Published:Updated:

‘‘போலீஸுக்கு லஞ்சம் தராதது தான் நான் செய்த ஒரே தவறு!”

மீண்டும் டாக்டர் பிரகாஷ்!

ணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசப் படங்கள் என்பவை இன்றைக்கு சர்வ சாதாரணம். ஆனால், தமிழகத்தில் இ்ன்டர்நெட் என்பதே பெரிய அளவில் அறியப்படாத நேரத்தில், ‘ஆபாசப்படம்’ எடுத்து அதை நெட்டில் வெளியிட்ட குற்றத்துக்காக, ‘சைபர் கிரைம்’ பிரிவில் கைதானார் டாக்டர் பிரகாஷ். அந்த வழக்கோடு, துப்பாக்கி திருடிய வழக்கு, போதை மருந்து வழக்கு, விபசார வழக்கு என்று 8 வழக்குகள் அவர் மீது அணிவகுத்தன. இப்போது அவற்றில் இருந்து விடுதலையாகி வெளியில் வந்துள்ள டாக்டர் பிரகாஷைச் சந்தித்தோம். 

‘‘13 வருட சிறைவாசத்துக்குப் பின், விடுதலை பெற்றுள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘சிறை வாழ்க்கையில், நான் கற்றுக்கொண்ட விஷயங்களில் முக்கியமானது, உணர்வுகளை நாம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது. அதனால், இப்போது வெளியில் வந்துள்ளதில் ஒன்றும் எனக்குப் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. சந்தோஷம், துக்கம் என்பதெல்லாம் உணர்வுகளின் வெவ்வேறு நிலைதானே! மகிழ்ச்சியைக் கூச்சல்போட்டுக் கொண்டாடிக் களிக்கவும் தேவையில்லை. துக்கத்தில் முடங்கிப் போகவும் தேவை இல்லை.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘போலீஸ் மீது கோபம், வருத்தம் உள்ளதா?’’

‘‘போலீஸ் மீது அளவுகடந்த கோபம் உள்ளது. அவர்கள் என் மேல் போட்டது எல்லாம் பொய் வழக்குகள். அதனால்தான் நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. பொய்வழக்கு என்ற அநீதிக்கு ஒரு முடிவு கட்டினால் மட்டும்தான் காவல் துறையை சீரமைக்க முடியும்.’’

‘‘போலீஸுக்கு லஞ்சம் தராதது தான் நான் செய்த ஒரே தவறு!”

‘‘செக்ஸ் டாக்டர் பிரகாஷ் என்ற பெயரை எப்படி அழிக்கப்போகிறீர்கள்?’’

‘‘சிறையில் இருந்து சனிக்கிழமை மாலை வெளியில் வந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே என்னிடம் சிசிக்சைக்கு ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் வர ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் என்னை ஒரு கடவுளைப்போல பார்க்கின்றனர். நானும் அவர்களை என் குழந்தைகளாக ஒரு தந்தையின் மனநிலையில் இருந்துதான் பார்க்கிறேன்.’’

‘‘சிறைக்குள் மருத்துவம் பார்த்தீர்களா?’’

‘‘முதல் மாதம் யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை. அதன் பிறகு, ஒரு நாளைக்கு 5 முதல் 10 நோயாளிகள் வருவார்கள். ஒரு வருடத்துக்கு 2,000 முதல் 2,500 பேருக்கு சிறைக்குள் சிகிச்சை அளித்தேன். அங்கிருக்கும் குறைந்தபட்ச வசதிகளை வைத்து, வெறும் மேஜைகளில் வைத்து 300 ஆபரேஷன்கள் செய்தேன். அவை அனைத்தும் சக்ஸஸ். ஒரு முறை, புழல் சிறை ஜெயிலரின் 6 வயது மகனுக்கு அடிபட்டு காது கிழிந்துவிட்டது. இரவு 7 மணிக்கு என்னிடம் வந்து,  ‘ஒரு எமர்ஜென்சி கேஸ் சார்’ என்று அழைத்தனர். நான் போய்ப் பார்த்தபோது, அவனை சாதாரண மேஜையில் படுக்க வைத்திருந்தனர். மேஜை முழுவதும் ரத்தம். அந்த நேரத்தில் சிறைக்குள் கண் ஆபரேஷன் நடந்துகொண்டிருந்தது. அந்த ஆபரேஷனுக்கு தலைமுடியைவிட 10 மடங்கு மெல்லிய நூலைப் பயன்படுத்துவார்கள். அந்த நூலைப் பயன்படுத்தி, அங்கிருந்த வசதிகளை வைத்து, 32 தையல் போட்டேன். அது காய்ந்த பிறகு, செக்கப்புக்காக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு அதைப் பார்த்த டாக்டர்கள், எந்த மருத்துவமனையில், எந்த பிளாஸ்டிக் சர்ஜன் இதைச் செய்தார் என்று கேட்டு ஆச்சர்யப்பட்டுள்ளனர். அதில் தழும்பே கிடையாது.

