Published:Updated:

நிர்மலா தேவி, முருகனிடம் சி.பி.சி.ஐ.டி-யினர் தொடர்ந்து விசாரணை!

நிர்மலா தேவி, முருகனிடம் சி.பி.சி.ஐ.டி-யினர் தொடர்ந்து விசாரணை!
நிர்மலா தேவி, முருகனிடம் சி.பி.சி.ஐ.டி-யினர் தொடர்ந்து விசாரணை!

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியை

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளின் ஆடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியைக் காவலில் எடுத்து ஐந்தாவது நாளாக சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தி வரும் நிலையில், பேராசிரியர் முருகனிடம் இன்று இரண்டாவது நாளாக விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் பயன்படுத்த முயன்றார் என்ற புகாரின் கீழ் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவியைக் கடந்த 16-ம் தேதி காவல்துறை கைது செய்தது. இந்த நிலையில் நிர்மலாதேவியைக் காவலில் எடுத்து ஐந்தாவது நாளாக அவரிடம் விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி-யினர், அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.  அவருக்கு மிக நெருக்கமாக இருந்த பேராசிரியர் முருகன் நேற்று முதல் விசாரிக்கப்பட்டு வருகிறார். கருப்பசாமி தேடப்பட்டு வருகிறார்.

`தான் ஓர் அப்பாவி, சக ஆசிரியர் என்ற வகையில்தான் நிர்மலா தேவியைத் தெரியும். அதை மீறி எந்தத் தொடர்பும் கிடையாது. மாணவிகளைத் தவறாக வழிநடத்த தான் கூறவில்லை' என்று முருகன் கூறியதாகவும், ஆனாலும் அவர் பல விஷயங்களை மறைக்கிறார் என்றும் சி.பி.சி.ஐ.டி-யினர் தொடர்ந்து விசாரித்து வருவதாகச் சொல்கிறார்கள். முருகனை கடந்த ஒரு வாரமாக சி.பி.சி.ஐ.டி தேடி அலைந்த நிலையில், முருகனைப் பிடித்தால் பிரச்னை அதோடு முடிந்துவிடும் என்று நினைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் தரப்புதான் வழக்கம்போல் வேலைக்கு வரவும் என்று முருகனை அழைத்து, சி.பி.சி.ஐ.டி-யிடம் மாட்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு முருகனை காண வந்த அவருடைய சகோதரி மற்றும் உறவினர்கள் அழுதுகொண்டே பேசினார்கள். ``என் தம்பி அப்படிப்பட்ட ஆள் இல்லை. மிகக் கஷ்டமான குடும்பத்தில் பிறந்து படிச்சு வேலைக்குப் போய் குடும்பத்தையே காப்பாற்றி வருகிறான். இந்த வழக்கில் தேவையில்லாமல் மாட்டிவிட்டார்கள்'' என்று கூறி அழுதார். நிர்மலாதேவியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. நாளை காலை சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். மீண்டும் அவரிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி-யினர் அனுமதி கேட்பார்களா என்பது தெரியவில்லை. நாளைய தினம் சந்தானம் மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறார்.

அடுத்த கட்டுரைக்கு