Published:Updated:

கைவிலங்கு போடப்பட்டவர்களால் எப்படி சுட முடியும் ?

ஆந்திரத்தில் தொடரும் ஆத்திரம் !

னித உயிர்களின் மதிப்பு ஆந்திர மாநிலத்தில் ஒரு  துப்பாக்கித் தோட்டாவுக்கு சமம். 20 அப்பாவி தமிழகக் கூலித் தொழிலாளிகளைச் சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸார் நடத்திய நாடகத்தைத் தொடர்ந்து, தெலங்கானாவிலும் ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

வாரங்கல் மாவட்டத்திலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டத்தில் போலீஸ் வேனுக்குள் வைத்து ஐந்து கைதிகளைக் குண்டுகளால் துளைத்தெடுத்திருக்கிறார்கள். இறந்தவர்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தினர் என்பதால் விவகாரம் மேலும் சூடாகியிருக்கிறது.

நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் ஹைதராபாத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷேக் சையீப் உல்லா காலத். ‘‘வாரங்கல் மத்திய சிறை ஹைதராபாத்தில் இருந்து 150 கி.மீ தள்ளி இருக்கிறது. இ்தைப் பயன்படுத்தித்தான் போலீஸார் மனித உயிர்களோடு விளையாடி இருக்கிறார்கள். சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே, ‘போலீஸ் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதே போலீஸார்தான். ஆகவே, எங்களை ஹைதராபாத் மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும்’ என்று நீதிமன்றத்தை மன்றாடிக் கேட்டனர். இந்த நிலையில்தான் அந்தக் கைதிகளை போலீஸார் பழித் தீர்த்திருக்கிறார்கள். ‘அவர்கள் தப்பிக்க நினைத்தார்கள் அதனால் சுட்டோம்’ என்று வழக்கமான பொய்யைக் கூறியிருக்கிறது போலீஸ். ஆனால், இருக்கையோடு கைவிலங்கிடப்பட்ட ஒரு கைதி எப்படி தப்பிக்க முடியும்? என்ற சந்தேகத்தை போலீஸ் தீர்த்துவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது’’ என்றார் காட்டமாக.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கைவிலங்கு போடப்பட்டவர்களால் எப்படி சுட முடியும் ?

இந்தியாவில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த முஹம்மத் இஜாஸுதீன் மற்றும் முஹம்மத் அஸ்லம் ஆகிய இருவரும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நல்கொண்டா மாவட்டத்தில் நடைபெற்ற வாகன சோதனையின்போது சிக்கினர். அப்போது இரு போலீஸாரைக் கொன்றுவிட்டு அவர்களுடைய துப்பாக்கியுடன் அவர்கள் தலைமறைவானார்கள். அதன்பிறகு, கடந்த 4-ம் தேதி அதே நல்கொண்டா மாவட்டத்தில் போலீஸிடம் சிக்கி துப்பாக்கிச் சூட்டில் உயிர்விட்டனர். அப்போதும் இரண்டு போலீஸார் என மொத்தம் 4 போலீஸாரின் உயிரை பறித்துவிட்டனர். இதற்குப் பழிக்குப் பழியாகத்தான் விசாரணைக் கைதிகளான விக்காரூதின் அகமத், அம்ஜத் அலி, முகமத் ஜாகீர், முஹம்மத் ஹனீஃப் மற்றும் இஸ்ரார் கான் ஆகியோரை கொன்று இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெலங்கானா அரசை கண்டித்துப் பொங்கி எழுந்து வருகின்றனர்.

சமூக ஆர்வலரான குல்லாம் ரப்பானியிடம் பேசினோம். ‘‘சிமி தீவிரவாதிகள் இரண்டு பேர் நான்கு போலீஸாரை சுட்டுக் கொன்ற போலீஸை கொதிப்படைய வைத்திருக்கிறது.

கைவிலங்கு போடப்பட்டவர்களால் எப்படி சுட முடியும் ?

அதுதான் பிரதான காரணமாக இருக்க முடியுமே தவிர, வேறு எதுவும் இருக்க முடியாது. இது பழிக்குப் பழி நடந்த கொலை. 100 பேரைக் கொன்று குவித்த அஜ்மல் கசாப்பைகூட சட்டத்தின் முன் நிறுத்தி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுதான் உண்மையான ஜனநாயகம். ஆனால், சட்டத்தை தாங்களே கையில் எடுத்து இப்படி ஒரு செயலைச் செய்திருக்கிறது போலீஸ். கைதிகளின் உடம்பில் குண்டு பாய்ந்த தடங்கள் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் எலும்புகள் உடைந்தும், காயம் மற்றும் தழும்புகளும் இருந்துள்ளன. அவர்கள் சிறைச்சாலையில் இருந்தபோது துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கான அடையாளங்கள்தான் அவை. பாதுகாப்புக்குச் சென்ற 17 போலீஸார் மீதும் மேலும் இதில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிய வேண்டும். ஹைதராபாத் உயர் நீதிமன்றத்திலும் போலீஸாருக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளோம்’’ என்றார் உறுதியாக.

தேசிய மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தில் மாநில அரசையும், போலீஸையும் கடுமையாகக் கண்டித்து காலம் தாழ்த்தாமல் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை கலக்கம் அடைய வைத்திருக்கிறது.

தெலங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்பினர் அனைவரும் ஒன்று திரண்டு மாநில முதல்வரை சந்தித்து கைதிகளின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மனு கொடுத்துள்ளனர். ‘‘மாநில அரசு இறந்த கைதிகளின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இஸ்லாத்தை இரண்டாம் தர வர்க்கமாகத் திரிக்கப் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இனி இப்படி ஒரு நிகழ்வு நடப்பதை அனுமதிக்கவும் மாட்டோம்’’ என்று பொங்கி எழுந்தார் ஜமாத் இ இஸ்லாம் அமைப்பின் பொதுச் செயலாளர் நஸ்ரத் அலி.

ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஒவேய்சி, ‘‘கைதிகள் தப்பிக்க நினைத்தார்கள் என்று போலீஸ் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். ரஜினிகாந்த் படத்தில் மட்டும்தான் இதுபோன்ற என்கவுன்டர்கள் நடைபெறும். நிஜத்தில் நடக்காது என்று முதல்வரிடம் சொன்னேன். உடனடியாக அவர் இதில் தலையிட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது சி.பி.ஐ மூலம் வழக்கை விசாரிக்க ஆவன செய்வதாகச் சொன்னார்’’ என்றார்.

மனித உரிமைகள் நாளுக்கு நாள் மழுங்கிக் கொண்டே போகிறது!

- நா.இள.அறவாழி