திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா செட்டியபட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் என்பவரிடம் வீட்டுச் செலவுக்காக ஓராண்டுக்கு முன்பு 50 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கடனாக வாங்கியிருக்கிறார். வாங்கிய கடனில் 20 ஆயிரத்தைத் திருப்பிக் கொடுத்த ராமலிங்கம், மீதிப் பணத்தை நீண்ட நாள்களாகியும் தராமல் இழுத்தடித்திருக்கிறார். இதனால் ராமலிங்கத்துக்கும் - வெள்ளையம்மாவுக்கும் இடையே சில மாதங்களுக்கு முன்பு தகராறு நடக்க, விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறது. `இன்னும் சில மாதங்களில் கடனைக் கொடுத்துவிடுகிறேன்’ என ராமலிங்கம் ஸ்டேஷனில் எழுதிக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில், மார்ச் 13-ம் தேதி வெள்ளையம்மாள் வீடு வழியாக ராமலிங்கத்தின் மகன் கிருஷ்ணன் டிவிஎஸ் எக்ஸல் பைக்கில் பால் ஊற்றச் சென்றிருக்கிறார். அப்போது வெள்ளையம்மாளும், அவருடைய ஆண் நண்பரான பச்சமுத்து என்பவரும், `உங்க அப்பன் வாங்குன கடனைக் கொடுத்துட்டு பைக்கை வாங்கிட்டுப் போங்க!’ என கிருஷ்ணன் ஓட்டிவந்த எக்ஸல் பைக்கையும், பால் கேனையும் வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பியுள்ளனர். பைக்கைக் கொடுக்கச் சொல்லி பலமுறை வெள்ளையம்மாளிடம் ராமலிங்கம் பேசியும் எதுவும் நடக்கவில்லை.
அதையடுத்து மார்ச் 21-ம் தேதி ராமலிங்கம், அவருடைய மனைவி கல்யாணி, கிருஷ்ணன் மூவரும் வெள்ளையம்மாள் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ‘வாங்குன பணத்தைக் கொடுக்க முடியலை. பைக்கை கேக்க வந்துட்டியா!’ என வெள்ளையம்மாளும், பச்சமுத்துவும் வார்த்தையைவிட பிரச்னையாகியிருக்கிறது. இரு தரப்புக்கும் கைகலப்பு உண்டாகும் நிலை உருவாக, கோபமடைந்த பச்சமுத்து திடீரென அரிவாளை எடுத்து ராமலிங்கத்தை வெட்டுவதற்குப் பாய்ந்துள்ளார். அப்போது அப்பாவைக் காப்பாற்ற கிருஷ்ணன் குறுக்கே வர, எதிர்பாராத விதமாக கிருஷ்ணன் தலையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதில் அலறியபடி ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு முதலுதவி கொடுத்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தலையில் விழுந்த அரிவாள் வெட்டு மூளை வரை இறங்கியதால், கிருஷ்ணன் கண் விழிக்காமல் கடந்த 15 நாள்களாக தீவிர சிகிச்சையில் இருந்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்த துவரங்குறிச்சி போலீஸார், ஏற்கெனவே பச்சமுத்துவைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது பச்சையம்மாளும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறில் 10-ம் வகுப்பு படித்துவந்த மாணவன் கிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அவரின் குடும்பத்தாரையும், செட்டியபட்டி கிராமத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.