Published:Updated:

சரணடைந்த ஆந்திர வியாபாரிகள்... மீட்கப்பட்ட நகைகள்..! வேட்டையாடு, விளையாடு! பகுதி -18

சரணடைந்த ஆந்திர வியாபாரிகள்... மீட்கப்பட்ட நகைகள்..! வேட்டையாடு, விளையாடு! பகுதி -18
சரணடைந்த ஆந்திர வியாபாரிகள்... மீட்கப்பட்ட நகைகள்..! வேட்டையாடு, விளையாடு! பகுதி -18

சரணடைந்த ஆந்திர வியாபாரிகள்... மீட்கப்பட்ட நகைகள்..! வேட்டையாடு, விளையாடு! பகுதி -18


                        

ன்ஸ்பெக்டர்  நவீன் சார் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்திலிருந்து... 'போதும் சார், நிறுத்துங்க. நீங்கள் பத்துபேர் கூட இல்லை. நாங்கள் ஆயிரம் பேருக்கு மேல் இங்கே கூடியிருக்கிறோம். பொழுது நன்றாக விடிந்து விட்டால் இதுவே லட்சம் ஆகிவிடும். வியாபாரிகளிடம் வாலாட்டிய  போலீஸின் நிலைமை என்ன ஆனது என்று இங்கிருக்கும் ஆந்திர போலீஸைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்' என்று ஒருவர் குரல் கொடுத்தார். அந்தக் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாகக் கூட்டத்தின் முக்கால் பங்கு ஓஓஓ வென கத்தி ஆர்ப்பரித்தது.'நாங்கள் இதற்குமேல் உங்களிடம் போராட விரும்பவில்லை, நகைகளை வாங்கிப் போகத்தான் இங்கு வந்தோம். ஏதோ கலவரம் போல இந்தச் சூழலை நீங்கள் மாற்ற நினைப்பது தெரிகிறது. நாங்கள் பத்துப் பேர்தான், நீங்கள் ஆயிரம் பேர் வந்திருக்கிறீர்கள். உங்களால் எதையும் செய்யமுடியும். கொள்ளையடித்த நகைகளை யாருக்கு விற்றோம் என்று மட்டுமல்ல, யார் சொல்லி கொள்ளையடித்தோம் என்று ஆந்திரா கோர்ட்டில் சாட்சி சொல்ல அக்யூஸ்ட்டுகள் ரெடியாக இருக்கிறார்கள்.

நீதிமன்றத்துக்கு உன் மாநிலம், என் மாநிலம் என்ற பாகுபாடு கிடையாது, கோர்ட்  இதற்கு முடிவைச் சொல்லும்.' என்றபடி கூட்டத்தை விலக்கிக் கொண்டு ஜீப்பை நோக்கி இன்ஸ்பெக்டர் நடக்க ஆரம்பித்து விட்டார், நாங்களும் அவர் பின்னாலேயே போனோம்.  இன்ஸ்பெக்டரின்  புத்திசாலித்தனமான இந்த வார்த்தை அங்கிருந்தவர்களை யோசிக்க வைத்து விட்டது. கூட்டத்தில் குரல்கொடுத்த ஆசாமியை அவர்களே எச்சரித்து விட்டு 'சார், சார், நில்லுங்க சார், நில்லுங்க' என்று கத்தியபடி எங்கள் பின்னால் ஓட்டமும், நடையுமாக வரத் தொடங்கினர். அவர்கள் வருகிற வேகம், எங்கள் வேலையை விரைவாக முடிக்கத்தான் என்று நாங்கள் உணர்ந்திருந்தோம், ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சொல்லப் போனால் யாரையும் நாங்கள் கண்டுகொள்ளவே இல்லை.

அப்போதே, அவர்களைப் பார்த்து, 'என்ன?' வென்று கேட்டிருந்தால் கிடைக்கப் போகும் நகைகளில் சில சவரன்கள் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் திரும்பிப் பார்க்காமல் வேகமாக நடந்ததால் ஜீப் இருக்கும் இடத்திற்கு விரைவில் வந்து விட்டோம். ஜீப்பில் பாய்ந்து ஏறிய இன்ஸ்பெக்டர் நவீன் சார், புழுதியை வாரி விட்டபடி ஜீப்பை எடுத்தார். நவீன் சார் ஜீப் ஓட்டியதை அப்போதுதான் நாங்களே பார்த்தோம். அனாயசமாக ஒரு வட்டம் அடித்து ஜீப் திரும்பி நின்றது. எங்கள் பின்னால் வேகமாக வந்தவர்கள், ஜீப் நகராத அளவுக்கு ஜீப்பை மறித்தபடி சுற்றிலும் நின்று விட்டனர். இந்த மறிப்பில் கோபம் இல்லை. ஒரு கெஞ்சல் இருந்தது. அதை அவர்களின் கண்களே காட்டிக் கொடுத்தது. நாங்கள் தேடிப் போன நகையை வாங்கிய வியாபாரியும், அந்தக் கும்பலில் நின்றிருந்தார். இந்தக் கூட்டத்தோடு கூட்டமாக அவரும்  வேகமாக நடந்து வந்திருக்கக் கூடும்.

