Published:Updated:

அலட்சிய போலீஸ்... அலறும் சகாயம் டீம்!

வெடிகுண்டு... வீச்சரிவாள்... மர்ம பைக்...

பிரீமியம் ஸ்டோரி

ரண்டு முறை கொலை மிரட்டல் கடிதங்கள் வந்த பிறகும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிரானைட் விவகாரத்தில் விறுவிறுவென ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார் சகாயம். இந்தச் சூழ்நிலையில், கடந்த 25-ம் தேதி மதுரை மேலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்த சகாயம் குழுவினரை நோக்கி ஒரு கும்பல் வீச்சரிவாளுடன் பாய்ந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள குண்டக்கல் மற்றும் சிவலிங்கம் என்ற இரு கிராம மக்களைக் கிராமத்திலிருந்து துரத்திவிட்டு அந்தப் பகுதியை பி.ஆர்.பி விலைக்கு வாங்கிவிட்டார் என்ற புகார் வந்ததும் முதலில் அங்குச் சென்று ஆய்வு நடத்தினார் சகாயம். ''சுமார் 300 பேர் வாழ்ந்த அமைதியான கிராமம் எங்களோடது. பள்ளிக்கூடம், சமுதாயக்கூடம், வானொலி அறை, மேல்நிலைத் தண்ணீர்த் தொட்டி என்று எல்லாமே இருந்தன. அத்துடன் எங்க கிராமத்துல கிரானைட்டும் இருந்ததுதான் எங்க சாபம். எங்க கிராமத்துல இருந்தவங்களைக் காலி செய்யுறதுக்காக பல வேலைகளைச் செஞ்சாங்க. எங்க வீட்டு இளந்தாரிப் பொண்ணுங்களை வடநாட்டிலிருந்து வேலைக்கு வந்த நபர்களை அனுப்பி பாலியல் பலாத்காரம் செய்வது, நள்ளிரவில் கற்களை ஓட்டுவீட்டின் மீது வீசி மிரளவைப்பது, காலி பண்ணலைன்னா உங்களைக் காலி பண்ணிவிடுவோம் என்று மிரட்டுவது, சில நேரங்களில் ஊரின் மையத்தில் இருக்கும் பொது அடி பம்ப்பில் பி.ஆர்.பி நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர்கள் ஜட்டியோடு குளிப்பது, சில நேரங்களில் ஜட்டி இல்லாமல் குளிப்பது என்று அருவருக்கத்தக்க செயல்களைத் தொடர்ந்து செய்தார்கள். தட்டிக் கேட்டால் நேராக வீட்டுக்கு வந்து பெண்களைக் கையைப் பிடித்து இழுப்பார்கள். இப்படியாகத் தொடர்ந்து தொந்தரவு செய்து ஊரை காலி பண்ண வைத்துவிட்டனர்' என்று கண்ணீரும் கம்பலையுமாக அந்த ஊர் மக்கள்  சகாயத்திடம் விசாரணைக் கமிஷனில் புகார் கொடுத்தனர்.

அலட்சிய போலீஸ்... அலறும் சகாயம் டீம்!

புகாரை வாங்கிய சகாயம் அவர்களிடம் ஆறுதலாகப் பேசி உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்து உங்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்வேன் என்று சொல்லியிருந்தார். இறுதிக்கட்ட அறிக்கையில் குண்டல்பட்டி கிராமத்தின் நிலைமையை உணர்த்துவதற்காக, அந்தப் பகுதியில் மக்கள் வசிக்காமல் கிராமம் காலியானதை வீடியோவாக எடுத்து தலைமை நீதிபதிக்குக் காட்ட சகாயத்தின் சிறப்பு நேர்முக உதவியாளர் ஆல்பர்ட் மற்றும் வேளாண் துறை இணை இயக்குநர் ஜெய்சிங் ஆகியோர் அடங்கிய குழு கடந்த 25ம் தேதி  குண்டக்கல் கிராமம் சென்று அந்த மக்களை வரவழைத்து அதை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டிருந்தது.

இந்தச் சம்பவம் நடந்துகொண்டு இருக்கும்போதே ஈரக்குலையே நடுங்கும் அளவுக்கு பகீர் சம்பவம் ஒன்று நடந்தது. ''ஆல்பர்ட்டும், ஜெய்சிங்கும் குண்டல்பட்டி மக்களிடம் நின்று விசாரித்துக்கொண்டு இருந்தனர். திடீரென்று இவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி ஒருவன் ஓடிவந்தான். இவர்களை நெருங்குவதற்குச் சற்று முன்னதாக முதுகுப் பக்கத்தில் தயாராக மறைத்து வைத்திருந்த அரிவாளை வெடுக்கென்று உருவினான். நொடிப்பொழுதில் அதை கவனித்த ஜெய்சிங், தனது கைத்துப்பாக்கியை எடுக்க, அதைப் பார்த்த அரிவாளுடன் வந்தவன், எதிர்ப்புறம் உள்ள சாலையை நோக்கி ஓட ஆரம்பித்தான். ஏதோ நடக்க இருப்பதாக உணர்ந்த கிராம மக்கள், அவனை விடாமல் துரத்திப்பிடித்தனர்' என்று சொல்கிறார்கள்.

பிடிபட்டவனோ, ''நான் மாடுகளை விரட்ட ஓடிவந்தேன்'' என்றானாம். 'யாராவது மாடுகளை விரட்ட அரிவாள் வைத்திருப்பார்களா? அடிங்கப்பா அவனை’ என்று கிராம மக்கள் அடிக்கப் பாய்ந்தனர். 'அடிக்க வேண்டாம். மாடுகளுக்கு இலை, தழை வெட்ட அரிவாள் வைத்திருக்கலாம். அவனை விட்டுவிடுங்கள்’ என்று சகாயம் குழுவினர் சொல்லும்போதே அதற்குள் அங்கிருந்து ஓடி முட்புதருக்குள் மறைந்துவிட்டான். பொதுமக்களில் சிலர், ''மாடுகளே இல்லை. சும்மா கதை விடுறான். இவனைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்து இருக்கவேண்டும். அதற்குள் ஓடிவிட்டான். வந்தவன் உள்ளூர்க்காரன் இல்லை. அதனால் பலத்த சந்தேகத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும் அரிவாளுடன் வந்த மர்ம நபரை விசாரிக்காமல் தப்பிக்க விட்டுவிட்டோம்'' என்று வருத்தப்பட்டனர்.

ஏற்கெனவே இங்கு அரிவாளுடன் நான்கு மர்ம நபர்கள் சுற்றித் திரிந்ததாகவும் அவர்கள், கிரானைட் குவாரிகளுக்குள் இருந்த பைக்கில் ஏறிச்சென்றதாகவும் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டனர். இந்தச் சம்பவம் பற்றி உடனடியாக சகாயத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்கு சகாயம், ''புகார் கொடுக்கலாம். உடனடியாக நீங்கள் கிளம்பி வந்துவிடுங்கள்'' என்று அவர்களை அங்கிருந்து புறப்பட வைத்தார்.  

சகாயம் அலுவலகத்தில் பணியாற்றுபவர் ஓய்வுபெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம். இவரை மூன்று நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத யாரோ ஒருவர், பணி முடிந்து பைக்கில் செல்லும்போது இடித்துத் தள்ளிவிட்டு நிற்்காமல் சென்றுவிட்டார். மீனாட்சி சுந்தரம் அடிபடாமல் சிறுகாயத்தோடு தப்பித்தார். மறுநாளும் அதே இடத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர் பைக்கில் வந்து மோதியதால் மீனாட்சி சுந்தரம் கீழே விழுந்து கண்ணுக்கு அருகில் அடிபட்டதில் ஒன்பது தையல்கள் போட்டு மருத்துவமனையில் படுத்துவிட்டார். இப்படி சகாயம் மற்றும் அவரைச் சுற்றி உள்ள நபர்கள் அனைவருக்கும் அவர்களுக்கே தெரியாமல் பல்வேறு விபரீதங்கள் நடந்துவருவதால் பெரும் அச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.  

ஏற்கெனவே சகாயத்துக்குப் பகிரங்கமாக இரண்டு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. முதல் கடிதத்தில், 'உன்னை கண்டம் துண்டமாக வெட்டி கிரானைட் குவாரிகளில் போட்டுவிடுவோம்’ என்று எச்சரிக்கை விடு்க்கப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் குறித்து விசாரித்த காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கிடையில் மறுபடியும் கடந்த வாரம் சகாயத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதிலும் கொலை செய்துவிடுவதாக மிரட்டி, 'வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட உயிரோட இருக்க மாட்டாய். குளோஸ் பண்ணி விடுவோம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. அந்தக் கடிதம் குறித்தும் போலீஸுக்குப் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நரபலி கொடுத்து இருப்பதாகப் புகார் கூறிய கீழவளவுவைச் சேர்ந்த சேவற்கொடியோன், 'மர்மக் கும்பல் ஒன்று பி.ஆர்.பியின் ஆட்கள்’ என்று சொல்லி வெளிப்படையாகவே மிரட்டி இருப்பதாக புகார் சொல்லியிருக்கிறார். ஆதாரமாக அவர்கள் மிரட்டிய செல்போன் பேச்சையும் அதன் எண்ணையும் ரெக்கார்ட் செய்து முறைப்படி மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியத்திடமும் எஸ்.பியான விஜயேந்திர பிதாரியிடமும் கொடுத்தார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.  

மதுரையில் சகாயத்தைச் சுற்றி இப்படி நாளுக்கு நாள் பல்ஸ் எகிறவைக்கும் சம்பவங்களாக நடந்துகொண்டு இருக்கின்றன. முதலில் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினார்கள். பிறகு போனில் பேசி மிரட்டினார்கள். தொடர்ந்து இப்படிச் செய்தவர்களைப் பற்றி போலீஸ், மாவட்ட கலெக்டர் என்று அரசாங்க உயர் பிரதிநிதிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் போனதால் நான்காவது சம்பவமாக வீச்சரிவாளுடன் வந்து கொலை செய்யத் துணிந்துள்ளனர். நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது அரசும் காவல் துறையும். இனியும் இவர்களை நம்பினால் பிரயோஜனம் இல்லை. நீதிமன்றம்தான் சகாயம் மற்றும் அவரது குழுவைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் புகாராகத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுத ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைக் கமிஷன் அமைத்த நீதிமன்றம்தான் சகாயத்தைப் பாதுகாக்க வேண்டும்!

சண்.சரவணக்குமார், அட்டைப்படம்: ஈ.ஜெ.நந்தகுமார், படம்: நா.ராஜமுருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு