Published:Updated:

ஸ்ரீநகர் தாக்குதல்: பாக். தொடர்பு அம்பலம்!

ஸ்ரீநகர்:  ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப். முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு உள்ள தொடர்பு அம்பலமாகி உள்ளது.

காஷ்மீரில் நேற்று முன்தினம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் தாக்குதல் நடத்தினர். கிரிக்கெட் வீரர்கள்போல உடை அணிந்து வந்தவர்கள் நடத்திய தாக்குதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் பலியாகினர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்பது பின்னர் தெரிய வந்தது.

தற்கொலைப் படை பிரிவைச் சேர்ந்த அவர்களில் இருவரை ராணுவத்தினர் தாக்குதல் நடந்தபோதே சுட்டுக் கொன்றனர். இரண்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர். அவர்களை பிடிக்க காஷ்மீர் மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சத்பல் பகுதியில் தப்பிச் சென்ற தீவிரவாதிகல் இருவரும் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து ராணுவத்தினர் விரைந்து சென்று அந்தப் பகுதியை முற்றுகையிட்டனர். தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீது , ஒரு நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். ராணுவத்தினர் அவரை  சுற்றி வளைத்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அந்த நபரை ராணுவத்தினர் உயிரோடு பிடித்தனர்.

ராணுவத்தினர் நடத்திய விசாரணையில், அந்தத் தீவிரவாதியின் பெயர் அபு தலிப் என்ற தல்கா என்று தெரிய வந்தது. இவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர். தீவிரவாதி அபு தலிப்பிடம் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அதில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் தொலைபேசி எண்கள் உள்ளன. இதன் மூலம் இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு அம்பலமாகி இருக்கிறது.

இதற்கிடையே மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடி விட்ட மற்றொரு தீவிரவாதி எங்கு பதுங்கி இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரையும் உயிரோடு பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

தீவிரவாதிகளுக்கு உதவி செய்த காஷ்மீரைச் சேர்ந்த பஷீர் என்பவரும்  போலீஸில் பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.