எங்களைப் பார்த்துக் கும்பிட்டபடி வந்த அவர், ' எங்கள் மரியாதையைக் காப்பாற்றத்தான் நீங்கள் ஜீப்பை இங்கேயே நிறுத்தி விட்டு யூனிபார்மில் வராமல் 'மப்டி' யில்  என் வீட்டுக்கு வந்து இருக்கிறீர்கள். நான் உங்களை அனுமதித்து இருந்தால் வந்த விஷயத்தை என்னிடம் பேசிவிட்டு யாருக்கும் தெரியாமல் போயிருப்பீர்கள். எனக்கும் மரியாதை இருந்திருக்கும். நாங்களாகத்தான் இதை கெடுத்துக் கொண்டோம். தயவு செய்து நடந்ததை மறந்து விட்டு எங்களோடு வாங்க சார்.  நகைகளை உங்களிடம் ஒப்படைத்து விடுகிறோம். மற்ற வியாபாரிகள் வாங்கிய நகை லிஸ்ட்டையும்  கொடுங்கள், நீங்கள் எங்கும் திரிய வேண்டாம். அரைமணி நேரத்தில் மொத்த நகைகளையும் உங்கள் கையில் கொடுத்து விடுகிறோம். 'ரிசீவர்'  என்ற முறையில் எங்களை மட்டும் வழக்கில் சேர்த்து விடாதீர்கள்' என்று கும்பிட்டார். அப்போது எஸ்.ஐ. ராஜ்குமார், 'கேட்க நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் எதை வைத்து உங்கள் வார்த்தையை நாங்கள் நம்புவது?' என்று கேட்டார். இது மாதிரியான தருணங்களில் இன்ஸ்பெக்டர் கண்பார்வை யாரை நோக்கித் திரும்புகிறதோ அவர் திடீரெனக் குறுக்கிடுவார், பேசுவார், மிரட்டுவார் எல்லாம் நடக்கும். கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ்.ஐ. என்று பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும். 

டி.சி. விசாரிக்கும் போது, ஏ.சி.யும், ஏ.சி. விசாரிக்கும் போது இன்ஸ்பெக்டரும் இப்படி பயன்படுத்தப் படுவது நடைமுறையில் இருப்பதுதான். மொத்தத்தில் வழக்கு விசாரணைக்காக வெளியூர் செல்லும் தனிப்படைப் போலீஸில், இந்த டீம் வொர்க்தான் வழக்கை விரைந்து முடிக்க உதவும். அதைத்தான் அன்று ராஜ்குமார் சார் செய்தார். எஸ்.ஐ.ராஜ்குமாரின் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று புரியாமல் ஒரு நிமிடம் அங்கே அமைதி நிலவியது. 'சார், நம்ம  டீமை கிண்டல் பண்ணிப் பார்க்கிறார்கள், இங்கிருந்து கிளம்பிடுவோம். நகைகளை கோர்ட்டில் வைத்து வாங்கிக் கொள்ளலாம்' என்று இன்னொரு எஸ்.ஐ. பால்ராஜ் அதிரடிகாட்ட, மொத்தக் கூட்டத்தின் முகமும் இறுக்கமானது.

 'சார், இருங்க, இருங்க... அவசரப்படாதீங்க...' என்றபடி நகை வியாபாரிகள் சங்கத்தலைவர், இன்ஸ்பெக்டர் அருகில் வந்தார். ஜீப்பிலேயே உட்கார்ந்திருந்த நவீன் சார், எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை, எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். சில நிமிடங்களுக்கு அங்கே அமைதி மட்டுமே நிலவியது. ஜீப் எஞ்சினை அணைக்காமல், டுபு டுபு சத்தம் மட்டும் அந்த அமைதியைக் கிழித்தபடி இருந்தது. பத்து நிமிடங்கள் இப்படியே கழிந்தது.

அப்போது இரண்டு பேர், நகை வியாபாரியின் பக்கத்தில் வந்து எதையோ சொன்னார்கள். அதைக் கேட்டதும், நகை வியாபாரியின் கண்களில் மகிழ்ச்சி மின்னியது. 'சார், நகைகளை வாங்கிய அத்தனை பேரும் வந்து விட்டார்கள் சார், நீங்கள் லிஸ்ட்டைக் கொடுங்கள். இப்போதே நகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்' என்றார். இன்ஸ்பெக்டரின் கண்கள் ஏட்டுகள் கோபால், கன்னையன், ஆகியோர்மீது பட்டது. அவர்கள் நகை வியாபாரியிடம் திருடு போன நகைகளின் லிஸ்ட்டைக் காட்டினார்கள். அடுத்த பத்துநிமிடத்தில் நகைகளைச் சரிபார்த்து முடிக்கும் வேலை முடிவுக்கு வந்தது. ஒரு சூட்கேஸில் வைத்து இன்ஸ்பெக்டரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டது.

வெள்ளிப்பாத்திரங்களை ஒரு பெரிய காட்டன் போர்வையில் வைத்து துணிமூட்டை போல் கொடுத்தனர். அரைமணி நேர இடைவெளிக்குப் பின், நவீன் சார் அப்போதுதான் பேசினார். 'ராஜ்குமார், நகைகளை உங்க பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள். ஜீப், பாக்ஸில் வைத்துப் பூட்டுப் போடுங்கள். லோகநாதன், பரீன், ரமேஷ் நீங்களும் கவனமாக இருங்கள்... நாம் கிளம்பலாம்' என்றார். ஜீப்பை அங்கிருந்து அதேவேகத்துடன் திருப்பினார். நகையை ஒப்படைத்த வியாபாரிகள், இன்ஸ்பெக்டர் நன்றி தெரிவிப்பார் என்று அவரையே கும்பிட்டபடி பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களை இன்ஸ்பெக்டர் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஜீப், அங்கிருந்து கிளம்பியதும்  'திருட்டுப் பசங்களுக்கு நாலாயிரம் பேர் துணை நின்றால், ஊருக்கு ஆயிரம் முண்டேல் பாஜூ இருக்கத்தான் செய்வான்... நகை வியாபாரிகளை அந்த மணல்கோட்டை ஏரியாவில் வைத்து நான்கு நாள்கள்  நம் கஸ்டடியில் வைக்க வேண்டும் போலிருக்கிறது' என்று நவீன் சார் கோபத்தில் கத்திவிட்டார். பிரதான சாலைக்கு ஜீப் வந்ததும், வேகத்தைக் குறைத்த இன்ஸ்பெக்டர், பேஜரைக் கையில் எடுத்துக்கொண்டார். உயரதிகாரிகளுக்குத் தகவலை அனுப்பினார்.

பின்னர்,  'ராஜ்குமார், ரொம்ப மகிழ்ச்சியா இருக்குய்யா...  நீங்கள் அனைவரும் இன்று நிம்மதியாக தூங்குங்கள். அக்யூஸ்ட்டுகள் பற்றிக் கவலை வேண்டாம். இன்றிரவு அனைத்தையும்  நான் பார்த்துக் கொள்கிறேன். ஆந்திர அரசு வழக்கறிஞரிடம், டி.ஐ.ஜி. சுரேந்திரபாபு சார், கொஞ்ச நேரத்தில் பேசிவிடுவார்.  ஜே.சி. சைலேந்தர் சாருக்கும், டி.சி. மௌர்யா சாருக்கும், நம்ம ஏ.சி.விட்டல்ராமன்  சாருக்கும் தகவலை அனுப்பிவிட்டேன். நமக்கு உத்தரவு கிடைத்ததும், தோட்டா கிருஷ்ணமூர்த்தியை ஆந்திர போலீஸில் கொடுத்து விடலாம். நமக்கு முண்டேல்பாஜூ, மாரேடிபூடி நாகபூஷணம் ஆகிய இரண்டுபேர் மட்டும் போதும்.

காலை டிபன் கூட யாரும் சாப்பிடவில்லை. யார், யாருக்கு என்ன உணவு வேணுமோ, வாங்கிக் கொடுத்து விடுங்கள். இப்போதாவது நன்றாக சாப்பிடட்டும்... எனக்கு இரண்டு இட்லி வடை மட்டும் போதும்.' என்றார், நவீன் சார். ஜீப்பும் மணல் கோட்டைப் பகுதிக்கு வந்துவிட்டது. எஸ்.ஐ.ராஜ்குமார் சாருடன், எங்கள் டீம் போலீஸார் இரண்டு பேர் ஏறிக்கொள்ள ஜீப் ஹோட்டலை நோக்கிப் பறந்தது. இன்ஸ்பெக்டருடன் பேசிக்கொண்டே விசாரணைப் பகுதிக்குள் நுழைந்தோம். அக்யூஸ்ட்டுகள் தூங்கிக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்த ஸ்பெஷல் டீம் போலீஸார் நிலைமை பாவமாக இருந்தது. எங்களைப் பார்த்த பிறகுதான் அவர்கள் முகத்தில் மலர்ச்சி வந்தது. ...அறைக்குள் நுழைந்ததுமே நவீன்சார், அக்யூஸ்ட்டுகளிடம் விசாரணையை ஆரம்பித்து விட்டார். இன்ஸ்பெக்டர் கொஞ்சம் ஓய்வெடுத்தால் நாங்களும் ஓய்வெடுக்கலாம், அவரே சலிக்காமல் இப்படி நடந்துகொண்டால் நாங்கள் எங்கிருந்து ஓய்வெடுப்பது?... நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தோம்.'ரெஸ்ட் எடுத்தது போதும் எழுந்திருங்க, வியாபாரிகள் நகைகளைக் கொடுக்கவில்லை, உங்களை யாரென்றே தெரியாது என்று சொல்லி விட்டார்கள். அதுபற்றிப் பிறகு பேசிக்கொள்ளலாம்... சரி, சொல்லுங்க, கொள்ளையடிக்க வெள்ளிக்கிழமை நாளை மட்டும் ஏன் தேர்வு செய்தீர்கள்' என்றதும் முண்டேல்பாஜூ சொல்ல ஆரம்பித்தான்....

அடுத்த கட்டுரைக்கு