Published:Updated:

``ஒரு கதை சொல்லட்டா சார்?” - ரவுடியின் சோக பக்கங்கள்... வேட்டையாடு விளையாடு! பகுதி - 22

``ஒரு கதை சொல்லட்டா சார்?” - ரவுடியின் சோக பக்கங்கள்... வேட்டையாடு விளையாடு! பகுதி - 22
``ஒரு கதை சொல்லட்டா சார்?” - ரவுடியின் சோக பக்கங்கள்... வேட்டையாடு விளையாடு! பகுதி - 22

போலீஸ்  இன்ஸ்பெக்டர் நவீன் சார் முகம் இறுக்கமானதைப் பார்த்த தோட்டா கிருஷ்ணமூர்த்தி, `சார் நான் சொல்கிறேன் சார்' என்று  ஆரம்பித்தான்.                

 `முண்டேல்பாஜூவின் உண்மையான பெயர் பாஜூ மட்டும்தான் சார். சிறுவயதில், லேத் பட்டறையில், வேலை செய்தபோது மெஷினில் சிக்கி பாஜூவின் வலதுகை நடுவிரல் துண்டாகிவிட்டது.  உறுப்புகளில் சேதம் ஏற்பட்டுவிட்டால், நாங்கள் முண்டம் என்றுதான் கூப்பிடுவோம். பாஜூவையும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து, கடைசியில் அது முண்டேல் பாஜூ என்று மாறிப்போய்விட்டது. பாஜூவின் தந்தை, முழுநேரக் குடிகாரன். அந்த ஆளுக்கு சாராயம் வாங்கிக் கொடுக்கவே பாஜூ,  திருட ஆரம்பித்தான். ஆரம்பத்தில், பாஜூ நல்லவன்தான் சார்' என்றான். அப்போது... 'அடுத்தவனின்  சொத்துகளைத் திருடிதான் சாராயம் குடிக்கவும் உயிர்வாழவும் வேண்டும் என்ற நிலை இருந்தால், அதைவிட  நீ உன்னுடைய அப்பனைக் கொன்று போட்டிருக்கலாம். அல்லது நீங்கள் இரண்டு பேருமே விஷம் குடித்து செத்திருக்கலாம்... இதெல்லாம் ஒரு பிழைப்பா.  விட்டால்,  முண்டேல் பாஜூவை தியாகியாக்கி, ஆந்திரா - தமிழ்நாடு எல்லையில் சிலை வைக்கச் சொல்வீர்கள் போலிருக்கிறதே. எங்கள் நல்ல நேரம், உங்களை நாங்கள் பிடித்துவிட்டோம். இதுவே கொஞ்சம் மாறிப்போய், நாங்கள் உங்களிடம் மாட்டியிருந்தால்... இந்நேரம், எங்களைப் பணயக் கைதிபோல, கையில் வைத்துக்கொண்டு அரசாங்கத்திடம் பணம் கேட்டிருப்பீர்கள். அல்லது எங்களைச் சுட்டுத் தள்ளியிருப்பீர்கள். நகைகள் ரெக்கவரி ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாங்கள் இருந்ததால்தான், உங்களை ஒன்றும் செய்யவில்லை, இப்போது நகைகள் கிடைத்துவிட்டன. ஆனாலும், உங்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. நீங்கள் மூன்றுபேரும் எங்கள் கஸ்டடியில் இருப்பதை இரண்டு மாநிலப் போலீஸுக்கும் நாங்களே சொல்லி விட்டதால்தான் அமைதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டில் வேறு வழக்கு விசாரணைகள் இல்லையென்றால், ஆறுமாத காலத்துக்கு உங்களை விட்டிருக்கவே மாட்டோம். பிற மாநிலங்களில் உங்கள் நெட் வொர்க் எப்படி இருக்கிறது, நீங்கள் பஞ்சத்துக்குத் திருட வந்தவன்களா, நாட்டையே சூறையாட வந்தவன்களா என்ற மொத்த விவகாரத்தையும் வெளியில் எடுத்து விடுவோம். தோட்டா கிருஷ்ணமூர்த்திக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது. மாரேடிபூடி நாகபூஷணத்தை மட்டும் ஒப்படைக்கும்படி உங்கள் ஊர்ப்போலீஸார் கேட்பது ஏன், உங்களை மட்டும் ஏன் போலீஸ்  கேட்கவில்லை. பத்து வார்த்தையில் பதில் சொன்னால் போதும். மறுபடியும் ஏதாவது பில்டப் கொடுக்கத் தொடங்கினால், உங்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்குத் திரும்ப முடியும்...' என்ற காட்டமான எச்சரிக்கைக் குரலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போதைக்கு குரலுக்கும் வார்த்தைக்கும் உரியவர் குறித்து நாம் யோசிக்க வேண்டாம். தோட்டா கிருஷ்ணமூர்த்தி சொல்வதைக் கேட்போம்.

``சார், நான் பறவைகளைக் குறிதவறாமல் சுடுவேன், அடிக்கடி வேட்டைக்கும் போவேன். முண்டேல் பாஜூவும் மாரேடிபூடி கிருஷ்ணமூர்த்தியும்தாம் ஆரம்பத்தில், தொழில் பார்ட்னர்கள். இவர்கள் இருவரும் எனக்கு நண்பர்கள் மட்டும்தான். பறவைகளின் இறைச்சியுடன் இவர்களைப் பார்க்க வருவேன். எனக்கு மது கொடுப்பார்கள், செலவுக்குப் பணம் கொடுப்பார்கள். நான் நன்றாகச் சமைப்பேன். மூன்று பேரும் சாப்பிடுவோம். குறி தவறாமல் சுடத்தெரியும் என்பதால் திருடப்போகும் இடத்துக்கு என்னையும் கூட்டிப் போனார்கள். அப்படியே அது பழகிவிட்டது, நானும் நன்றாகத் திருடக் கற்றுக்கொண்டேன். முண்டேல்பாஜூவைவிட, மாரேடிபூடி நாகபூஷணம் நன்றாகத் திருடுவான். நாகபூஷணம்போல திட்டம் போட்டுத் திருட ஆந்திராவில் ஒருவர்கூட இல்லை. சில வருடங்களாக ஆந்திராவில் நடந்த தொடர் கொள்ளைகள் அனைத்தும்  நாகபூஷணம் செய்ததுதான் என்று ஆந்திரப் போலீஸார் நினைக்கிறார்கள்.  அதனால்தான் அவர்கள் நாகபூஷணத்தைக் கேட்கிறார்கள். என்னையும் முண்டேல்பாஜூவையும் நீங்களே கொண்டுபோய் அவர்களிடம் ஒப்படைத்தாலும் விட்டுவிடுவார்கள். நாகபூஷணம்தான் இப்போதைக்கு அவர்களுக்குத் தேவைப்படுகிறார்கள். நாகபூஷணத்தை வைத்து அனைத்துக் கொள்ளை வழக்குகளையும் ஆந்திரப் போலீஸால் முடிவுக்குக் கொண்டு வந்துவிட முடியும்... தமிழ்நாட்டில் கேஸை முடித்து விட்டு நாங்கள் ரிலீஸ் ஆனாலும் இனி ஆந்திராவில் கால் வைக்க முடியாது. க்ரைம் கேஸைப் பொறுத்தவரை  'வான்டட்' லிஸ்ட்டில் ஒருமுறை வந்துவிட்டால், ஆந்திராவில் அவன் வாழவே முடியாது சார். 15 ஆண்டுகளாக, அத்தனை வழிமுறைகளையும் பயன்படுத்தி போலீஸில் மாட்டாமல் தப்பித்துவந்தோம். சார், விஜயவாடாவில் உள்ள மாரேடிபூடி கிராமம்தான்  நாகபூஷணத்தின் சொந்த ஊர். நாகபூஷணம் என்ற பெயரில் டவுனில் ஒரு `கேஸ்'காரன் இருந்ததால், ஆள் அடையாளத்துக்காக அவனை மாரேடிபூடி நாகபூஷணம் என்று கூட்டாளிகள் கூப்பிட்டதால் போலீஸ் ரெக்கார்டிலும் அப்படியே ஆகிவிட்டது" என்றான். ஒருவன் வாக்குமூலம் கொடுக்கும்போது, உடன் இருக்கும் கூட்டாளிகளின் அசைவுகளைக் கவனித்தால், வாக்குமூலத்தில் மறைக்கப்படும் பல விவகாரங்களுக்கு விடை கிடைக்கும் என்பது போலீஸ் பார்முலா. தோட்டாகிருஷ்ணமூர்த்தி வாக்குமூலம் கொடுத்தபோதும் அந்தக் 'கவனித்தல்' சிறப்பாக இருந்தது. வாக்குமூலம் அளிக்கும் குற்றவாளிகளை, பொதுவாகவே விசாரணை அதிகாரிகள் கவனிக்க மாட்டார்கள். சுற்றி நிற்கும் அடுத்த நிலை அதிகாரிகள், காவலர்கள்தான் கவனிப்பார்கள். ரகசியம் பேசும் அவர்களின் கண்களை, விசாரணை அதிகாரி அவ்வப்போது படித்துக் கொள்வார். அந்த விழிகளில், 'சார், அப்பட்டமாகப் பொய் பேசுகிறான், பரவாயில்லை சார், இன்னும் சொல்ல வேண்டிய விஷயம் இருக்கிறது, மெயின் மேட்டருக்கே ஆள் வரவில்லையே சார்' இப்படி, பல பரிமாற்றங்களை எதிரே நிற்கும் கண்கள் சொல்லிக்கொடுத்து விடும். வாக்குமூலம் கொடுப்பவனின் கண்கள், உடலசைவு, கை-கால்களை அசைக்கும் விதம் என ஒவ்வொன்றும் ஒரு குறிப்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.


