Published:Updated:

"கிராமங்களில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்கள் வேண்டாம்!" - உண்மை கண்டறியும் குழு

"கிராமங்களில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்கள் வேண்டாம்!" - உண்மை கண்டறியும் குழு

கச்சநத்தம் போன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க கிராமப்புற காவல் நிலையங்களில்

"கிராமங்களில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்கள் வேண்டாம்!" - உண்மை கண்டறியும் குழு

கச்சநத்தம் போன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க கிராமப்புற காவல் நிலையங்களில்

Published:Updated:
"கிராமங்களில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த காவலர்கள் வேண்டாம்!" - உண்மை கண்டறியும் குழு

``கச்சநத்தம் போன்ற கொடூரச் சம்பவங்கள் தொடராமல் இருக்க, கிராமப்புற காவல் நிலையங்களில் பல சாதிகளையும் சேர்ந்த காவலர்கள் நியமிக்கப்படவேண்டும்; மானாமதுரை வட்டாரத்தை வன்கொடுமையால் பாதிக்கபட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும்" என்று ஆறு அமைப்புகளைக் கொண்ட உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக்கழக மாநிலப் பொதுச்செயலாளர் பேராசிரியர் இரா.முரளி தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் சமநீதி வழக்கறிஞர் சங்க ராஜேந்திரன், குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் வழக்கறிஞர் ராஜா, விடுதலைச் சட்ட மையம் வழக்கறிஞர் ஆ.ராஜா, வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன், மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் கண்மணி, மாணவர் பொதுநல இயக்கத்தின் குறிஞ்சித்தேன், பெண்கள் எழுச்சி இயக்கம் மீனாட்சி, சாதி ஒழிப்பு விடுதலை முன்னணியின் முத்துப்பாண்டி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

தங்களுடைய கள ஆய்வு பற்றிப் பேசிய பேராசிரியர் முரளி, ``கச்சநத்தம் கிராமத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மற்றொரு சமூகத்தினர் மூன்று பேரைக் படுகொலை செய்துள்ளனர். ஆறு பேர் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தச் சம்பவம் பற்றி அப்பகுதியிலுள்ள பாதிக்கபட்ட மக்கள், தலையாரி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், அங்கு வசிக்கும் மக்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் என அனைவரிடமும் உரையாடி உண்மையைக் கேட்டறிந்தோம். கச்சநத்தம் கிராமத்தைப் பொறுத்தவரை குறிப்பிட்ட இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலும் படித்து, நல்ல பணியில் இருக்கும் குடும்பத்தினரும் அவர்களில் அடக்கம். கச்சநத்தம் கிராமத்தில் வசிப்போரின் உறவினர்கள், மாரநாடு, ஆவரங்கோடு போன்ற பகுதிகளில் அதிகளவில் வாழ்கின்றனர். இந்தக் கிராமங்களில் அண்மைக்காலமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்படும்போதெல்லாம் பழையனூர் காவல் நிலையத்தில் சமரசம் செய்து வைக்கப்படுவது வழக்கம். வன்கொடுமை நடந்ததற்கான புகார்கள் பலமுறை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களுக்குத் தண்ணீர் திறந்து விடாமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அராஜகத்தில் ஈடுபடுவதை, அங்குள்ள அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

சமீபத்தில் படுகொலைச் சம்பவம் நடந்த அன்று இரவு வீடுகளின் கதவைத்தட்டி தாக்குதல் நடத்த ஆட்களைத் தேடியுள்ளனர். அந்த வன்முறைச் சம்பவங்களுக்குப் பெண்களும் உதவியாக இருந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்களும், இருபது மாணவர்களும் உள்ளனர். அருகிலுள்ள ஊர்களிலிருந்து பலர் இந்தப் பள்ளிகளுக்குப் படிக்க வந்து கொண்டிருந்தனர். ஆனால், இந்தப் படுகொலை சம்பவம் நடந்த பின்னர், ஒரேயொரு மாணவர் மட்டுமே பள்ளிக்கு வருகிறார். மாணவர்கள் வருகையின்மை காரணமாக, பள்ளி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுகுமாரனிடம் பேசியபோது, `செல்வம் மற்றும் ஜானகிராமன் ஆகிய இரண்டு காவல் உதவி ஆய்வளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பத்துப் பேருக்கு மேல் கைது செய்யப்படவேண்டியுள்ளது' எனத் தெரிவித்தார். அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அப்பகுதிவாழ் மக்களிடையே நிலவுகிறது. 

மானாமதுரை வட்டாரத்தை வன்கொடுமையால் பாதிக்கபட்ட பகுதியாக அறிவிக்கவேண்டும். இப்பகுதி கிராமங்களில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கச்சநத்தம் கிராமத்தில் உள்ள பள்ளிகளை மூடாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தச் சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரின் மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் நடத்த அரசு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில், குறிப்பாக கிராமப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தாமல், பல்வேறு சாதியினரும் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்'' என்றார்.