Published:Updated:

பாலியல் குற்றங்கள், ஆள்கடத்தல், ஆசிட் வீச்சு.. பெண்கள் மீதான வன்முறைகளின் குவியலாகும் இந்தியா!

சம ஊதியச் சட்டம் 1976 (Equal Remuneration Act 1976), தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990 (National Commission for Women Act, 1990)... என்று பெண்களைப் பாதுகாக்க, பிற நாடுகளைவிட இந்தியாவில் சட்டத்தின் கரங்கள் வலுவாகவே உள்ளன. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசின் பிற கரங்களான விசாரணை மன்றம், காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், முதியோர், சிறார்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்!

பாலியல் குற்றங்கள், ஆள்கடத்தல், ஆசிட் வீச்சு.. பெண்கள் மீதான வன்முறைகளின் குவியலாகும் இந்தியா!
பாலியல் குற்றங்கள், ஆள்கடத்தல், ஆசிட் வீச்சு.. பெண்கள் மீதான வன்முறைகளின் குவியலாகும் இந்தியா!

பெண்களுக்கு எதிரான குற்றங்களில், 'வல்லரசு' தகுதிக்கான போட்டிக்களத்தில் இருக்கும் இந்தியாவுக்கே முதலிடம் கிடைத்திருக்கிறது. "பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே" என்ற பாரதிதாசனின் சிந்தனையை ஒவ்வொரு இந்தியனும் புதுப்பித்து உச்சரிக்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். 

பாலியல் ரீதியான பாதிப்புக்கு ஆளானவர்கள், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை உலகிற்கு உணர்த்த சமூகவலைதளங்கள் உதவியுடன் '#MeToo' என்ற ஹேஷ்டேகுகள் மூலம் பிரசாரமாக முன்னெடுத்தபோதுதான், இந்தத் 'தகுதி' குறித்து வெளியில் தெரிய வந்திருக்கிறது. ஹாலிவுட் தாயரிப்பாளர், 'ஹார்வே வின்ஸ்டீன்' (Harvey Weinstein) மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வெளியான நிலையில் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ (Alyssa Milano) ட்விட்டர் மூலம் அதை பிரசாரமாகக் கொண்டு போனார். பாலியல் கொடுமைகளுக்கு ஆளான சாதாரண நபர் முதல் பேராளர்கள் வரையில், தங்கள் அனுபவத்தை வெளிப்படையாக அதில் எழுத ஆரம்பித்தார்கள். உலகளாவிய வல்லுநர் குழு, இந்தக் கருத்துகளை விவாதித்ததோடு கருத்துக் கணிப்பையும் நடத்தியது. பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் முதல் பத்து நாடுகளில் இந்தியாவின் பெயர் வந்திருக்கிறது. அதிலும் முதல் இடம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

ஐ.நா. உறுப்பு நாடுகள் என்றளவில் கணக்கிட்டாலும் அதில் 193 நாடுகள் இருக்கின்றன, கருத்துக்கணிப்பின் கூற்றுப்படி, அதில்192 நாடுகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா முதலிடம் பிடித்திருக்கிறது. இந்திய அளவில் எந்த மாநிலம் இந்தக் கொடுஞ்செயலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்ற ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் முன்னணியில் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். பாலியல் குற்றங்கள், ஆள்கடத்தல், ஆசிட் வீச்சு போன்ற 'சிறப்புமிகு' இடங்களை தலைநகர் டெல்லி தட்டிச் சென்றிருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) ஏப்ரல் 2018-இல் வெளியிட்டுள்ள  அறிக்கையில், 'கடந்த நான்கு ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இந்தியாவில் 34 சதவிகிதம் அதிகரித்து உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களின் சராசரி வயது 18 முதல் 30 வரையே என்பதோடு, இந்தக் குற்றங்களைச் செய்வதில் குறிப்பிட்ட பெண்ணின் கணவர், உறவினர்களே அதிகம் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது. 2012 முதல் 2015-ஆம் ஆண்டுவரை 41.7 % முதல் 53.9 % வரை குற்றங்கள் அதிகரித்துள்ளன. துணிச்சலாகப் புகார் கொடுக்கும் மனநிலைக்குப் பெண்கள் வந்திருப்பதாகவும் இதைப் பார்க்கலாம்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைச் சட்டம் என்ன சொல்கிறது?

