Published:Updated:

"என்னை தப்பு செய்யச் சொல்றாங்க!”

மனைவியிடம் கலங்கிய முத்துகுமாரசாமி!

பிரீமியம் ஸ்டோரி

வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை சம்பவத்தில் ஏற்பட்டுள்ள முடிச்சுகள் அவிழ்க்கப்படாத நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் கையில் எடுத்து சி.பி.ஐ விசாரணை கோரி வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

"என்னை தப்பு செய்யச் சொல்றாங்க!”

வேளாண்மைத் துறையில் பணியாற்றிய பொறியாளர் முத்துக்குமாரசாமி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதன் பின்னணியில் மேலும் சில ஆளும் கட்சிப் பிரமுகர்கள் இருப்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சி.பி.ஐ விசாரணைக் கோரி போராடிவரும் சூழலில் தி.மு.கவும் களம் இறங்கி உள்ளது.

தி.மு.க சார்பாக கனிமொழி எம்.பி 21-ம் தேதி முத்துக்குமாரசாமியின் வீட்டுக்குச் சென்று அவரது மனைவி சரஸ்வதி, மகன்கள் விஜய், சேதுராம் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். இதுவரையிலும், அரசியல்வாதிகள் யாரையும் வீட்டுக்கு வர அனுமதிக்கவில்லை. கனிமொழி வருவதாகத் தகவல் கிடைத்ததும் உளவுத் துறையினரும் அவரது வீட்டுக்குச் சென்று, 'முத்துக்குமாரசாமிக்குக் கிடைக்க வேண்டிய தொகையை விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். உங்களது மகன்களில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறோம். கனிமொழி வந்தால் அரசியலாகிவிடும். அதனால் அவருக்கு அனுமதி கொடுக்காதீர்கள்’ என 'அன்பாக’ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

"என்னை தப்பு செய்யச் சொல்றாங்க!”

ஆனால், அவரது குடும்பத்தி​னரோ, 'இதுவரையிலும் நடக்கும் விசாரணையைப் பார்த்தால் எங்களுக்கு நியாயம் கிடைப்பதுபோல தெரியவில்லை. அதனால் யார் வேண்டுமானாலும் வரட்டும். நாங்களாக யாரையும் கூப்பிட மாட்டோம். அவர்களாக வந்தாலும் மறுக்கவும் போவதில்லை’ என உறுதியாகத் தெரிவித்துவி​ட்டார்​களாம். அதனால் திட்டமிட்டபடி கனிமொழி வந்தார்.

சரஸ்வதியை தேற்றிய கனிமொழி, ''அவருக்கு என்ன மாதிரியான நெருக்கடி இருந்துச்சு.. அதுபற்றி உங்களிடம்  ஏதாவது சொன்னாரா?'' எனக் கேட்டார். ''அவருக்கு ரொம்பவே நெருக்கடி இருந்துச்சு. வீட்டுக்கு வந்தாலும் சதா போன் வந்துக்கிட்டே இருக்கும். போன் வந்தாலே பயப்படுவார். என்னிடம் ஒருநாள், 'என்னை தப்பு செய்யச் சொல்றாங்க. இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெறப் போகிற நான் தப்பு செய்ய விரும்பலை. ஆனா நெருக்கடி குடுக்குறாங்க’னு மட்டும் சொன்னார். இப்படி எங்களைத் தவிக்க விட்டுட்டுப் போவார்னு நெனைச்சுக்கூட பார்க்கலையே'' என்று கதறி அழுதார். அந்தக் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்க கனிமொழி முன்வந்த போதிலும், 'எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம். நாங்க யாருட்டயும் எதையும் உதவியா வாங்கறதை அவர் உயிரோடு இருக்கப்பவே விரும்ப மாட்டார். அவர் விரும்பாத எதையும் எப்பவும் நாங்க செய்ய மாட்டோம்’ எனச் சொல்லிவிட்டனர்.

"என்னை தப்பு செய்யச் சொல்றாங்க!”

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி, ''வேளாண் அதிகாரியான முத்துக்குமாரசாமி தற்கொலையைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி அமைச்சர் பொறுப்பில் இருந்தும் அ.தி.மு.க-வின் கட்சிப் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு உள்ளார். ஆனாலும், அதற்கான விளக்கம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை சரியாக நடைபெறவில்லை. இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே முழு உண்மையும் தெரியவரும். பாரபட்சமான நிலையே தொடருமானால் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கூடும்போது இந்த விவகாரத்தை அங்கே பேசுவோம். நியாயம் கிடைக்கும் வரை தி.மு.க தொடர்ந்து போராடும்'' என்றார் ஆவேசமாக.

முத்துக்குமாரசாமியின் மகன்களான விஜய், சேதுராம் ஆகியோர், ''நாங்க ரெண்டு பேருமே சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறோம். எங்ககிட்ட அப்பா ரொம்பவே பாசமாக இருப்பார். அவரோட மரணத்தின் பின்னணி பற்றி எதுவும் எங்களுக்குத் தெரியாது. ஜூ.வி மட்டும் இல்லேன்னா இந்த விவகாரம் வெளியே வந்திருக்காது. எங்களுக்காகப் பல அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பதும் ஆறுதலாக இருக்கு'' என்றார்கள் கண்ணீருடன்.

தொடர்ந்து நெருக்கடிகள் வருவதால் சரஸ்வதி அவருடைய தம்பி மகாதேவனுடன் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டார்.

குற்றவாளிகள்  கைதாவார்களா, சி.பிஐ விசாரணைக்கு விவகாரம் போகுமா?

பி.ஆண்டனிராஜ், படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு