Published:Updated:

''மது விற்க விடலைனு மாடுகளைக் கொன்னுட்டாங்க!” - கருமத்தம்பட்டி சோகம்

''மது விற்க விடலைனு மாடுகளைக் கொன்னுட்டாங்க!” - கருமத்தம்பட்டி சோகம்

அந்த அற்புத ஊரில் ஓர் ஆசாமி சட்டத்துக்கு விரோதமாக மது விற்பனை செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்மீது புகார் கொடுத்தவரின் மாடுகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்துவிட்டார் என்று கிளம்பியிருக்கும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

''மது விற்க விடலைனு மாடுகளைக் கொன்னுட்டாங்க!” - கருமத்தம்பட்டி சோகம்

அந்த அற்புத ஊரில் ஓர் ஆசாமி சட்டத்துக்கு விரோதமாக மது விற்பனை செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்மீது புகார் கொடுத்தவரின் மாடுகளுக்கு விஷம் வைத்துக் கொலை செய்துவிட்டார் என்று கிளம்பியிருக்கும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
''மது விற்க விடலைனு மாடுகளைக் கொன்னுட்டாங்க!” - கருமத்தம்பட்டி சோகம்

தொடர் போராட்டங்களால் டாஸ்மாக் கடையைத் தங்கள் ஊருக்குள்ளிருந்து விரட்டி அடித்து...  ‘டாஸ்மாக் இல்லாத டவுன்’ என்று பெயரெடுத்த ஊர் கருமத்தம்பட்டி. அந்த ஊரில் ஓர் ஆசாமி சட்டத்துக்கு விரோதமாக மது விற்பனை செய்ததோடு மட்டுமல்லாமல், அவர் மீது புகார் கொடுத்தவரின் மாடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டார் என்று கிளம்பியிருக்கும் புகார், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவையை அடுத்துள்ளது கருமத்தம்பட்டி பேரூராட்சி. 2017-ம் ஆண்டின் இறுதிவரை கருமத்தம்பட்டியில் எந்தப் பக்கம் திரும்பினாலும் டாஸ்மாக் கடைகளாக இருந்தன. மொத்தம் 12 டாஸ்மாக் கடைகள். `நெடுஞ்சாலையோரம் இருக்கும் கடைகளை மூட வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் எதிரொலியாக ஏழு கடைகள் இழுத்து மூடப்பட்டன. அந்தச் சமயத்தில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக்குக்கு எதிராகப் பெண்கள் ஒன்றுதிரண்டு போராடினார்கள். அதில், கருமத்தம்பட்டி பெண்கள் வெற்றிவாகை சூடினார்கள். மீதமிருந்த ஐந்து கடைகளையும் தங்களின் விதவிதமான தொடர் போராட்டத்தின் மூலம் வீழ்த்தினார்கள். இதனால்,  கருமத்தம்பட்டி கோவையைத் தாண்டி தமிழக அளவில் பிரபலமானது. மது வாடை இல்லாத ஊராக அறிப்பட்ட  அந்த ஊரில், இப்போது மதுவை வைத்தே சர்ச்சை வெடித்திருக்கிறது. 

கருமத்தம்பட்டி அருகே உள்ள குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சுப்பையன், பொன்னம்மாள் தம்பதியினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தனது மாட்டையும், கன்றையும் தண்ணீர் காட்டுவதற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் சுப்பையன். தண்ணீர் குடித்த அடுத்த ஒருமணி நேரத்துக்குள்ளாக அவரது மாடும் கன்றும் பரிதாபமாக உயிரிழந்தது. ஆரம்பத்தில் என்னவென்று புரியாமல் பதறியவர்கள், இப்போது தங்களது தோட்டத்துக்கருகில் மது விற்பவர்கள்தாம் மாடுகளுக்கு விஷம் வைத்துவிட்டார்கள் என்று `திடுக்' புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாகப் பொன்னம்மாளிடம் பேசினோம், ``டாஸ்மாக் கடையை ஒழிக்கிறதுக்கு இங்க உள்ள மக்கள் நடத்திய போராட்டமெல்லாம் பிரயோஜனமே இல்லீங்க. சாராயத்தை அரசாங்கம் வித்தா என்னா, ப்ளாக்ல மக்கள் வித்தா என்ன? எங்க தோட்டத்துக்குப் பக்கத்துத் தோட்டத்துல பலநாளா ப்ளாக்ல சரக்கு விக்கிறாங்க. பக்கத்து வீட்டுக்காரவங்கங்கிறதால ஆரம்பத்துல நாங்க எதுவும் சொல்ல முடியாம இருந்தோம். எங்க வீட்டு நாய், அங்க சாராயம்  குடிக்க வர்றவங்களையெல்லாம் கடிக்க வருதுனு சொல்லி கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரச்னை பண்ணாங்க.  உங்க நாயை ஒழுக்கமாக் கட்டிப்போட்டு வையுங்க, இல்லைன்னா நடக்குறதே வேறன்னு மிரட்டுனாங்க.

குடிக்க வர்ற குடிகாரங்களுக்காக, எங்க குடும்பத்துல ஒருத்தனா இருக்குற நாயை நாங்க எதுக்குங்க அடக்கிவைக்கணும்?  எங்க பாதுகாப்புக்குத்தானே அது குரைக்குது. நாங்க ரொம்ப நாளா அடக்கி வெச்சிருந்த கோபம் பொத்துக்கிச்சு. போலீஸுக்குத் தகவல் சொல்லிட்டோம். ஆனால், போலீஸ் அவங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்கலை. நாங்கதான் தகவல் சொன்னோம்னு சாராயம் விக்கிறவங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுபோச்சு. சனிக்கிழமை சாயங்காலம் எங்க வீட்டுக்கு வந்து பயங்கரமாச் சண்டை போட்டாங்க. நாங்க அவங்களை எதுவுமே கண்டுக்கலை. `உன்னால முடிஞ்சதப் பாத்துக்க’னு அமைதியா இருந்துட்டோம். மறுநாள் காலையில நல்லா தண்ணி குடிச்சிட்டிருந்த மாடு சடார்னு இழுத்துக்கிட்டு கீழ விழுந்து கொஞ்ச நேரத்துல செத்துப்போச்சு. 

எங்களுக்கு ஒண்ணுமே புரியல. என்ன சீக்கா இருந்தாலும் இப்படிச் சாகாதேனு சந்தேகம் வந்தாலும், எங்களால ஏன் செத்துச்சுன்னு யூகிக்க முடியல. செத்த மாடு தண்ணி குடிச்ச அதே தொட்டியில  தண்ணி குடிச்ச கன்னுக்குட்டியும் மாட்டைப்போலவே மாண்டுபோச்சு. அப்போதான் அந்தத் தண்ணில ஏதோ கலந்துருக்குனு தெரிஞ்சிச்சு. எங்களுக்கு யாரும் எதிரி கிடையாது. ஆனா, மது விக்கிறாங்கனு நாங்க கம்ப்ளைன்ட் பண்ணதால அவங்கதான் இப்படிப் பண்ணியிருக்கணும். ஆசை ஆசையா வளர்த்த மாடும் கன்னும் செத்துக்கிடக்கிறதைப் பாக்கும்போது என் உசுரே என்ன விட்டுப் போன மாதிரி ஆகிருச்சு. மது வித்தவங்கதான் எங்கமேல உள்ள கோபத்துல மாட்டுத் தொட்டியில விஷம் கலந்துருக்காங்க. இந்தப் பாவம் அவங்கள சும்மா விடுமா? போலீஸ்ல புகார் கொடுத்திருக்கோம். நடவடிக்கை எடுப்பாங்கனு நம்புறோம்'' என்கிறார் கலங்கிய கண்களோடு.  

கருமத்தம்பட்டி பொதுமக்கள் சிலரிடம் பேசியபோது, ``டாஸ்மாக் இல்லைங்கிறதை இங்க உள்ள சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கிறாங்க. வெளியூர்லயிருந்து வாங்கிட்டு வந்து விலை கூட்டிவெச்சு விக்கிறாங்க. ஹோட்டல், பெட்டிக்கடை, மளிகைக்கடை, வீடுகள்னு பல இடங்கள்ல மது விற்பனை அமோகமா நடக்குது. இதை போலீஸும் கண்டுக்கிறதில்லை. உடனே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்கள் வேதனையோடு.

இதுதொடர்பாகக் கருமத்தம்பட்டி போலீஸாரிடம் விசாரித்தோம், ``புகாரின்பேரில் இறந்த மாடு போஸ்ட்மார்டம் செய்யப்பட்டுள்ளது. ரிசல்ட் வந்த பிறகுதான் இறப்புக்கான காரணம் தெரியும். சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திவருகிறோம். புகார் உண்மையெனில், கடுமையான நடவடிக்கை இருக்கும்'' என்று கறாராகச் சொல்கிறார்கள்.

பழி தீர்ப்பதற்கு மாடுகளையா சாகடிக்க வேண்டும்?