Published:Updated:

ஆளைக் காலி செய்யும் கூல்டிரிங்க்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆளைக் காலி செய்யும் கூல்டிரிங்க்ஸ்!
ஆளைக் காலி செய்யும் கூல்டிரிங்க்ஸ்!

காஞ்சிபுரம் களேபரம்...விபரீதம்

பிரீமியம் ஸ்டோரி
ஆளைக் காலி செய்யும் கூல்டிரிங்க்ஸ்!

'காஞ்சிபுரம் பகுதியில் காலாவதியான குளிர்பானங்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. அதை, பொதுமக்கள் வாங்கிக் குடிப்பதால், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள்’ என நம் அலுவலகத்துக்கு புகார் அனுப்பியிருந்தார் ஒரு வாசகர்.

ஆளைக் காலி செய்யும் கூல்டிரிங்க்ஸ்!

இதைத் தொடர்ந்து அவர் குறிப்பிட்டிருந்த காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் சென்று தகவலை உறுதிப்படுத்திக் கொண்டோம். சாலைகளின் ஓரங்களில், குடோன்களில் காலாவதியான குளிர்பான பாட்டில்களைக் குவித்துவைத்துச் சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்கிறார்கள். இங்கு விற்பனை செய்யப்படும் குளிர்பான பாட்டில்கள் அனைத்தும் காலாவதியானவை. பல மாதங்களாக விற்பனையாகாமல் தேங்கிக் கிடந்த குளிர்பானங்களைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஏஜென்ட்களே குறைந்த விலைக்கு உள்ளூர் பிரமுகர்களைவைத்து விற்பனை செய்கிறார்கள். 70 முதல் 80 ரூபாய் வரை விலை உள்ள இரண்டு லிட்டர் அளவுகொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் குளிர்பானங்கள் வெறும் 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

தள்ளுவண்டிக் கடைகள், தனித்தனியாக ஃப்ளேவர்களாக இயந்திரத்தில் குளிர்ச்சியாகக் கொடுக்கும் கடைகள் என எல்லாவற்றிலும் இந்தக் குளிர்பானங்களே இடம்பிடித்து இருக்கின்றன. குறைந்த விலைக்குக் கிடைக்கிறது என குடிமகன்களும் குளிர்பானங்களை வாங்கிச் சென்று, சரக்கில் மிக்ஸ் செய்து குடிக்கிறார்கள். பெரும்பாலும் பேருந்து நிலையம், பள்ளி, கல்லூரி என மக்கள் கூடும் இடங்களில் இவை விற்கப்படுகின்றன. இவற்றைப் பருகும் நபர்கள் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சளி எனப் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. செங்கல்பட்டு பகுதியிலும் இதேபோன்று குறைந்த விலைக்குச் சில கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டு வருகின்றன. சில கடைகளில் குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு இலவசமாக இந்தக் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றன. அதற்கு பில் வழங்கப் படுவதில்லை.

 இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘அந்தத் தகவல்களை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள். உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரிடம் சொல்லி விரைவில் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்’’ என்றார்.

பின்பு உணவு மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையர் வாசுகுமார் நம்மைத் தொடர்புகொண்டு விவரங்களைக் கேட்டறிந்தார். இதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு நகரங்களில் உள்ள கடைகளில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆளைக் காலி செய்யும் கூல்டிரிங்க்ஸ்!

ஆய்வுக்குப் பின் நம்மிடம் பேசிய மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன், ‘‘காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மொத்தம் 87 கடைகளில் சோதனை நடத்தினோம். அதில், 7 கடைகளில் 144 லோக்கல் தயாரிப்புக் குளிர்பான பாக்கெட்களைக் கைப்பற்றினோம். ‘ஒரு வாரத்துக்குள் விற்க வேண்டும்’ என்று அச்சிடப்பட்டு இருந்த அந்த பாக்கெட்களில், ‘ஒரு மாதத்துக்குள்’ என்று மாற்றி இருந்தனர். சில கடைகளில் புதிய குளிர்பானங்களுடன், காலாவதியான குளிர்பானங்களையும் கலந்திருந்தனர். பிரபல நிறுவனங்களின் 58 லிட்டர் காலாவதியான குளிர்பானங்களைக் கைப்பற்றினோம். 9 கடைகளில் மட்டும் ரூ.4,500 மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. சில நாட்களில் காலாவதியாகும் குளிர்பானங்களை விலை குறைத்து விற்பனை செய்துள்ளார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் பெயரில் போலியான குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளதால், கைப்பற்றப்பட்ட குளிர்பானங்களின் மாதிரியை கிண்டியில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து ஆய்வு நடத்த உள்ளோம்’’ என்றார்.

‘‘சாஃப்ட் ட்ரிங்ஸ்  குடிக்கும் பழக்கம் என்பதே தவறானது. அதிலும், காலாவதியான குளிர்பானங்களைக் குடிக்கும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு தவிர, கல்லீரல், கிட்னி பாதிப்புகளும் ஏற்படும். தொடர்ந்து குளிர்பானங்கள் குடிக்கும்போது, புற்றுநோய் வரக்கூடிய அபாயமும் உள்ளது. குளிர்பானங்கள் குடிப்பதை நிறுத்திவிட்டு, பழச்சாறு, மோர், இளநீர் போன்றவற்றைக் குடிப்பது நலம்’’ என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கருணாநிதி.

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு