Published:Updated:

கொலையாளியைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டோம்!

ராமஜெயம் நினைவுநாளில் நேரு சபதம்!

பிரீமியம் ஸ்டோரி

திருச்சியில் திரும்பிய பக்கம் எல்லாம், 'மறக்க முடியுமா?’ போஸ்டர்!

மார்ச் 29. ராமஜெயம் கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. 3-ம் ஆண்டு நினைவு நாளை திருச்சியில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள், பேனர்கள்  மூலம் அதகளப்படுத்தி இருந்தார்கள். காலையில் ராமஜெயத்தின் வீட்டில் அவரது குடும்பத்தார் மட்டும் கலந்து கொண்ட படத்திறப்பு விழா நடந்தது. திருச்சி  திண்டுக்கல் சாலையில் உள்ள, ராமஜெயம் குடும்பத்தாருக்கு சொந்தமாக கேர் பொறியியல் கல்லூரிக்குச் சென்ற நேரு, கல்லூரி நுழைவாயிலில் உள்ள  ராமஜெயத்தின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். ராமஜெயத்தின் நினைவாக  அறக்கட்டளை தொடக்க நிகழ்ச்சியும் சாதனையாளர்களுக்கு விருதும் பணமுடிப்பும் வழங்கப்பட்டன.

இயற்கை விவசாயிகளான பாமையன், அரிச்சலூர் செல்வம் ஆகியோருக்கு விருதுடன் தலா 50,000 பணமுடிப்பும், மாநில கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.

கொலையாளியைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டோம்!

நிகழ்ச்சியில் பேசிய கே.என்.நேரு, ''எங்களுடைய  குடும்பம், விவசாயக்  குடும்பம். ராமஜெயம் வாழ்நாள் முழுவதும் விவசாயத்தை நேசித்தார். குறிப்பாக, இயற்கை வேளாண்மையை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்பதுதான் அவரது நோக்கமாக இருந்தது. அதன்விளைவாகத்தான் தோகமலை அருகே கே.வி.கே எல்லாம் கொண்டுவந்து இயற்கை விவசாய முறையைப் பரவலாக்க முயற்சி எடுத்துவந்தார். அவர் 12-ம் வகுப்பில் அதிக மார்க் எடுத்தார். பொறியியல் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னைப்போல் மற்ற மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே, பிற்காலத்தில் மிகவும் சிரமப்பட்டு, ஏழைக் குழந்தைகள் எளிமையாகக் கல்வி கற்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்தக் கல்லூரி. அவர் உயிரோடு இருந்தபோது,  வருடத்துக்கு 5,000 பிள்ளைகளுக்கு மேல் அவரே பணம்கட்டி படிக்க வைப்பார். எங்கள் குடும்பத்தில் அவர் இருக்கும் வரை எல்லா பொறுப்புகளையும் அவர்தான் கவனித்துக்கொள்வார். நாங்கள் இறந்து அவர் எங்கள் குடும்பத்துக்குச் செய்ய வேண்டியதை நாங்கள், அவர் இறந்து செய்யும் நிலைக்கு ஆளாகிப்போனதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதற்குக் காரணமானவர்களை போலீஸார் கண்டுபிடிப்பார்கள் என்றுதான் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம்.  மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இதை இப்படியே விடமாட்டோம். நிச்சயம் நீதிமன்றத்தின் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டோம்'' என்றார் அழுத்தமான குரலில்.

துக்கம் காரணமாக ராமஜெயத்தின் மனைவி லதா வரவில்லை என்றனர். ராமஜெயத்தின் மகன் வினீத் மற்றும் அவரது மகள் ஜனனி ஆகியோர் மட்டும் கலந்து கொண்டனர்.

தற்போது ராமஜெயம் கொலை வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என விசாரித்தோம். டி.எஸ்.பி மலைச்சாமி தலைமையிலான தனிப்படை இதுவரை, கே.என்.நேரு உள்பட 1,500 பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும் இந்தக் கொலையில் 60க்கும் மேற்பட்ட  மோட்டிவ்கள் இருப்பதால் எது கொலைக்கான காரணம் என கண்டுபிடிக்க காலம்பிடிக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், ''சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை வளையம் ராமஜெயம் குடும்பத்தைத் தாண்டி செல்லவில்லை. இதனால்தான் வழக்கில் முன்னேற்றமே இல்லை'' என்கிறார்கள் கொலை செய்யப்பட்ட ராமஜெயம் ஆதரவாளர்கள்.

''எதையோ மறைக்கிறார்கள். யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள்'' என்ற குற்றச்சாட்டு போலீஸ் மீது அழுத்தமாகப் பதிந்துள்ளது.

சி.ஆனந்தகுமார், படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு