்தன் ஓடிவந்து தனது செல்போனை கொடுத்திருக்கிறார். அவரையும் திட்டிவிட்டு, பீரோவுக்குள் வைப்பதற்காக செல்போனை எடுத்துச் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் அங்கு பறக்கும் படை அதிகாரியாக வந்த பொன்.குமார், சீனிவாசனிடம் விசாரித்துள்ளார். அப்போது, இரண்டு ஆசிரியர்கள் தங்கள் செல்போன்களைத் தாமதமாகக் கொடுத்ததாக சீனிவாசன் சொல்லியிருக்கிறார்.

பொன்.குமாருக்குப் பொறி தட்டியிருக்கிறது.  சீனிவாசனின் கையில் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு, பீரோவுக்குள் இருந்த இன்னொரு செல்போனையும் எடுத்துத் தரச் சொல்லி சோதித்துப் பார்த்திருக்கிறார். அப்போதுதான், வாட்ஸ் அப் மூலம் கேள்வித்தாள் அனுப்பி இருந்ததைக் கண்டுபிடித்து இருக்கிறார். அந்த இரண்டு ஆசிரியர்களையும் அழைத்து விசாரித்து இருக்கிறார் பொன்.குமார்.  இருவரும் பதில் எதுவும் சொல்லாமல் திருதிருவென்று முழித்திருக்கிறார்கள்.

பின்னர், கேள்வித்தாளை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியதாக பொன்.குமாரிடம் எழுதிக்கொடுத்து இருக்கிறார் ஓர் ஆசிரியர்.  செல்போனை தாமதமாகக் கொடுத்தேன் என்று இன்னொரு ஆசிரியர் எழுதிக்கொடுத்து இருக்கிறார். அதையடுத்து, பொன்.குமார் தனது மேலதிகாரியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு, மேலும் சில அதிகாரிகளை அழைத்துக்கொண்டு விஜய் வித்யாலயா பள்ளிகளுக்குப்  புறப்பட்டார். தேர்வு முடியும் வரை  முறைகேடு எதுவும் நடக்காமல் பார்த்துவிட்டு, தேர்வு முடிந்தவுடன் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். அதையடுத்து  மகேந்திரன், கோவிந்தன், உதயக்குமார், கார்த்திகேயன் ஆகிய நான்கு ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டனர்' என்றார்கள்.

ஏன் அந்த மாணவன் தேர்வுக்கு வரவில்லை?

இந்த முறைகேட்டுக்கு அதிகாரிகளும் பல வகைகளில் உடந்தையாக இருந்துள்ளனர் என்று தெரிகிறது.  தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலர்  தயாரித்து, அதன் பிறகு முதன்மைக் கல்வி  அலுவலரின் அனுமதி வாங்க வேண்டும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள்தான் தேர்வு அறைக் கண்காணிப்பாளர்கள்.  ஆனால்,  அந்தப் பட்டியலில்  மகேந்திரன், கோவிந்தன் ஆகிய இருவரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.  பிறகு எப்படி அவர்கள் இருவரும்  தேர்வு அறைக்குள்  கண்காணிப்பாளராக  நுழைந்தார்கள்?  உண்மையில் அந்தப் பட்டியலில் இடம்பெற்ற இருவர் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று கல்வித் துறை வட்டாரத்தில் கேள்வி எழுப்பப்படுகிறது.

மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் இருந்த அறைகளில் ஒன்றில், தேர்வு எழுத வேண்டிய 20 மாணவர்களில் ஒருவர் வரவில்லை. அந்த மாணவனுடைய   வினாத்தாளைத்தான் போட்டோ எடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அந்த மாணவர் யார்? அவர் எதற்காகத் தேர்வு எழுத வரவில்லை? அந்த மாணவர் தேர்வு எழுத வராததற்கும் இவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை தேடினால் இந்த முறைகேட்டின் பின்னால் யார்  யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே மாநில அளவில் முதலிடம் பிடிக்கிறார்கள் என்ற ரகசியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் என யாரைக் கேட்டாலும், 'விசாரணை நடந்து வருகிறது. முடிந்ததும் சொல்கிறோம்’ என்ற பதிலை மட்டுமே சொல்கிறார்கள். மாவட்ட நிர்வாகமும்  பள்ளிகளில் கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்துகிறோம் என்கிற பேரில்  அறைக் கண்காணிப்பாளர்களைப் பணியிட மாற்றம் செய்வது, வட்டாட்சியர்களைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று கண்ணாமூச்சி காட்டுகிறதே ஒழிய, முறைகேடுகளில் தொடர்புடைய மிகப்பெரும் 'கல்வித்தந்தை’களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை என்று கல்வியின் மீது அக்கறை கொண்டவர்கள்  ஆதங்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில், ஓசூர் கல்வி மாவட்டக் அலுவலர் உட்பட நான்கு ஆசிரியர்களைப் பணியிடை நீக்கம் செய்துள்ளார் தேர்வுகள் துறை இயக்குநர் தேவராஜன்.

இரவும் பகலும் கடுமையாக உழைத்து, உயிரைக்கொடுத்துப் படித்துவிட்டு, ஓரிரு மதிப்பெண்​களில் முதலிடத்தை நழுவவிடும் மாணவர்கள்தான், இந்தச் சமயத்தில் நினைவுக்கு வருகிறார்கள்!

எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு