Published:Updated:

'சிரிக்கவைத்தால் குற்றமில்லை!’

கருத்துரிமையை காத்த ஷ்ரேயா சிங்கால்

மூக வலை தளங்கள் மற்றும் இணையதளங்​களில் இயங்​கிக் கொண்​டிருப்​பவர்​களைப் ப​யமுறுத்திக் கொண்டிருந்த தகவல் தொழில்​நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு 66-ஏ-வை ரத்துசெய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துரி​மையை விரும்புகிற அனைவரும் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடி வருகின்றனர்.

'சிரிக்கவைத்தால் குற்றமில்லை!’

பூச்சாண்டி காட்டிய இந்தச் சட்டத்தை முறியடிக்கக் காரணமானவர், டெல்லி பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு சட்டம் படிக்கும் மாணவி ஷ்ரேயா சிங்கால். அவரைச் சந்தித்தோம். ''நான் டெல்லியில் வசந்த்வாலி பள்ளியில் படிப்பை முடித்த பின்னர் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் வானியல் பௌதிகம் படித்து இந்தியா திரும்பினேன். எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக சட்டம் படித்தவர்கள். என்னுடைய தாயார் மனால் சிங்காலும் வழக்கறிஞர். என்னுடைய தாயாரின் அம்மா சுனந்தா பாண்டரே டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர். தாயாரின் அப்பா எம்.சி.பாண்டாரே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர். காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தவர்.  தொழிலாளர்கள் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் நிறைய வழக்குகளை நடத்தியவர்.  

'சிரிக்கவைத்தால் குற்றமில்லை!’

2012-ல் பால் தாக்கரே மறைந்தார். அவரது இறுதிச் சடங்கின்போது மும்பை நகரில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. ஒரு தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்று ஊரையே முடக்குவது சரியா என்று ஃபேஸ்புக்கில் கருத்தை வெளியிட்டார் கல்லூரி மாணவி ஷகீன்தாதா. அவர் சொன்ன கருத்துக்கு லைக் தெரிவித்தார் ரினு சீனிவாசன். இவர்கள் இருவர் மீதும்  சிவசேனா புகார் கூறியது. அதைத் தொடர்ந்து  மகாராஷ்ட்ரா போலீஸார் இவர்கள் இருவரையும்  கைதுசெய்தனர். கருத்துப்படம் வரைந்த ஆசீம் திரிவேதி என்பவரையும் மும்பை போலீஸார் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து ஐ.டி சட்டத்​தின்படி நாடு முழுக்க பலரும் கைது செய்யப்பட்டனர். இதை  எதிர்த்து நான் பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்தேன். 2012-ம் ஆண்டு தலைமை நீதிபதியாக இருந்த அல்ட்மாஸ் கபீர் எனது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். எந்தெந்த மாநிலங்களில் இந்தச் சட்டப்பிரிவின்படி கைதுசெய்தார்களோ அந்த மாநில அரசுகளையும் பிரதிவாதிகளாகச் சேர்த்தேன். இந்தக் கைதுகள் கடந்த வாரம்  உ.பியில் பள்ளி மாணவர் ஒருவர் அந்த மாநில அமைச்சர் ஒருவரை விமர்சனம் செய்தது வரை தொடர்ந்தது. இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வந்தபோது, 2009-ல் நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஒரு கட்சிகூட இதை எதிர்க்கவில்லை. ஆறு நிமிடத்தில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒரு விவாதம்கூட நடக்கவில்லை. இதில்தான் சமூக வலைதளங்கள், இமெயில்கள் போன்றவை எல்லாம் சேர்க்கப்பட்டன. வலைதளங்களில் போஸ்ட் செய்யும் ஒருவரது கருத்து மட்டுமல்ல, மற்றவரின் கருத்தை ஆதரிப்பவர்களையும் பகிர்ந்து கொள்பவர்களையும் குற்றவாளிகளாகக் கருதவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது. இதற்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை என்பதோடு, இவர்களை 24 மணி நேரத்துக்குள் உடனடியாகக் கைது செய்யவும் வழி வகை செய்யப்பட்டது. கொடுமையான அடக்கு முறைச் சட்டம் இது.

'சிரிக்கவைத்தால் குற்றமில்லை!’

'பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஒரு நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி முறையாகச் செயல்படுகின்றன. ஆனால், இன்டர்நெட்டிலும் வலைதளங்களிலும் முறையற்று கட்டுப்பாடு இன்றி இருக்கிறது. மத உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் வருகின்றன. அதே சமயத்தில் இந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க சில திருத்தங்களைச் செய்யத் தயார்’ என்று மத்திய அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தகவல்கள், பாலியல் தொடர்பான இணையதளங்கள் போன்றவைகளைத் தடுக்கவும் மற்ற ஐ.டி. சட்டங்கள் உள்ளன. ஐ.டி சட்டப்பிரிவு 69ஏ மற்றும் 79 ஆகிய பிரிவின்படி எந்த வலைதளங்களையும் அரசு தடை செய்யவோ அல்லது அதில் இருக்கும் தகவல்களையும் கருத்துகளையும் நீக்கவோ உத்தரவு போடலாம். ஆனால் 66-ஏ பிரிவின்படி சிந்திக்கத் தூண்டும் கருத்துகள் மற்றும் சிரிப்பு வரவைக்கும் கருத்துகளைச் சொல்பவர்களுக்குக்கூட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுக்கக்கூடிய சட்டம்தான் தேவை இல்லை என்பதை வாதாடி வென்றிருக்கிறோம்!'' என்று சொன்னார்.

உச்ச நீதிமன்றத்துக்கு மக்களிடம் இருந்து ஒரு பெரிய 'லைக்’!

சரோஜ் கண்பத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு