Published:Updated:

எக்ஸாம் எழுதினால் ஃபெயில் ஆகிடுவீங்கன்னு ஹெட் மிஸ் சொல்லிட்டாங்க!

தேர்வு எழுதாத மாணாக்கர்கள் வேதனை

பிரீமியம் ஸ்டோரி

கொடுமை,கொடுமை, கொடுமையோ கொடுமை இது! 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தங்கள் பள்ளி 100 சதவிகிதம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக ஆறு மாணவ, மாணவியர்களை பொதுத்தேர்வு எழுதவிடாமல் தடுத்திருக்கிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

நாகை மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் ஆறு பேர் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

எக்ஸாம் எழுதினால் ஃபெயில் ஆகிடுவீங்கன்னு ஹெட் மிஸ் சொல்லிட்டாங்க!

தேர்வு எழுத அனுமதிக்கப்படாத மாணவிகள் சாந்தி, ரேணுகா, காயத்ரி, தமிழ்ச்செல்வி ஆகியோரை சந்தித்தோம். ''எங்களுக்குத் தேர்வு ஆரம்பிக்கிற முதல்நாள் வரை ஹால் டிக்கெட் கொடுக்கலை. ஏன்னு கேட்டால் நீங்க எல்லாம் சரியா படிக்கலை. எக்ஸாம் எழுதினால் ஃபெயில் ஆகிடுவீங்கன்னு ஹெட் மிஸ் சொல்லிட்டாங்க. அதனால தமிழ் முதல்தாள் எக்ஸாம் எழுதல. பரீட்சை எழுத போகலையான்னு வீட்டில கேட்டாங்க. ஃபெயில் ஆகிடுவோம்னு சொல்லி பரீட்சைக்கு வரவேண்டாம்னு டீச்சர் சொல்லிட்டாங்கன்னு சொன்னோம். எங்களோட அப்பாவும் அம்மாவும் போய் போலீஸ்ல புகார் கொடுத்தாங்க. பிறகு, டி.இ.ஓவுக்கு போன் பண்ணி பேசினாங்க. ஸ்கூலுக்கு வந்து ஆய்வு செஞ்ச டி.இ.ஓ., 'தமிழ் இரண்டாம் தாள் பரீட்சை’ எழுதச் சொன்னாங்க. 2 மாசத்துக்கு முன்பு நடந்த பிராக்டிகல் எக்ஸாம்கூட எழுத அனுமதிக்கலை. எல்லோர்கிட்டேயும் சொன்னோம். யாருமே கண்டுக்கலை'' என்றனர்.

மாணவி சாந்தியின் பெற்றோரான சண்முகமும் மாலாவும், ''கடந்த 4 மாதங்களாக  வருகைப் பதிவேட்டில் இந்த 6 பிள்ளைங்க பெயர்களைக் கூப்பிடுவதே இல்லை. சாப்பாட்டு ரூமில் வெச்சுதான் பாடம் சொல்லிக் கொடுத்திருக்காங்க. பெற்றோர்  ஆசிரியர் மீட்டிங்கில் நாங்கள் கலந்துகொண்டது மாதிரி அவர்களே கையெழுத்து போட்டிருக்கிறாங்க. எங்க பிள்ளைங்க எல்லோரும் நல்லாத்தான் படிச்சாங்க. பரீட்சை எழுதவிடாததற்கு என்ன காரணம்னு தெரியல'' என்றனர் சோகத்துடன்.

எக்ஸாம் எழுதினால் ஃபெயில் ஆகிடுவீங்கன்னு ஹெட் மிஸ் சொல்லிட்டாங்க!

இதுகுறித்து அந்தப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டோம். ''எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனா, அந்த ஆறு பேருக்கும் சுத்தமா படிக்க வராது. அதனால பரீட்சை எழுதவிடலைன்னு நினைக்கிறோம். மாணவர்கள் படிக்கவில்லை. பரீட்சை எழுதினால் ஃபெயில் ஆகிவிடுவார்கள் என்பதற்காகப் பரீட்சை எழுதவிடாமல் செய்தது தவறுதான். 100 சதவிகிதம் தேர்ச்சி வேண்டும் என்று அதிகாரிகள் பிரஷர் கொடுக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்புவரை ஆல் பாஸ் போடச் சொல்கிறார்கள். மாணவர்களை அடிக்கவும் முடியலை. கண்டிக்கவும் முடியலை. இப்படி இருந்தால் எப்படி 100 சதவிகிதம் கொடுக்க முடியும். மாணவர்களிடம் அன்பு காட்டினால் சந்தோஷப்படுகிறார்கள். கண்டித்தால், அவர்கள் தங்கள் பெற்றோர்களிடம் ஆசிரியர்களைப் பற்றித் தவறாகச் சொல்லி திசை திருப்பிவிடுகிறார்கள்'' என்று சொன்னார்கள்.

''100 சதவிகிதம் தேர்ச்சி வேண்டும் என்பதற்காக சுமாராக படிக்கும் மாணவர்களைத் தேர்வு எழுதவிடாதது பள்ளித் தலைமை ஆசிரியர் தன்னிச்சையாக எடுத்த முடிவு. எங்களுடைய விசாரணையில் பள்ளி நிர்வாகத்தின் மீது தவறு இருப்பதால் சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். ஆறு மாணாக்கர்களும் தமிழ் முதல்தாள் தேர்வு எழுத அனுமதி கேட்டு அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறோம். அரசு அனுமதிபெற்று மீண்டும் தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 100 சதவிகிதம் தேர்ச்சி வேண்டும் என்பதற்காக யாருக்கும் நாங்கள் பிரஷர் கொடுக்கவில்லை. கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களை வைத்து மீட்டிங் போடுவோம். ஆசிரியர்கள் மீதான தவற்றை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துகிறார்கள்'' என்றார் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி, ''மாணவர்கள் தேர்வு எழுதப்படாதது குறித்து எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. நான் அதுகுறித்து விசாரிக்கிறேன். நீங்கள் எங்கள் துறை செயலாளரிடம் கேளுங்கள்'' என்று முடித்துக்கொண்டார்.

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபீதா, ''மாணவர்கள் எதற்காகத் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பது பற்றி கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். விசாரணை முடிந்த பிறகுதான் என்னவென்று தெரியவரும்'' என்றார்.

பள்ளி 'பெயர்’ எடுக்கவேண்டும் என்பதற்காக, தேர்வு எழுத இருந்த மாணவர்களின் 'பெயரை’ நீக்கினால் எப்படி?

ஏ.ராம், படங்கள்: க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு