Published:Updated:

‘மனித உரிமைன்னு சொல்றவன் எல்லாம் கிரிமினல்!’

மிரட்டுகிறதா போலீஸ்?

பிரீமியம் ஸ்டோரி

சமூகத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வருவதற்காக உருவானதுதான் மனித உரிமை அமைப்புகள். அதிலும் போலிகள் உருவாகிவிட்டார்கள் என்பதும் உண்மை. ஒருவரை மிரட்டுவதற்கான ஆயுதமாக மனித உரிமை என்ற பெயரை சிலர் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் 'போலியான மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. 'இந்த வாய்ப்பை காவல் துறை, எங்களைப் பழிவாங்குவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது’ என்று புகார் சொல்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

‘மனித உரிமைன்னு சொல்றவன் எல்லாம் கிரிமினல்!’

 திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டாரத்தில் சாதிக்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள், போலீஸ் அத்துமீறல்கள், மணல் கொள்ளை ஆகியவற்றுக்கு எதிராகப் போராடி வந்த ஆறுமுகம் என்பவர் மீது பெண் வன்கொடுமைச் சட்டத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

என்ன நடந்தது? ஆறுமுகத்திடம் கேட்டோம். 'எங்கள் பகுதியில் நடக்கும் சமூக விரோதச் செயல்களை  எதிர்த்துப் போராடி வருகிறேன். கந்துவட்டி, தீண்டாமைக் கொடுமைகள், மணல் கொள்ளை, சாதியக் கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளேன். இந்த வட்டாரத்தில் காவல் துறைக்கு எதிராக பல பிரச்னைகளை அம்பலப்படுத்தியுள்ளேன். அதனால், என் மீது அவர்களுக்கு ஆத்திரம் இருந்தது. என் உறவினர் ஒருவருக்கும் அவர் மனைவி குடும்பத்துக்கும் இடையே நடந்த குடும்பச் சண்டையில் என் பெயரையும் இணைத்து போலீஸார் வழக்கு போட்டுள்ளார்கள். நாங்குனேரி காவல் நிலையத்துக்கு போலீஸார் என்னை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த எஸ்.ஐ. ரவிமதி 'ஏண்டா நீ என்ன மனித உரிமைப் போராளியா? எங்களுக்கு எதிரா பெட்டிஷன் போடுவியா? இப்ப சட்டம் போட்டுட்டாங்க. மனித உரிமைன்னு சொல்றவன் எல்லாம் கிரிமினல்... தெரியுமா?’ என்று ஆத்திரத்துடன் பேசினார். பின்னர் என் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கைப் பதிவு செய்து, அதில் என்னை முதல் குற்றவாளியாகச் சேர்த்தனர். அந்தப் பொய் வழக்குக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறேன்'' என்று சொன்னார்.

‘மனித உரிமைன்னு சொல்றவன் எல்லாம் கிரிமினல்!’

மனித உரிமைகளுக்காக உண்மையிலேயே போராடும் செயற்பாட்டாளர்களைக் குறிவைக்கும் போலீஸார், மனித உரிமைகள் என்ற பெயரில் அமைப்புகளை வைத்துக்கொண்டு மனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுபவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசினார் 'எவிடென்ஸ்’ கதிர். 'எல்லா துறைகளிலும் போலிகள் இருப்பார்கள். யார் போலியானவர், யார் உண்மையானவர் என்பது மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நிச்சயம் தெரியும். சமூகத்தில் நிகழும் கொடுமைகளையும் காவல் துறையினரின் அத்துமீறல்களையும் எங்களைப் போன்றவர்கள் அம்பலப்படுத்தி வருகிறோம். மனித உரிமைகள் குறித்து பொதுமக்களுக்குப் பயிற்றுவிக்கிறோம். இது காவல் துறையினருக்குப் பிடிக்கவில்லை. போலி மனித உரிமை அமைப்புகள் பற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டதும், சகட்டு மேனிக்கு எல்லோர் மீதும் பாய ஆரம்பித்துவிட்டார்கள். மனித உரிமை என்ற வார்த்தையை யாரும் உச்சரிக்கக் கூடாது. மனித உரிமைகள் என்று சொன்னால் அது மிக மோசமான குற்றம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். இது மோசமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கும்'' என்றார்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், 'மதுரையில் மனித உரிமைகள் என்ற பெயரில் ஓர் அமைப்பு செயல்படுகிறது. அந்த அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களில் ஒருவராக பிரபல தாதா  இருக்கிறார். அவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளன. குற்றப்பின்னணி கொண்ட அவர் நிர்வாகியாக இருக்கும் அந்த அமைப்பு மீது, போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.

பழிவாங்குவதற்கும், மிரட்டுவதற்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவது காவல் துறையாக இருந்தாலும் சரி... மனித உரிமை அமைப்புகளாக இருந்தாலும் சரி, அது தவறுதான். அதற்காக உண்மையான மனித உரிமை ஆர்வலர்களை வதைக்க நினைக்கலாமா?

செ.சல்மான்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு