Published:Updated:

மிக்ஸி 800 ரூபாய்... கிரைண்டர் 1300 ரூபாய்...

விலைபேசப்படும் விலையில்லா பொருட்கள்! நெல்லூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

மிக்ஸி 800 ரூபாய்... கிரைண்டர் 1300 ரூபாய்...

விலைபேசப்படும் விலையில்லா பொருட்கள்! நெல்லூரிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

Published:Updated:

‘தமிழக அரசால் மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களான கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவை ஆந்திராவில் கூவிக்கூவி விற்கப்படுகின்றன. விலை குறைவு என்பதால் மக்களும் அவற்றைப் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்’ என்பதை அறிந்து ஆந்திராவுக்குப் புறப்பட்டோம்.

மிக்ஸி 800 ரூபாய்... கிரைண்டர் 1300 ரூபாய்...

ஆந்திரா மாநிலம் நெல்லூர் நகரத்தின் முக்கிய இடமான வி.ஆர்.சி சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் கூடிய அட்டைப் பெட்டிகளில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் பிளாட்பாரத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. வாடிக்கையாளரைப்போல மிக்ஸியின் விலை என்ன என்று வியாபாரிகளிடம் கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘நீங்கள் தமிழா?’ என்று கேட்டபடி ஏற இறங்கப் பார்த்தார் அந்தப் பெண் வியாபாரி. பின்னர், ‘மிக்ஸி 800 ரூபாய்’ என்றார். கொஞ்சம் குறைக்கச் சொல்லி பேரம் பேசினோம். ‘எங்களுக்குக் கட்டுப்படி ஆகாது’ என்று அடுத்த கஸ்டமரை கவனிக்கத் தொடங்கினார். இன்னொரு பிளாட்பாரக் கடைக்குச் சென்றோம். அந்த வியாபாரிடம், ‘கிரைண்டர் என்ன விலை’ என்று கேட்டோம். ‘1,300 ரூபாய்’ என்றார். அவரிடமும் பேரம் பேசிப் பார்த்தோம். ‘‘பாக மிக்ஸி ஸாரூ... பேரம் காது. ஒரே ரேட்தான்’’ என்று தமிழும் தெலுங்குமாகக் கறாராகச் சொல்லிவிட்டார்.

அங்கிருந்து கிளம்பி வி.ஆர்.சி சந்திப்பில் சவாரிக்காகக் காத்திருந்த ஆட்டோ டிரைவர் ராஜாவிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘தினமும் இங்கு தமிழக அரசு கொடுத்த இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி விற்பனை நடந்து வருகிறது. விலை குறைவு என்பதால், மக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கிறார்கள். பேரம் எதுவும் பேச முடியாது. தமிழகத்திலிருந்து வாங்கி வந்து இங்கு கொள்ளை லாபத்துக்கு விற்கிறார்கள். இங்குள்ள காவல் துறையினர் எதுவும் கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில்தான் இப்படி இலவசமாக வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுக்கிறார்கள். இங்கு எதுவும் கிடையாது. தேர்தல் நேரத்தில் புளியோதரை சாப்பாட்டுப் பொட்டலமும், ஒரு குவாட்டரும் கொடுப்பார்கள். அதன்பிறகு தொகுதிப்பக்கமே வரமாட்டார்கள். அந்த அம்மாவைப் (ஜெயலலிதா) பார்த்து இங்குள்ள அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும். இவர்களும் இலவசமாக வீட்டு உபயோகப் பொருட்களைக் கொடுத்தால், நாங்கள் இப்படி விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது’’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

ஆந்திரா பிளாட்பார பெண் வியாபாரியிடம் பேசினோம். ‘‘சென்னையில் இருந்து மொத்தமாக வாங்கி ரயில் மூலம் இந்தப் பொருட்களைக் கொண்டு வந்து விற்கிறோம். எப்போது பிடிப்பார்கள் என்ற பயத்தோடு விற்றுக்கொண்டு இருக்கிறோம். ஒரு பொருள் விற்றால், போக்குவரத்து செலவு போக 100 ரூபாய் கிடைக்கும். அட்டைப் பெட்டி இல்லாமல் விற்றால் யாரும் வாங்குவதில்லை. இதனால்தான் அப்படியே விற்கிறோம். பொருட்களை சேலை, சாக்கு மூட்டைகளில் மறைத்து வைத்து விற்கிறோம். மிக்ஸி, கிரைண்டருக்கு இங்கு டிமாண்ட் அதிகம். யாராவது மின்விசிறி கேட்டால், வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுப்போம். எங்களுக்குக் கிடைக்கும் சொற்ப லாபத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டுகிறோம்’’ என்றார்.

மிக்ஸி 800 ரூபாய்... கிரைண்டர் 1300 ரூபாய்...

இந்த இலவசப் பொருட்கள் எப்படி ஆந்திராவில் விற்பனைக்கு வருகின்றன என்று விசாரணையில் இறங்கினோம். தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், ‘‘தமிழகத்தில் இலவசமாகக் கொடுக்கப்படும் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளைப் பெரும்பாலானவர்கள் இங்கு பயன்படுத்துவது இல்லை. கூவம் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் வறுமையின் காரணமாக இவற்றைக் குறைந்த விலைக்கு ஆந்திர வியாபாரிகளிடம் விற்றுவிடுகிறார்கள். இந்தப் பொருட்களை வாங்குவதற்காகவே ஆந்திராவில் இருந்து குறிப்பிட்ட வியாபாரிகள் தமிழகத்தில் தங்கி இருக்கிறார்கள். அவர்கள் மூலம்தான் இந்தப் பொருட்கள் ஆந்திராவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் இந்தப் பொருட்களை வாங்கிக் கொடுக்கத் தமிழகத்திலும் ஆந்திராவிலும் புரோக்கர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் மூலமாகவும் இந்தப் பொருட்கள் கைமாற்றி விடப்படுகின்றன. இதை விற்கும் பிளாட்பார வியாபாரிக்கு 200 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. பிளாட்பார கடைகள் என்பதால் மாமூல் வாங்கிக்கொண்டு ஆந்திர போலீஸாரும் கண்டுகொள்வது இல்லை. தமிழக எல்லைப்பகுதி கிராமங்களிலும் சென்னையிலும் இந்த இலவசப் பொருட்களை வீடு வீடாகச் சென்று வாங்கி வந்து ஆந்திர பிளாட்பார வியாபாரிகளிடம் புரோக்கர்கள் விற்கின்றனர்’’ என்றார்.

இதுகுறித்து தமிழக அரசின் சிறப்பு அமலாக்கத் துறையை கவனித்து வரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் பேச போனில் தொடர்புகொண்டோம். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து அந்தத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘தேர்தல் வாக்குறுதியின்படி மக்களுக்கு விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி ஆகியவை ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. 2014-15-ம் ஆண்டு ரூ.3,800 கோடியில் 98 லட்சம் எண்ணிக்கையுள்ள மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களைப் பெறும் பயனாளிகள் பயன்பெற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். ஆனால், கிடைக்கும்வரை லாபம் என்று கருதும் மக்கள் இவற்றைக் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர். இவைதான் தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா எல்லைப் பகுதிகளில் சந்தை விலையைவிட குறைவாக விற்கப்படுகின்றன. இலவச டி.வி-யும் இப்படித்தான் விற்கப்பட்டன. இதைக் கட்டுப்படுத்துவது என்பது சிரமமான காரியம். இருப்பினும் தமிழகத்தில் இந்தப் பொருட்கள் விற்பது குறித்து தகவல் கிடைத்தால், அவற்றைப் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இலவசப் பொருட்களை விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற செயல்கள் தடுக்கப்படும்’’ என்றனர்.

வறுமையை ஒழிக்காமல் இலவசங்கள் வழங்குவதில் பயன் இல்லை!

- எஸ்.மகேஷ்
படங்கள்: ப.சரவணகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism