Published:Updated:

``கோயில் சொத்துகளை முறைகேடாக விற்கும் தம்பியால் உயிருக்கு ஆபத்து!’’ - மூதாட்டிகள் கண்ணீர் பேட்டி

ஜெ.அன்பரசன்
ந.பா.சேதுராமன்
``கோயில் சொத்துகளை முறைகேடாக விற்கும் தம்பியால் உயிருக்கு ஆபத்து!’’ - மூதாட்டிகள் கண்ணீர் பேட்டி
``கோயில் சொத்துகளை முறைகேடாக விற்கும் தம்பியால் உயிருக்கு ஆபத்து!’’ - மூதாட்டிகள் கண்ணீர் பேட்டி

 
                           

``கோயில் சொத்துகளை அபகரிக்க முயன்ற எங்கள் தம்பியால் குடும்பமே நாசமாகிவிட்டது. பாவத்தைச் சுமந்துகொண்டிருக்கும் எங்களைக் காப்பாற்றுங்கள்`` என்று சகோதரிகள் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

சென்னை மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் மூதாட்டிகள் சுபாஷினி, சுமதி அம்மாள், சுகுணா காயத்திரி வசிக்கின்றனர். சகோதரிகளான இவர்கள் மூவருமே திருமணம் செய்யாமல் தனிமையில் வாழ்கின்றனர். இவர்களுக்கு சுதர்சன், சம்பத் குமார் என 2 தம்பிகள் உள்ளனர். தம்பிகளில் சம்பத்குமார் (56) மட்டும் திருமணம் ஆனவர். சென்னையில், இவர்களுக்குத் திருமண மண்டபம், கோயில், அறக்கட்டளை என்று  ஏராளமான சொத்துகள் உள்ளன. சில சொத்துகள் இந்து அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.  

இந்நிலையில், "அறக்கட்டளை, கோயில் சொத்துகளை அபகரிக்க தம்பி சம்பத்குமார் முயற்சி செய்கிறார். ரவுடிகளின் உதவியுடன் எங்களைக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார்" என்று மயிலாப்பூர் போலீஸில், மூதாட்டி சுபாஷினி கொடுத்த புகாரில் கடந்த டிசம்பர் மாதம் சம்பத்குமாரை போலீஸார் கைது செய்தனர். சிறையில் இருந்த சம்பத்குமார், அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்ததாகத் தெரிகிறது. ஜாமீனில் வந்திருக்கும் தம்பியால், உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பீதியடைந்த சகோதரிகள், 'எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று மீண்டும் இன்று (17.2.2018) புகார் தெரிவித்தனர்.

"அறக்கட்டளைக்குச் சொந்தமான, ரூ.100 கோடி மதிப்புள்ள 58 இடங்களை எங்கள் தம்பி சம்பத்குமார் விற்றுவிட்டார். அதேபோல் கோயில் நிலங்களையும் அபகரிக்கத் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். இதுபற்றி நாங்கள் இந்து அறநிலையத் துறையில் புகார் செய்தோம், அவர்கள் இதைப் பொருட்படுத்தவே இல்லை. கோயிலுக்குச் சொந்தமான அறக்கட்டளையைப் போலியான ஆவணங்கள் மூலம் எங்கள் தம்பி விற்ற பாவத்துக்கு, நாங்கள் ஒட்டு மொத்தக் குடும்பமும் ஆளாகிக் கிடக்கிறோம். ஊடகங்களை நம்பி வந்திருக்கிறோம், எங்கள் தம்பியின் கொலைவெறியில் இருந்து தப்பித்து எங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் எங்கள் பாவம் தீர்க்கவும் வழி காட்டுங்கள்" இவ்வாறு கண்ணீருடன் அவர்கள் தெரிவித்தனர். கோயில் சொத்துகளை மீட்கவும் காப்பாற்றவும் இந்து அறநிலையத்துறை இருப்பதாக அரசாங்கம் சொல்வதையும் நம்பத்தான் வேண்டும்போலிருக்கிறது.