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005-இன்படி (Prevention of Domestic Violence Act, 2005) கணவன், மாமியார் மற்றும் பெற்றோர் போன்ற உறவு முறைகள் ஒரு பெண்ணை அடித்தோ, துன்புறுத்தியோ கொடுமைப் படுத்தினால், இந்தச் சட்டத்தின் அடிப்படையில் போலீஸில் புகார் அளிக்கலாம். இந்தச் சட்டத்தின்படி, கணவர், மாமியார் அல்லது புகுந்தவீட்டினர் பெண்களைத் துன்புறுத்தினால், அந்தப் பெண் புகார் அளித்து அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரலாம். போலீஸ் என்றில்லை, மாவட்ட பாதுகாப்பு (ஆட்சியர், வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அதிகாரி) அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் டி.ஐ.ஆர் (Domestic Incident Report) பதிவு செய்யப்படும். சர்வதேச மகளிர் ஆராய்ச்சி மைய ஆய்வறிக்கை, சிறார் திருமணத் தடைச் சட்டம்-2006 (The Prohibition of Child Marriage Act,2006)-ஐ சாதாரணமாக மீறுவது குறித்துச் சுட்டிக் காட்டுகிறது. இந்த மீறலில் 48 சதவிகிதப் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அந்தக் கணக்குப்படி, குழந்தைத் திருமணத்தை நடத்துவதில், ஊக்கப்படுத்துவதில் உலகளவில் இந்தியாவுக்கு 13-ஆவது இடம் கிடைத்திருக்கிறது. உரிய ஆதாரங்களோடு இதுகுறித்தப் புகாரினை அளித்தால் 'சிறார் திருமணத் தடைச் சட்டம் 2006' -இன்படி நடவடிக்கை எடுக்க முடியும். எதிர்காலத்தில் குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்படுவதோடு, அதில் ஆர்வம் காட்டுகிறவர்களை சிறைக்கும் அனுப்பி வைக்க முடியும்.

பணிபுரியும் பெண்களுக்கு அவர்களின் பிரசவ காலத்தின்போது, சம்பந்தப்பட்ட நிறுவனம் 80 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும், மருத்துவச் செலவையும் வழங்க வேண்டும் எனக்கூறும், பிரசவகால பலன்கள் சட்டம் 1861 (Maternity Benefit Act 1861), கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து, கருக்கலைப்பு செய்வதற்கு எதிரான மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புச் சட்டம் 1971, (Medical Termination of Pregnancy Act,1971), பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொந்தரவுகளைத் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் (Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act 2013) சட்டம், பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் தடைச் சட்டம், 1986 (Indecent Representation of Women (Prevention) Act,1986) சிறப்புத் திருமணச் சட்டம், 1954 (Special Marriage Act, 1954), வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961 (Dowry Prohibition Act, 1961), இந்திய  விவாகரத்துச் சட்டம் 1969, (Indian Divorce Act, 1969), சம ஊதியச் சட்டம் 1976 (Equal Remuneration Act 1976), தேசிய மகளிர் ஆணையச் சட்டம் 1990 (National Commission for Women Act, 1990)... என்று பெண்களைப் பாதுகாக்க, பிற நாடுகளைவிட இந்தியாவில் சட்டத்தின் கரங்கள் வலுவாகவே உள்ளன. அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அரசின் பிற கரங்களான விசாரணை மன்றம், காவல்துறை உள்ளிட்ட அமைப்புகளும் வலுவாக இருக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், முதியோர், சிறார்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்!

'எதையாவது சொல்லவேண்டும் என்றால், அதை ஆணிடம் சொல்லுங்கள். ஏதாவது காரியம் முடிய வேண்டும் என்றால் அதைப் பெண்ணிடம் சொல்லுங்கள்' என்று ஓங்கி உச்சரித்த இங்கிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் மார்கரெட் தாட்சர் போன்றவர்கள், இங்கும் தோன்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.