சிறை ஊழியர் குடியிருப்பில் இருந்து, மாதத்துக்கு நான்கு பையன்கள் கை காலை உடைத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு எல்லாம் மயக்க மருந்து இல்லாமல், எக்ஸ்ரே இல்லாமல், பார்வையிலேயே அறிந்துகொண்டு, மாவுக்கட்டு போடுவேன். காயம் சரியாகிவிடும். அதுவே ஒரு கட்டத்தில் எனக்கு மிகப் பெரிய தொந்தரவாக மாறியது. ஓவியம் வரைய, புத்தகம் எழுத, படிக்க நேரமில்லாமல் போனது. சனி, ஞாயிறு கிழமைகளில் 11.30 முதல் 3 மணிவரையிலும் மற்ற நாள்களில் 5 முதல் 5.30 வரையிலும் மட்டும் மருத்துவம் பார்ப்பதாக முடிவு செய்தேன்.’’

‘‘உங்கள் மருத்துவப் பதிவை, மாநில மருத்துவ கவுன்சில் ரத்து செய்துவிட்டதே? இனிமேல் நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்களா?’’

‘‘தவறான செய்தி அது. நான் மருத்துவப்படிப்பில் இந்திய அளவில் 6-வது இடத்தில் வந்ததால், 1991-ம் ஆண்டே அனைத்திந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து ‘வாழ்நாள்’ பதிவு பெற்றுள்ளேன். நான் சாகும்வரை அது செல்லும்.  மத்திய அரசின் அந்தப் பதிவைப் பெற்றுவிட்டால், மாநில மருத்துவ கவுன்சிலிடம் பதிவு செய்யத் தேவையில்லை. அதனால், இதுவரை தமிழ்நாட்டில் பதிவு செய்யவே இல்லை. நான் செய்யாத பதிவை எப்படி ரத்து செய்ய முடியும்.?’’

‘‘போலீஸுக்கு லஞ்சம் தராதது தான் நான் செய்த ஒரே தவறு!”

‘‘போலீஸ் என்னென்ன தகவல்களை உங்களைப் பற்றி தவறாகப் பரப்பியது என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘கணேஷ், ஆஷா, சித்ரா என்பவர்கள் எல்லாம் என்னுடைய மருத்துவமனையில் வேலை பார்த்தவர்கள் இல்லை. கணேஷ் என்பவனை நான் பார்த்ததே கிடையாது. புதுச்சேரியில் இருந்த அவனைப் பிடித்து, எனக்கு எதிராகப் புகார் வாங்கி வழக்குப் பதிவு செய்தனர். சிகிச்சைக்கு வந்த எந்தப் பெண்ணிடமும் நான் தவறாக நடந்து கொண்டது இல்லை. நடந்த சம்பவங்களுக்கும் என்னுடைய மருத்துவமனைக்கும் மருத்துவத் தொழிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால்தான் என்னிடம் சிகிச்சை பெற்ற ஒருவர்கூட எனக்கு எதிராக ஒரு புகார்கூட கொடுக்கவில்லை.’’

‘‘நீங்கள் தவறே செய்யாதவர்போல் பேசுகிறீர்களே?’’

‘‘நான் செய்தது எதுவும் தவறே இல்லை என்று இப்போதும் சொல்கிறேன். நான் செய்த ஒரே தவறு, ‘நான்தான் இந்த உலகத்தில் பெரியவன்’ என்ற எண்ணம் எனக்கு எப்போதும் ஜாஸ்தி. அதுதான் என்னை இந்த நிலைக்குக் கொண்டுவந்தது. ஆனால், இப்போதும் அந்த குணம் மாறவில்லை. மாறமாட்டேன் என்கிறது. பாலக்காட்டு ஐயர் குடும்பம் எங்களுடையது.  படிப்பில் எப்போதும் மெரிட்தான். ஏனென்றால், நான் மெரிட் வாங்கவில்லை என்றால், என் அம்மா அழுவார். ஹைஸ்கூலில் ஆல் இந்தியா ரேங்க் வாங்கினேன். ஆல் ஸ்டேட் மெடிக்கல் என்ட்ரன்ஸ் தேர்வில் 6-வது இடம் வந்தேன். மெடிக்கல் காலேஜ் படித்த காலத்தில் மெடல்கள் வாங்கினேன். எம்.எஸ். முதல் தடவையே முடித்தேன். வெற்றிகரமான ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட் ஆனேன். இப்படி போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் அசிஸ்டென்ட் போலீஸ்  கமிஷனர் ஒருவர் என்னிடம் வந்து, ‘இணையதளத்தில் நிர்வாணமாக மூன்று பெண்கள் படம் இருக்கிறது. அதை எடுத்தது நீதான். 5 லட்சம் கொடுத்தால், இந்த விவகாரத்தில் இருந்து உன்னைக் கழற்றிவிடுகிறேன்’ என்றார். அவரிடம் பேரம் பேசி ஒரு லட்சம் கொடுத்திருந்தால்கூட இந்த வழக்கில் நான் சிக்கியிருக்கமாட்டேன். அதை விட்டுவிட்டு, ‘லஞ்சம் என்றால் என்ன தெரியுமா? ரூல் தெரியுமா’ என்று சண்டைபோட்டேன். உடனே, பொய் வழக்குப் போட்டார்.  அதுதான் இத்தனை ஆண்டுகள் என்னை சிறைக்குள் தள்ளியது.’’

‘‘உங்கள் மனைவி உங்களைத் தொடர்புகொண்டு பேசினாரா?’’

‘‘நான் சிறைக்குப் போனதும் என் குழந்தையை தூக்கிக்கொண்டு போன என் மனைவி அதன் பிறகு என்னைத் தொடர்புகொள்ளவில்லை. என்னால், அவருக்கு எந்த கஷ்டமும் இனி வேண்டாம் என்று நானும் விட்டுவிட்டேன்.’’

‘‘புத்தகங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் என்று படைப்புகளில் தீவிர கவனம் செலுத்தக் காரணம் என்ன?’’

‘‘நான் கைதாகும்போது எனக்கு வயது 42. நீச்சல் குளம் வைத்து வீடு கட்டினேன். அப்படி சொகுசாக வாழ்ந்த என்னை திடீரென ஒருநாள், நான் உடுத்தியிருந்த ஆடையைக்கூட உருவிக்கொண்டு, என்னுடைய கழிப்பறையைவிட சிறிய அறையில் போட்டு அடைத்தனர்.

சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் வீணாக்கக் கூடாது என்று முடிவு செய்தேன். அதற்காக ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டேன். 131 புத்தகங்கள் எழுதினேன். அதில் இதிகாசங்கள், புராணங்கள், க்ரைம் நாவல்கள், சித்திரக் கதைகள் எல்லாம் அடக்கம். ஓவியம் வரைந்தேன். சிற்பங்கள் செய்தேன். மருத்துவத் துறை தொடர்பான 18 புதிய பொருள்களைக் கண்டுபிடித்து அதற்கு உரிமம் பெற்றேன். சிறைக்குள் ‘லாரா ஹேண்டிகிராப்ட்’ என்ற பெயரில் கைவினைப் பொருள் நிறுவனம் ஒன்றை நடத்தினேன்.’’

‘‘இனி எப்படி வாழப்போகிறீர்கள்?’’

‘‘எந்த வேலையில் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறதோ அதை செய்யவேண்டும். வேலை செய்து, சம்பளம் வாங்கி, அதில் சந்தோஷமாக இருப்போம் என்று நினைத்தால் அவன் வாழ்க்கையில் முன்னேற மாட்டான். அதுதான் சின்ன வயதில் இருந்து என்னுடைய பாலிஸி. என்னுடைய மனசாட்சியை மதிக்கிறேன்; நீதியைவிட... என் தன்னம்பிக்கையை மதிக்கிறேன்; இந்த சமூகத்தைவிட!’’

- ஜோ.ஸ்டாலின்
படம்: ஜெ.வேங்கடராஜ்