Published:Updated:

"கோயில் திருவிழா நடக்கும்... முடிஞ்சா தடுத்துப் பாருங்க!”

நியூட்ரினோ ஆய்வகத்தை எதிர்க்கும் மக்கள்

பிரீமியம் ஸ்டோரி

நியூட்ரினோ  ஆய்வகத்தை முற்றுகையிட்டு தங்களின் அடுத்தகட்ட போராட்டத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளனர், தேனி மாவட்ட விவசாயிகள்.

தேனி பொட்டிப்புரம் பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, கடந்த  ஜனவரி மாதம் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்,

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.  நியூட்ரினோ திட்டத்தினால் உலகின் பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அழிவதற்கான வாய்ப்பு உண்டு என்பது உட்பட பல்வேறு காரணங்களை முன்வைத்து வாதாடினார்.

"கோயில் திருவிழா நடக்கும்... முடிஞ்சா தடுத்துப் பாருங்க!”

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் வாதாடியவர்கள்,  'நியூட்ரினோ திட்டத்துக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம்  அனுமதி கேட்டு விண்ணப்பமே வரவில்லை' என்றனர். தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், 'ஆய்வகப்பணிகள் ஆரம்பமாகவில்லை. அத்துடன், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியும் இல்லை' என்றார்.  மத்திய அரசு சார்பில் வாதாடிய பி.ஆர்.சுவாமிநாதன், 'ஆராய்ச்சி ஆரம்பமாகும்போது லைசென்ஸ் வாங்கிவிடுவோம்' என்றும் வாதாடினர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன்  மற்றும் எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறும்வரை நியூட்ரினோ திட்டத்தினை தொடங்குவதற்கான அனைத்துப் பணிகளுக்கும் இடைக்காலத் தடை விதித்தது. அதையறிந்த பொட்டிப்புரம் பகுதி மக்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  பின்னர், 'அம்பராயன் மலைக்குச் சென்று வழிபட்டு நம்முடைய நன்றியைச் சொல்ல வேண்டும்' என சுற்றுவட்டார கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.

பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 700-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த சனிக்கிழமை அன்று டிராக்டர்களில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவிருக்கும் இடத்துக்குச் சென்றனர். மலையின் கீழே அமைந்துள்ள அம்பராயன் கோயிலில் மக்கள் வழிபட்டனர். மேலும், இந்தத் திட்டத்துக்கு முழுமையான தடை விதிக்க அருள்கூற வேண்டும் என்று அம்பராயனை வேண்டினர். சிலருக்கு அருள் வந்து சாமி ஆடினர். அதன்பின், மலை மீதுள்ள கல் ஸ்தூபிக்குச் செல்ல அவர்கள் புறப்பட்டபோது, போடி டி.எஸ்.பியான ஸ்ரீனிவாச பெருமாள், இன்ஸ்பெக்டர் பிலிப் கென்னடி மற்றும் பாலமுருகன் ஆகியோர் அங்கே வந்தனர்.

"கோயில் திருவிழா நடக்கும்... முடிஞ்சா தடுத்துப் பாருங்க!”

'இது நீதிமன்றத்தால் இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ள  பகுதி. இங்கு வருவதற்கோ  கோயிலில் வழிபடுவதற்கோ காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால், கைதுசெய்யப்படுவீர்கள்' என்று காவல் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

'இது நாங்கள் வழிபடுகிற இடம். இங்கு வந்து வழிபட இதுவரை யாரிடமும் நாங்கள் அனுமதி வாங்கியது இல்லை. இப்போது திடீரென்று அனுமதியென்றால் யாரிடம், எதற்கு வாங்க வேண்டும்? தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி வாங்காமலேயே இங்கே ஆய்வகம் அமைக்கும்போது நாங்கள் ஏன் அனுமதி வாங்க வேண்டும்?' என போலீஸாரிடம் கேள்வி எழுப்பிய மக்கள், 'இப்போதுகூட நாங்கள்  சாதாரணமாக வழிபடத்தான் வந்துள்ளோம். அடுத்த வாரம் திருவிழா வர இருக்கிறது. நாங்கள் இங்கே உறுதியாக திருவிழா கொண்டாடுவோம். எங்களை கைது செய்ய வேண்டுமானால், இப்போதே கைது செய்யுங்கள்' என மக்கள் ஆவேசம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பொன்னம்மாளிடம் பேசினோம். 'எனக்கு இப்ப 65 வயசுக்கும் மேல ஆச்சு. என்னைய கல்யாணம் பண்ணி கொடுக்குறப்ப, 'இந்தா ரெண்டு ஆடு, ஒரு அருவா, அந்தா இருக்கு பாரு ஒரு மலை... இதை வெச்சு நீ பொழச்சுக்க’னு சொல்லித்தான் கட்டிக்கொடுத்தாக. இந்த மலை எங்களுக்கான சொத்து. இப்ப இதைக் குடையப்போறதா சொல்றாங்க. இத நாங்கள் விட மாட்டோம். அடுத்த வாரம் அம்பராயன் கோயில்ல திருவிழா நடத்தப்போறது உறுதி. முடிஞ்சா தடுத்துப் பாருங்க' என்றார் ஆவேசத்துடன்.

அடுத்த வாரம் திருவிழாவைக் கொண்டாடப் போகிறார்கள் பொட்டிப்புரம் சுற்றுவட்டார கிராம மக்கள்.

உ.சிவராமன், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு