Published:Updated:

ரயில் டிரைவர் முதல் ஸ்டேஷன் மாஸ்டர் வரை... குட்கா கடத்தலுக்கு இந்திய ரயில்வே உடந்தையா!? அறப்போர் இயக்கம் கேள்வி

ரயில் டிரைவர் முதல் ஸ்டேஷன் மாஸ்டர் வரை... குட்கா கடத்தலுக்கு இந்திய ரயில்வே உடந்தையா!?  அறப்போர் இயக்கம் கேள்வி
ரயில் டிரைவர் முதல் ஸ்டேஷன் மாஸ்டர் வரை... குட்கா கடத்தலுக்கு இந்திய ரயில்வே உடந்தையா!? அறப்போர் இயக்கம் கேள்வி

மிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடைவிதித்து உத்தரவிட்டார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அந்தத் தடை இன்னமும் அமலில் இருக்கும் நிலையில், மாநிலத்தில் குட்கா விற்பனை கன ஜரூராக நடப்பதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, 2016-ம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் சட்டவிரோதமாக குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு குடோனில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தொகை உள்பட வரவு-செலவுகள் இடம்பெற்றிருந்த கணக்குப் புத்தகம் ஒன்றை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், தடையின்றி குட்கா சப்ளை செய்வதற்கு யார், யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விவரம் இடம்பெற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் சென்னை மாநகர காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோரது பெயர்கள் சங்கேத எழுத்துகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் தமிழக சட்டமன்றத்தில் ஏற்கனவே புயலைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. மேலும் இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.

இப்படியான சூழலில் டெல்லி நிஜாமுதீனில் இருந்து தமிழகத்துக்கு வரும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் குட்கா போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக வீடியோ ஆதாரத்துடன் குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது அறப்போர் இயக்கம். 

சென்னையில் வீடியோ ஆதாரத்தை  வெளியிட்டுப் பேசிய  அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி இடையே சென்னை வழியாக இயக்கப்படும் திருக்குறள் எக்ஸ்பிரசில் குட்கா கடத்தப்படுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த ரயிலை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மதுரை ரயில் நிலையத்தில் ஐந்து நிமிடம் மட்டுமே நிற்க வேண்டிய இந்த ரயில், சுமார் அரை மணிநேரம் நிறுத்தப்படுகிறது. பின்னர் எஞ்சின் அருகே அடுக்கப்பட்ட பெட்டிகள் வி.ஐ.பி. கேட் வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. வெயிட் செக்கிங், பரிசோதனை என எதுவுமின்றி மிகச் சுதந்திரமாக அவற்றைக் கடத்தல்காரர்கள் எடுத்துச் செல்கிறார்கள். ரயில்வேத்துறை மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு இந்தக் கடத்தல் அரங்கேறுகிறது.

ரயில்வே உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்போடும், தமிழக காவல்துறையின் கண் அசைவிலும்தான் இந்தக் கடத்தல் நடப்பதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக சோதனை நடத்துமாறு வீடியோ ஆதாரத்துடன் சி.பி.ஐ-க்கு புகார் தெரிவித்தோம். அதற்கு, 'எங்களுடைய விசாரணை வரம்பில் இந்தப் புகார் வராது. மாநில விசாரணை வரையறையில்தான் வரும்' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கூறி விட்டனர். இதையடுத்து ரயில்வே லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பினோம். அந்தப் புகார் அடிப்படையில் ரெய்டு செய்து 200 பெட்டிகளைக் கைப்பற்றினர். இதை அறிந்த மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா, மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை, குட்கா கடத்தல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து ரயில்வேத் துறையிடம் விளக்கம் கேட்டுள்ளது. இந்த விவகாரம் ரயில்வே அதிகாரிகளுக்கு மிகப்பெரிய  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குட்கா கடத்தலில் மிகப் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதால் இந்தக் கடத்தல் விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை வலியுறுத்தி நீதிமன்றத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் வழக்குத் தொடர உள்ளோம்" என்றார்.