Published:Updated:

உள்துறை அமைச்சக விதிகளைப் போலீஸார் அறிவார்களா? - தி.நகர் பிரகாஷ் வழக்கு முதல் உஷா மரணம் வரை

உள்துறை அமைச்சக விதிகளைப் போலீஸார் அறிவார்களா? - தி.நகர் பிரகாஷ் வழக்கு முதல் உஷா மரணம் வரை
உள்துறை அமைச்சக விதிகளைப் போலீஸார் அறிவார்களா? - தி.நகர் பிரகாஷ் வழக்கு முதல் உஷா மரணம் வரை

உள்துறை அமைச்சக விதிகளைப் போலீஸார் அறிவார்களா? - தி.நகர் பிரகாஷ் வழக்கு முதல் உஷா மரணம் வரை

Representational Images

சமீபத்தில் சென்னை தி.நகரில், பிரகாஷ் என்பவரை பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினர் அடித்து அவர்மீது 3 பிரிவுகளில் வழக்கு போட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளது மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 2-ம் தேதி அவரின் தாய் மற்றும் தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் தி.நகருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும்போது, ஹெல்மெட் அணியாமல், மூன்று பேராக வந்துள்ளனர். அவரை, நிறுத்திய போக்குவரத்து போலீஸார், மூன்று பேர் ஆட்டோவில் செல்ல வேண்டியதுதானே என்று கேட்டனர். அதனால், போலீஸாருக்கும் பிராகாஷுகும் இடையே வாக்குவாதம் ஆனது. போலீஸார், பிரகாஷைத் தாக்க ஆரம்பித்தனர். போலீஸாரைத் தடுக்கவந்த பிரகாஷின் அம்மாவையும் தாக்கினர். அதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் போலீஸின் சட்டையைப் பிடித்தார். பின்னர், ஒரு காவலர் பிரகாஷை போஸ்ட் கம்பத்தில் சாய்த்துப் பிடித்துக்கொண்டார். மற்றொரு காவலர் தாக்கினார்.  

மக்கள் கூடும் பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் வீடியோவாகச் சமூக வலைதளத்தில் பரவியது. அதன் பிறகு, பிரகாஷ்மீது 294 (b), 332, 427 ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையிலடைத்தனர். இதையடுத்து கடந்த 6-ம், தேதி சைதாப்பேட்டை நீதிமன்றம் பிரகாஷ்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

பணியில் இருக்கும் காவலரின் அதிகார வரம்பு என்ன. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை அந்த இடத்திலேயே வைத்துத் தண்டிக்கலாமா. தண்டனை அளிப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லையா உள்ளிட்ட பல கேள்விகள் நமக்குள் எழுகின்றன.

புகழேந்தி

இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் புகழேந்தி. 

``ஜூலை-4, 1985-ல் மத்திய உள்துறை அமைச்சகம் காவலர்களின் பணி விதிகளைப் பட்டியலிட்டு அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் செய்தி அனுப்பியுள்ளது.

13 விதிகளில் 3-ம் விதி கூறுவது, `காவலர்கள் பணியின்போது தங்களின் அதிகார வரம்பை மதித்து செயல்பட வேண்டும். ஒருபோதும் நீதித்துறையின் பணியைத் தன் கைகளில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தீர்ப்பு அளிப்பது நீதிமன்றத்தின் வேலை என உணர்ந்து, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை, பழிவாங்கவோ தண்டிக்கவோ கூடாது.’ (The police should recognize and respect the limitations of their power and functions. They should not usurp or even seem to usurp functions of the Judiciary and sit in judgments on cases to avenge individuals and punish the guilty) காவலர்கள் இவ்விதியைப் பின்பற்றத் தேவையில்லையா... ஏன் பிரகாஷை தண்டிக்க வேண்டும்?

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது, 3 பேர் சென்றது சட்டப்படி குற்றம் எனக்கூறும் போக்குவரத்து காவல்துறை ஹெல்மெட் அணியாமல் செல்லும் போக்குவரத்து காவலர், பிற காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்குமா. பெரும்பாலான காவலர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வது அன்றாட நிகழ்வாக இருந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தனக்கு ஒரு சட்டம் பிறருக்கு வேறு சட்டம் என்பதுபோல் அல்லவா இருக்கிறது.

சென்னை மாநகராட்சி சொத்துவரி செலுத்தாதோர் பட்டியலில் சட்டத்தைப் பேண வேண்டிய காவல்துறையே இருந்தும், அவர்கள்மீது யார் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது?

காவல்துறையில் 1979-க்குப் பிறகு, ‘ஆர்டர்லி’ முறை கிடையாது என டி.ஜி.பி அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, நீதியரசர் கிருபாகரன் குறிப்பிட்டது ``ஆர்டர்லி முறை குறித்து தவறான தகவல்களைப் பதிவு செய்ய வேண்டாம் எனக் காவல்துறை உயர் அதிகாரிகளை எச்சரிக்கின்றேன். ஆர்டர்லி முறையில் எத்தனை பேர் (10-15% காவலர்கள்) உள்ளனர் என்ற தெளிவான புள்ளிவிவரம் எனக்குத் தெரியும் எனக் கூறியுள்ளார். இது குறித்த அடுத்த விசாரணை ஏப்ரல் 23-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தவறான தகவலை டி.ஜி.பி அவர்களே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாமா. அது சட்டமீறல் ஆகாதா?

திருச்சியில் போக்குவரத்து காவலர் காமராஜ் வண்டியை உதைத்ததால் கீழே விழுந்து தலைக்காயம் ஏற்பட்டு உயிரிழந்த உஷா வழக்கில், விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என இருந்தும் அது பதிவு செய்யப்படவில்லை. மேலும், இறப்பு எப்படி ஏற்பட்டது என்பது பதிவு செய்யப்படவில்லை.

திருநெல்வேலி எஸ்.பி அருண் சக்திகுமார், காவலர்களுக்கே சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவில்லை என்பதால் 30 காவலர்களுக்கு விளக்கச் சீட்டு கொடுத்துள்ளார் (Memo). ரத யாத்திரைக்கான வாகனம் திருநெல்வேலியில் நுழைந்தபோது, மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன்படி வாகனத்தில் அனுமதியின்றி மாற்றம் செய்திருந்தபடியால் அதைக் கைப்பற்ற வேண்டும் எனப் பிரிவு 207 தெளிவாகக் கூறுகையில், மேலும், மாற்றம் செய்ய முன் அனுமதி வாங்க வேண்டும் எனப் பிரிவு 52 கூறுகையில், அதுவும் செய்யப்படாத நிலையில் அந்த வண்டியை அவர் ஏன் கைப்பற்றவில்லை?

காவிரி டெல்டா பகுதியில் உள்ள எண்ணெய்க் கிணறுகளை (ஓ.என்.ஜி.சி) பொருத்தமட்டில் எந்தக் கிணறும் சட்ட விரோதமாக அனுமதியின்றி செயல்பட்டு வந்ததைக் (தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் இது) கண்டித்து மக்கள் போராட்டம் செய்தால் போராடும் மக்கள்மீது காவல்துறை ஐந்து பிரிவுகளின் (143, 186, 448, 353, 505(1)B) கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, உண்மையில் காவல்துறை சட்டப்படி யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் அரிபரந்தாமன் காவல்துறையின் இந்த அத்துமீறல் நடவடிக்கையைக் கண்டித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறைக்கு அரசியல்வாதிகள் தேவை; அரசியல்வாதிகளுக்கு காவல்துறை தேவை என்ற ஐயப்பாடே மக்கள் மனதில் நிலவுகிறது. காவல்துறை மக்களின் நண்பனாக இருக்க முயற்சி செய்யுமா?" என்றார் ஆதங்கத்துடன். 

அடுத்த கட்டுரைக்கு