Published:Updated:

``அப்துல் சுபான் குரேஷி... இந்தியாவின் பின்லேடன் டெல்லி போலீஸிடம் பிடிபட்ட கதை!”

``அப்துல் சுபான் குரேஷி... இந்தியாவின் பின்லேடன் டெல்லி போலீஸிடம் பிடிபட்ட கதை!”
``அப்துல் சுபான் குரேஷி... இந்தியாவின் பின்லேடன் டெல்லி போலீஸிடம் பிடிபட்ட கதை!”

ந்தியத் தலைநகர் டெல்லியில் தீவிரவாதி அப்துல் சுபான் குரேஷி  கைது... இந்த ஒற்றை வரிச் செய்திதான், தலைப்புச் செய்தியாக காட்சி ஊடகங்களில் நகர்ந்துகொண்டிருக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2008, ஜூலை 26-ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் வடு இன்னும் மறையவில்லை. அப்துல் சுபான் குரேஷி என்ற பெயரும் 'இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத அமைப்பின் பெயரும் இந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் வெளியில் தெரியவந்தது. குடியரசு தின விழாவுக்கு இரண்டு நாள்களே உள்ள நிலையில், அப்துல் சுபான் குரேஷி, பிடிபட்டது, முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், சூரத் போன்ற நகரங்களில் அடுத்தடுத்து 20 இடங்களில் குண்டுகள் வெடிக்க, அதில் சிக்கி 56 பேர் உயிரிழந்தனர். 65 பேர்  காயமடைந்தனர். 'குண்டு வெடிப்புக்குக் காரணம் நாங்கள்தான்' என்று இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. 

'இந்தக் கொடூரத் தாக்குதலின் மூளையாக இருந்து செயல்பட்டது, அப்துல் சுபான் குரேஷி' என்று இந்தியாவின் 'தேசியப் புலனாய்வு முகமை' - என்.ஐ.ஏ  கண்டுபிடித்து அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் துணை நிறுவனர் அப்துல் சுபான் குரேஷிதான் என்றும் என்.ஐ.ஏ. உறுதிப்படுத்தியது. குண்டுவெடிப்புக்குப் பின், தீவிரவாதக் குழுக்கள் மீதான கவனத்தை என்.ஐ.ஏ. அதிகப்படுத்தியது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக, 'சிமி' போன்ற தீவிரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதேவேளையில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அப்துல் சுபான் குரேஷி, போலி ஆவணங்கள் மூலம் நேபாளம், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தங்கி, அங்கு வசிக்க ஆரம்பித்தார். அப்துல் சுபான் குரேஷியின் கூட்டாளிகளின் நடவடிக்கைகளை வைத்து அவரைப் பிடிக்கும் முயற்சிகளில் என்.ஐ.ஏ. தீவிரமாக ஈடுபட்டிருந்தது. உளவுத்துறையினரும், பிரத்யேக சிறப்புப்படை போலீஸாரும் இன்னொருபுறம் அவரைக் கண்காணித்து வந்தனர். இந்நிலையில்தான் டெல்லியை அடுத்த காஜிப்பூரில் வசிக்கும் தன் கூட்டாளியைப் பார்க்க அப்துல் சுபான் குரேஷி வருவதாக சிறப்புக் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினர். உளவுத்தகவல் உறுதியாக இருந்ததால், காஜிப்பூருக்கு வந்தபோது அப்துல் சுபான் குரேஷி போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். பிடிபடுவதற்கு முன்னதாக சிறிது நேரம் போலீஸாருக்கும், குரேஷிக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகப் போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்ததும், அவரைப் போலீஸார் பிடித்துள்ளனர். 

அப்துல் சுபான் குரேஷி பிடிபட்டது குறித்து, டெல்லி போலீஸ் வட்டாரத்தில் கூறும்போது, "இந்தியாவின் பின்லேடன் என்று வர்ணிக்கப்பட்டவர் அப்துல் கபான் குரேஷி. அவரை அடையாளம் கண்டறிந்த பின்னரும் 10 ஆண்டுகளாக அவரை விரட்டத்தான் முடிந்தது. இப்போதுதான் உயிரோடு பிடிக்க முடிந்திருக்கிறது. பல சந்தர்ப்பங்களில் அவரின் 'பிரத்யேக உளவாளி'-களின் தகவலைப் பெற்று, எங்களிடம் சிக்காமல் ஒவ்வொரு முறையும் தப்பித்து வந்தார். அப்துல் சுபான் குரேஷியின் தந்தை, 'என் மகன்,  தீவிரவாதச் செயல்கள் எதிலும் ஈடுபட்டது இல்லை; என் மகன் குறித்து விசாரணை அதிகாரிகள் விரும்புவதைச் சொல்லட்டும்' என்று ஊடகங்களிடம் சொல்லி வருகிறார்.குரேஷி, தௌகீர் என மாற்றுப் பெயர்களை வைத்துக்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாகத் தலைமறைவாகச் சுற்றினார். இப்போதுதான் எங்களிடம் சிக்கியிருக்கிறார். சொந்தமாக வெடிகுண்டுகள் செய்யத் தெரிந்தவர். பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஐ.டி. நிறுவனங்களில் வேலை பார்த்தவர். 1998-ம் ஆண்டு, 'சிமி' இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். 'சிமி'-க்கு தடை விதிக்கப்பட்டதும், தனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, 'இந்தியன் முஜாகிதீன்'  என்ற பெயரில் இந்தியாவில் தீவிரவாத அமைப்பை தனியாக நிறுவ முயன்றார். ஆனால், அது முறியடிக்கப்பட்டது. கணினிகளைக் கையாள்வதிலும், வெடிகுண்டுகள் தயாரிப்பதிலும் திறன் படைத்த குரேஷி, 'நவீனத்தின் காதலன்' என்று கூட்டாளிகளால் வர்ணிக்கப்படுகிறவர். அவர் வைத்த குண்டுகள், பலரின் வாழ்க்கையைப் பறித்திருக்கிறது. மும்பை ரயில்களில் 2006-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழப்பதற்கு குரேஷியே காரணம். அதேபோல் 2010-ம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழக்கவும் இவரே காரணம். மும்பையைச் சேர்ந்த அப்துல் சுபான் குரேஷி, தயாரித்துக் கொடுத்த குண்டுகள்தான், கடந்த 15 ஆண்டுகளாக பல இடங்களில் பலரின் உயிரைக் குடிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குரேஷியை அப்பாவிபோல் சித்தரிக்க மேற்கொள்ளும் உறவினர்களின் முயற்சி சரியல்ல... இத்தனை ஆண்டுகள் தலைமறைவாக ஓடிக் கொண்டிருந்த குரேஷி, கடந்த சனிக்கிழமை எங்களிடம் சிக்கும்போதுகூட நவீனரக துப்பாக்கியின் மூலமே எங்களை எதிர்கொண்டார் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்" என்றனர். அடுத்தடுத்த நாட்களில் இதன் தொடர்ச்சியாக  பல விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.