Published:Updated:

அனுதினத் தாக்குதல்... ஐபோனை விட சல்லிசான துப்பாக்கிகள்! அமெரிக்க நிலவரம்

அனுதினத் தாக்குதல்... ஐபோனை விட சல்லிசான துப்பாக்கிகள்!  அமெரிக்க நிலவரம்
அனுதினத் தாக்குதல்... ஐபோனை விட சல்லிசான துப்பாக்கிகள்! அமெரிக்க நிலவரம்

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் வேட்டையாடும் சமூகமாகவும், மக்கள்தொடர்பு அதிக இடைவெளிகளுக்குள் இருந்த சமூகமாகவும் இருந்துவந்தது. வேட்டையாடவும், கொள்ளையர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவும் ஆயுதம் அத்தியாவசியப் பொருளாக இருந்தது.

சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதா சமாதியில் ஒரு காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி ஒரு நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் நடந்திருந்தால்... அவர்கள் இதனை வாரம் ஒருமுறை இப்படி ஒரு நிகழ்வு இங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது என வலியுடன் சொல்லியிருப்பார்கள். காரணம், நம் ஊரில் நாளொன்றுக்கு அரசியல்வாதிகள் விடும் கண்டன அறிக்கைகளைப்போல அமெரிக்காவில் துப்பாக்கிச் சம்பவங்கள் பற்றிய செய்திகள் இருக்கும் என்பதுதான் இன்றையச் சூழல். ஒசாமாவை வீழ்த்துவதுதான் லட்சியம் என்று ரீகன் காலத்து விதையை புஷ் காலம் வரை அறுக்க முடியாமல் அமெரிக்கா திண்டாடியது. ஆனால், உண்மையிலேயே அமெரிக்காவில் தீவிரவாதிகள் மட்டும் பிரச்னை அல்ல. துப்பாக்கிக் கலாசாரமும் பிரச்னைதான் என ஒவ்வோரு முறையும் அமெரிக்கா அழுத்தம் திருத்தமாகக் கூறிக்கொண்டே இருக்கிறது. 

அமெரிக்கா ஆரம்ப காலத்தில் வேட்டையாடும் சமூகமாகவும், மக்கள்தொடர்பு அதிக இடைவெளிகளுக்குள் இருந்த சமூகமாகவும் இருந்துவந்தது. வேட்டையாடவும், கொள்ளையர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவும் ஆயுதம் அத்தியாவசியப் பொருளாக இருந்தது.

அப்படி இருந்த துப்பாக்கி இன்று ஐபோன் விலையைவிட குறைவான விலைக்குக் கிடைப்பதுதான் அதிர்ச்சியான விஷயமாக மாறியுள்ளது. AR-15 எனும் ரக துப்பாக்கிகள் 30,000 ரூபாயில் ஆரம்பித்து கிடைக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். ஏன் இந்த ரக துப்பாக்கிக்கு இவ்வளவு கிராக்கி என்றால் அமெரிக்காவில் நடந்துள்ள தனிமனித துப்பாக்கிச் சூடுகளில் பெரும்பாலான தாக்குதல்கள் இந்தத் துப்பாக்கியால் நடத்தப்பட்டவைதாம் என்கிறது எஃப்.பி,ஐ.

`கையில் கிடைக்கும் பொருளை எல்லாம் எடுத்து அடிப்பியா' என நாம் எல்லோரும் மிகச் சாதாரணமாகக் கேட்கும் கேள்வியை, அமெரிக்கா அழுத்திக் கேட்க வேண்டிய சூழலில் உள்ளது. ஆம், கையில் எடுத்தால் துப்பாக்கி வருமளவுக்கு அமெரிக்காவில் துப்பாக்கி மலிவு. நெறிமுறைகளும் கழுத்தை நெரிக்கவில்லை என்கின்றனர் அமெரிக்கர்கள். சின்ன சின்ன காரணங்களுக்காகக்கூடத் துப்பாக்கியைத் தூக்கும் மனிதர்கள் நிறைந்த தேசமாக மாறிவிட்டது அமெரிக்கா. `வேலையைப் பறித்துவிட்டார்கள்’ என்பதற்காக நிறுவனத்தில் உள்ள 14 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளான் ஓர் இளைஞன். தனது வாகனத்தைச் சரிசெய்யக் கொடுத்த இடத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னைக்காக, எட்டுப்  பேரைச் சுட்டுக்கொன்றுள்ளார் ஓர் ஆசிரியர். வெறுப்பு அரசியலும், இன  துவேஷமும் திட்டமிட்டு வளர்க்கப்படும் இன்றையச் சூழலில், அமெரிக்காவில் அதிகரித்துவரும் துப்பாக்கிக் கலாசாரம் அங்குள்ள இந்தியர்களுக்கும் ஆபத்தாக வளர்ந்து நிற்கிறது.

கடந்த 68 ஆண்டுக் காலத்தில் நிகழ்ந்த மோசமான துப்பாக்கிச் சூடுகளை எடுத்துக்கொண்டால், 32 சம்பவங்களில் 23 தருணங்களில் கொலையாளிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் காரணமாக இருந்ததில்லை என்பதுதான் அதிர்ச்சியான விஷயம். அங்கீகாரம் கிடைக்காதது, வேலை - குடும்பம் இரண்டையும் சமாளிக்க முடியாத சூழல், கோபம், இயலாமையின் வெளிப்பாடு என மனநிலையில் ஏற்படும் மாறுதல்கள் துப்பாக்கி முனையில் டீல் செய்யப்படுகின்றன. `துப்பாக்கிகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என 75 சதவிகித அமெரிக்கர்கள் ஒருகட்டத்தில் கருத்துத் தெரிவித்தனர். `ஒருவர் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டால், அவரின் பின்னணியை ஆராய வேண்டும். தவறான பின்னணி கொண்டவர்களின் கைகளுக்குத் துப்பாக்கி போகக் கூடாது. எவருக்குமே, கேட்ட உடனே லைசென்ஸ் கொடுத்துவிடக் கூடாது’ என ஏகப்பட்ட விஷயங்களை அவர்கள் சொல்கிறார்கள்.

தேசிய ரைஃபிள் அசோசியேஷன் மற்றும் அமெரிக்கத் துப்பாக்கி உரிமையாளர்கள் சங்கம் போன்றவற்றிடம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் 435 பேரில், 232 பேர் நன்கொடை பெற்றவர்கள். இவர்களைத் தாண்டி, துப்பாக்கி விற்பனையை எப்படி அரசு தடுக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி. அமெரிக்கர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்ப ட்ரம்ப் ஒரு புதிய ஐடியாவோடு வந்தார். ``அமெரிக்கப் பள்ளிகளில் 5- ல் ஓர் ஆசிரியருக்குத் துப்பாக்கியும், அதற்கான பயிற்சியும் வழங்கப்படும்'' என்றார். ``இது ஒரு காவலாளியை நியமிப்பதைவிடவும் குறைந்த செலவு'' என்றார். துப்பாக்கி இருப்பது இப்போது ஆசிரியர்கள் கையில். மறைமுகமாகப் பார்த்தால் இதன்மூலம் அமெரிக்காவின் துப்பாக்கி வர்த்தகம் 10 - 15 சதவிகிதம் அதிகரிக்குமாம். 

இதுகுறித்து அமெரிக்காவில் ஐடி துறையில் பணிபுரியும் ஒருவரிடம் கேட்டோம் ``அவர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிறது என்ற செய்தி எப்போதுமே இருக்கும். அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாட்டில் அதுவும் துப்பாக்கி வாங்குவது என்பது எளிய நடைமுறையாக இருக்கும் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுப்பது அவ்வளவு எளிதல்ல. பணிச்சுமை, குடும்பச் சூழல் போன்றவை பெரும்பாலான துப்பக்கிச் சூடு சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் திடீரென ஒரு இடத்தில் நடப்பவைதாம். ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் இதே நிலைதான், மொத்த அமெரிக்காவும் அச்சத்தில் இருக்கிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. மக்களின் மனநிலையைப் பொறுத்து இது எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். எல்லா நாடுகளிலும் இது போன்ற துப்பாக்கி வாங்கும் வசதி இருந்தால் இது எல்லா நாடுகளிலும் நடக்கும். அதனால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான நெறிமுறை வலுப்படுத்தப்பட்டால் மட்டுமே இதைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

ஃப்ளோரிடாவுக்குப் பிறகு ஏதாவது மாற்றம் நடக்கும் என்று இருந்தவர்களுக்கு, இந்த வாரம் அமெரிக்காவின் முகம் மாறவில்லை என்று அறிவித்துள்ளது. யூ-டியூப் தலைமையகத்தில் ஒரு பெண் நுழைந்து அங்குள்ளவர்களைச் சரமாரியாகச் சுட்டுவிட்டுத் தானும் சுட்டுக்கொண்டு இறந்துவிடுகிறார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, ``அவரது வீடியோக்களுக்குச் சரியான பணமும், வியூஸும் கிடைக்கவில்லை'' என்ற பதில்தான் பிரதானமாக உள்ளது. இதற்கு யூ-டியூப் தரப்பு, ``இவையெல்லாம் அடிப்படை விதிகளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண் இதனைப் புரிந்துகொள்ளவில்லை'' என்று பதிலளித்துள்ளது. அரை நிர்வாணமாக ஒரு 25 வயது இளைஞன் ஏப்ரல் 22ம் தேதி நாஷ்வேலே பகுதியில் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். அந்த இளைஞனை நேற்று கைதுசெய்துள்ளனர். அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்கிறது போலீஸ் தகவல். காலங்காலமாக அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டை அமெரிக்காவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. 

இதன் அடுத்தகட்டம்தான் மேரிலாண்டில் நடைபெற்ற துப்பாக்கிசூடு. கேப்பிட்டல் கேசட் பத்திரிகையினுள் 320 வயதுள்ள இளைஞர் துப்பாக்கி மற்றும் அதிநவீனத் தாக்குதல் ஆயுதங்களுடன் நுழைந்து சரமாரியாகச் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெரார்டு ராமோஸ் என்பரை சந்தேகிக்கிறது. காரணம் அவர் இந்தப் பத்திரிகை குழுமத்தின் மீது 2012 ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இவர்தான் தாக்குதலுக்குக் காரணம் என்று இன்னமும் போலீஸ் உறுதிசெய்யவில்லை. இந்தத் தாக்குதலில் 2 எடிட்டர்கள், 2 நிருபர்கள், 1 விற்பனை அதிகாரி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

`எண்ணெய் இருக்கும் இடத்தில் எல்லாம் அமெரிக்கா இருக்கும். அந்த இடத்தில் எல்லாம் அமெரிக்கத் துப்பாக்கிகள் வெடிக்கும்' என்பது நீண்ட நாள் வரலாறு என்றால், துப்பாக்கி வெடிக்காத அமெரிக்கத் தெருக்களே இல்லை என்ற நிகழ்கால வரலாற்றையும் அமெரிக்கா எழுதிக்கொண்டிருக்கிறது. குடும்பக் கட்டமைப்புகளுக்குள் வலுவிழந்துவிட்டது அமெரிக்கா. ஆம், 2006 - 2014-ஆம் ஆண்டுக்குள் அந்த நாட்டில் பெண்களால் 760 ஆண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். குடும்பப் பிரச்னைகள்தாம் பிரதானமாக உள்ளன. கணவன், காதலன், முன்னாள் கணவனைத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்று எச்சரிக்கிறது எஃப்.பி.ஐ.

அமெரிக்காவின் வேலைச் சூழல், குடும்பச் சூழல் மோசமாகி வருகிறது, துப்பாக்கி விற்பனை அதிகரிக்கிறது, துப்பாக்கி எளிதாகக் கிடைக்கிறது. இவையெல்லாம் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால், இதைவிட்டுவிட்டு ``சுவர் கட்டுகிறேன், சிறந்த அமெரிக்காவை உருவாக்குவேன்'' என்றெல்லாம் சொல்வதில் அர்த்தமே இல்லை. சிறந்த அமெரிக்காவெல்லாம் தானாக உருவாகட்டும்; சிதறும் அமெரிக்காவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள். துப்பாக்கியைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள், ட்ரம்ப். இது உங்களுக்கும், நாட்டுப் பாதுகாப்புக்கும் மிகவும் நல்லதாக இருக்கும் என்கிறார்கள் அமெரிக்கச் சமூக ஆர்வலர்கள். அமெரிக்கா உலகப் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை உருவாக்குவேன். பின்லேடன்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்வேன் என்று உலகப் பயங்கரவாதத்துக்குப் பாதுகாவலனாய் இருக்கிறேன் என்கிறது. உள்ளூரில் துப்பாக்கியை யார் கட்டுப்படுத்துவது என்பதற்கு பதிலில்லாமல் இருக்கிறது அமெரிக்கா. 

அடுத்த கட்டுரைக்கு