Published:Updated:

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களின் ரகசிய டீம்... சிக்கலில் உயரதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களின் ரகசிய டீம்... சிக்கலில் உயரதிகாரிகள்!
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிள்களின் ரகசிய டீம்... சிக்கலில் உயரதிகாரிகள்!

சம்பவ இடத்துக்கு நேரடியாகப் போய்ப் பார்த்து குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப, உத்தரவுகளைப் பிறப்பித்த ஐ.ஜி அருள், எந்தச் சூழலிலும் வெளியில் யாரிடமும் தண்ணீர்கூட வாங்கிக் குடித்தது இல்லை என்பதற்காகவே போற்றப்படும் போலீஸ் எஸ்.பி `பச்சத்தண்ணி' மாணிக்கம், இந்திய சிலைகளைத் தேடி கண்டம்விட்டு கண்டம் பயணம் போய்க்கொண்டிருக்கும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் போன்றோர் காவல்துறையின் பெருமைக்கு இன்னமும் சான்றாக இருக்கிறார்கள். மேற்கோளுக்காக அவர்களை நினைவுபடுத்திப் பேச வேண்டியிருக்கிறது... இவர்களை யாரோடு மேற்கோள் காட்டிப் பேசுவது?

போலீஸ் கான்ஸ்டபிள்கள் தங்களுக்குள் கலந்து பேசி தயாரான தனிப்படை(?)யினர், செம்மரக்கட்டை கடத்தல் கும்பலால் தாக்கப்பட்டு அட்மிட் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் கான்ஸ்டபிள்களே  தனிப்படையை உருவாக்கி ரெய்டுக்குப் போனது, உயர் அதிகாரிகளைச் சிக்கலில் தள்ளியுள்ளது. சென்னை டூ திருவள்ளூர் மாவட்டம் வரை போய் அடிபட்ட பின்னணி குறித்து விசாரித்தோம். சென்னை எஸ்பிளனேடு காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு முதல்நிலைக் காவலர் முத்துக்கிருஷ்ணன். ஒருங்கிணைக்கப்பட்ட தீவிரவாதத் தடுப்புப்பிரிவு முதல் நிலைக் காவலர் அறிவுச்செல்வன். இவர்கள், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஊர்க்காவல்படைப் பிரிவில் உள்ள பெருமாள் என்பவரை அழைத்துக்கொண்டு, திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்திலுள்ள கதிரவன் என்பவர் வீட்டுக்கு நேற்று அதிகாலை TN07 BB 9524 Ford Fiesto என்ற காரில் சென்றுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கதிரவனை, அப்போது விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர். வீட்டில் கதிரவன், அவர் தாயார் செல்வி ஆகியோர் இருந்துள்ளனர். "வாரண்ட் இருக்கிறதா?" என்று கேட்டு கதிரவன் அவர்களிடம் தகராறு செய்துள்ளார். விசாரிக்கக் கூப்பிட்ட போலீஸார், "எங்களிடம் இருக்கும் வாரண்டை உன்னிடம் காட்ட வேண்டிய

அவசியம் இல்லை" என்று சொல்லிவிட்டு, கதிரவனை கட்டாயப்படுத்தி காரில் ஏற்ற முயன்றுள்ளனர். ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்னர், இதே பகுதியில் தொழிலதிபர் ஒருவரை போலீஸார் என்று கூறி ஒரு கும்பல் கடத்த முயன்ற சம்பவம் நடந்திருந்ததால், கதிரவன் குடும்பத்தார் சத்தம் போட்டு ஊரைக் கூட்டியுள்ளனர். சத்தம் கேட்டு விரைந்து வந்த பொதுமக்கள் மூவரையும் சரமாரியாகத் தாக்க ஆரம்பித்தனர்.

'உண்மையில் நாங்கள் போலீஸ்தான்' என்று சொல்லி அடையாள அட்டையைக் காட்டுவதற்குள் போலீஸார் பலத்த தாக்குதலில் சிக்கி நிலைகுலைந்தனர். சிறிது நேரத்தில் தகவல், காவல் உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த காவலர்கள் அறிவுச்செல்வன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவலர்கள் முத்துக்கிருஷ்ணன், அறிவுச்செல்வன் ஆகியோர் பணியாற்றும் காவல் பிரிவுகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதது. முத்துக்கிருஷ்ணன் பணியாற்றுவது, சென்னை எஸ்பிளனேடு சட்டம் ஒழுங்கு காவல்நிலையம்... அறிவுச்செல்வன் பணியாற்றுவது, ஒருங்கிணைக்கப்பட்ட தீவிரவாதத் தடுப்புப்பிரிவு. ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் பணியாற்றுவது கொருக்குப்பேட்டை காவல்நிலையம். செம்மரம் தொடர்பான விசாரணைக்குப் போனது, திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் என்பதால் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில்

கூறப்படுகிறது... தனிப்படைக்குள் 'தனிப்படை' இருந்தாலும் வியப்பில்லை என்பதை நோக்கி அந்த விசாரணை போகக்கூடும்.

போலீஸ் வட்டாரத்தில், "கதிரவன், சென்னை பெரியமேட்டில் இப்போது டிராவல்ஸ் நடத்திவருகிறார். செம்மர வழக்கில் தொடர்புடையவர். 'பெரியமேட்டைச் சேர்ந்த தீவிரவாதத் தொடர்புள்ள நபர்களுடன் கதிரவனுக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் விசாரணைக்குப் போனோம்' என்று சொல்கிறார்கள்" என்றனர்... நாங்கள் சொல்லித்தான் போனார்கள் என்று யாரும் சொல்லவில்லை... சம்பவ இடத்துக்கு நேரடியாகப் போய்ப் பார்த்து குற்றத்தின்  தன்மைக்கு ஏற்ப, உத்தரவுகளைப் பிறப்பித்த ஐ.ஜி அருள், எந்தச் சூழலிலும் வெளியில் யாரிடமும் தண்ணீர்கூட வாங்கிக் குடித்தது இல்லை என்பதற்காகவே போற்றப்படும் போலீஸ் எஸ்.பி. 'பச்சத்தண்ணி' மாணிக்கம், இந்திய சிலைகளைத் தேடி கண்டம்விட்டு கண்டம் பயணம் போய்க்கொண்டிருக்கும் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் போன்றோர் காவல்துறையின் பெருமைக்கு இன்னமும் சான்றாக இருக்கிறார்கள். மேற்கோளுக்காக அவர்களை நினைவுபடுத்திப் பேச வேண்டியிருக்கிறது... இவர்களை யாரோடு மேற்கோள் காட்டிப் பேசுவது? 'நடத்துங்க ஆபீஸர்!’

அடுத்த கட்டுரைக்கு