                       

இன்ஸ்பெக்டர் நவீன் சாரின் பார்வையில் பட்ட எஸ்.ஐ-கள் ராஜ்குமார், பால்ராஜ் கண்கள் மட்டுமல்ல, ஏட்டுகள் கன்னையன், கோபால், முதல்நிலைக் காவலர்களான ரமேஷ், பரீன்செல்வம் உள்ளிட்ட டீமின் மொத்த கண்களும் அப்போது சொன்னது ஒரே தகவல்தான். 'தோட்டா கிருஷ்ண மூர்த்தி முக்கியமான ஒன்றை மறைத்துவிட்டதாக நினைக்கிறான். அவன் கூட்டாளிகளும் தப்பித்தோம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் சார்' என்பதுதான். அந்த விழிகள் சொன்ன தகவலை, விழிவழியாகவே நவீன் சார் ஆமோதித்தார்.  
அப்போது வெளியில் போயிருந்த தமிழ்நாடு ஸ்பெஷல் டீம் கான்ஸ்டபிளுடன் ஆந்திரப் போலீஸார் சிலர், விசாரணைப் பகுதிக்குள் வந்து விட்ட சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது, வாசலில் விறைப்புடன் நின்றிருந்தனர். 'சார், டிக்கெட் போட்டுவிட்டோம். உணவை இங்கேயே முடித்துக்கொண்டு ரயில் ஏறிவிடலாம். இன்னும் 10 நிமிடத்தில் மாரேடிபூடி நாகபூஷணத்தை நம்மிடமிருந்து வாங்கிக்கொண்டு போக, ஆந்திரா டவுன் போலீஸ் வந்துவிடுவார்களாம், டி.ஐ.ஜி ஆபீஸில் உங்களுக்குக் கடிதம் கொடுத்துள்ளனர்' என்றனர். கடிதத்தை இன்ஸ்பெக்டர் நவீன் சார் வாங்கிப் படித்தார். கடிதத்தைப் படித்து முடித்ததும், 'எல்லோரும் சீக்கிரம் ரெடியாகுங்க' என்று உத்தரவிட்டார். ஏற்கெனவே நவீன்சார் சொன்னபடி, அக்யூஸ்ட்டுகள் மூன்று பேரின்  கைரேகைகளை நிறையவே  எடுத்தோம். அடுத்ததாக கைக்கேமராவில் அவர்களைப் போட்டோ எடுத்துக்கொண்டு, அங்க அடையாளங்களைக் குறித்துக்கொண்டோம். குடும்பம், வயது, உறவு முறைகள் என ஒன்றுவிடாமல் கேட்டு நாங்கள் குறிப்பு  எழுதியதை ஆந்திரப் போலீஸார் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.  'சார், அடுத்தமுறை  உங்கள் டீம் ஆந்திராவுக்கு வந்தால் முன்னதாக எங்களுக்குச் சொல்லிவிடுங்கள் சார்... உங்களுடன் இன்னும் ஒரு வழக்கு விசாரணையை நாங்கள் அருகிருந்து பார்த்தாலே தேறி விடுவோம் சார்' என்றனர். இன்ஸ்பெக்டர் நவீன் சார் அவர்களைத் தட்டிக் கொடுத்தார். போலீஸ் சம்பிரதாயங்கள் முடிந்ததும் அக்யூஸ்ட்டுகள் மூன்று பேரையும் முதலில் சாப்பிட வைத்தோம். அதன் பின்னர் நாங்கள் சாப்பிட்டோம். நாகபூஷணத்தை ஏற்றிக்கொண்டு போக, சிறப்பு வேன் ஒன்றையும் ஆந்திரப் போலீஸார் அனுப்பியிருந்தனர். அந்த வேனுக்குப் பின்னால் சிவப்புக்கொண்டை விளக்கு கார் ஒன்றும் வந்து நின்றது.'' அந்தக் காரிலிலிருந்து...