Published:Updated:

இதையெல்லாம் செய்தால் ஏ.டி.எம். கொள்ளைகளைத் தடுக்கலாம்!

இந்தியாவில் மட்டுமே ஓ.டி.பி எண் கேட்பது போன்ற பரிமாற்றங்கள் இருக்கின்றன. வேறெந்த நாட்டிலும், இந்த ஓ.டி.பி கேட்கும் சிஸ்டம் கிடையாது. தினமும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மொத்தமாக வங்கிக்கணக்கில் எடுக்க முடியாதபடி பயனாளிகளே வங்கியில் சொல்லி அதற்கேற்றபடி `ஃபிக்ஸ்' செய்து வைத்துக்கொள்ளலாம்.

இதையெல்லாம் செய்தால் ஏ.டி.எம். கொள்ளைகளைத் தடுக்கலாம்!
இதையெல்லாம் செய்தால் ஏ.டி.எம். கொள்ளைகளைத் தடுக்கலாம்!

ஏ.டி.எம். மில் நடக்கும் தொடர் திருட்டுகளால் பயனாளிகள் அதிர்ந்துபோய்க் கிடக்கின்றனர். கைவரிசை நபர்கள் ஏதோ ஒருமுறைதான் போலீஸ் பிடியில் சிக்குகிறார்கள். `திருடுவதற்கு எப்படியெல்லாம் திட்டமிட்டோம்' என்று அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தைக் கையில் வைத்துக்கொண்டு, போலீஸாரும் பொதுமக்களை உஷார் படுத்தும் டிப்ஸ்களை வழங்குகிறார்கள். ஆனால், `டிப்ஸ்'களை ஒவ்வொரு முறையும் புதுப்பித்தே பொதுமக்களுக்குத் தரவேண்டியுள்ளதை, அடுத்தடுத்து சிக்கும் கொள்ளையர்களின் வாக்குமூலம் உணர்த்துகிறது. சென்னை சைபர் க்ரைம் போலீஸாரின் டெக்னாலஜி, அட்வான்ஸ்டு தரத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், இந்தக் கொள்ளைகளின் ஆணிவேரைத் தொடமுடியவில்லை என்பதையே, தொடரும் சம்பவங்கள் சொல்கின்றன. கடந்த ஜூன் மாதம் ஒன்றாம் தேதி, சென்னையில் பிடிபட்ட பீகார் மாநில ஏ.டி.எம். கொள்ளையர்களின் கதையும் இதுதான். 

பீகார் கொள்ளையர்களின் டெக்னிக்

சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். எழிலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக ஊழியர். அதே, எழிலகம் வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையத்தில், சீனிவாசன் கணக்கில் இருந்த ரூ.20 ஆயிரம் உள்பட, ஐந்து பேரின் பணம் நூதன முறையில் மாயமாகியுள்ளது. புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் தீபா ஆகியோரைக் கொண்ட போலீஸ் டீம், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவே, மனோகர் குமார், முன்னு குமார் என்ற இரண்டு வாலிபர்கள் சிக்கியுள்ளனர். பீகார் மாநிலம், `கயா' வைச் சேர்ந்த இவர்கள் இருவரும், தங்களது திருட்டுத் தொழிலுக்காகப் பல்வேறு இடங்களுக்குச் சென்றுவரவும், திருடியபின் சொந்த ஊருக்குப் போவதற்கும் விமானப் போக்குவரத்தையே பயன்படுத்தியுள்ளனர். ``ஏ.டி.எம்-மில் பணத்தை எடுக்கும் சில `கஸ்டமர்கள்', பணத்தை எடுத்த பின், அவசரத்தில் வங்கிப் பரிமாற்றத்தை `கேன்சல்' செய்யாமல் போய்விடுவார்கள். அதைத் துல்லியமாகக் கவனித்து அதையே எங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு திருடுவோம். சென்னை வால்டாக்ஸ் சாலையில் இதற்காகவே லாட்ஜில் அறை எடுத்து தங்குவோம். ஓராண்டுக்கும் மேலாக இப்படித் திருடி வந்தோம்" என்று, பிடிபட்டவர்கள் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வங்கிகளே காரணம் : 'சைபர் க்ரைம் எக்ஸ்பர்ட்' என்.கார்த்திகேயன்

நம்மிடம் பேசிய போலீஸ் துணை கமிஷனர் செல்வநாகரத்தினம், ``ஏ.டி.எம்-மில் எப்படித் திருடினோம்' என்று முன்னர் பீகாரில் பிடிபட்டவர்கள் சொன்னதாக வந்த டெக்னிக்கைப்  பத்திரிகைகளில் படித்துத்தான் இந்தளவுக்கு இவர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்" என்றார் ஆதங்கத்துடன். சைபர் குற்றங்கள் சார்ந்த துறை வல்லுநர் என்.கார்த்திகேயன், ``நமக்கான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்கும் இடத்திலிருந்தே குற்றங்கள் தொடங்குகின்றன என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. டெக்னாலஜி வளர்ச்சியடைவதற்கு முன்பு நமக்கு வழங்கிவந்த விசா, மாஸ்ட்ரோ போன்ற கார்டுகளையே இப்போதும் நம்மிடம், வங்கிகள் வழங்கிக் கொண்டிருக்கிறது. 2012 ம் ஆண்டே இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட `ரூபே' (Ru pay) என்ற இந்திய ஏ.டி.எம்., டெபிட் கார்டுகளைப் பற்றி மக்களிடம் வங்கிகள் தரப்பில் சொல்வதும் இல்லை. இந்தியாவில் உள்ளவர்களின் `ரூபே' கார்டுகளைப் பயன்படுத்தி, பணத்தையோ, பொருளையோ யாரோ வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். வழக்கம்போல நமக்கு செல்போனில், மெசேஜ் வந்து விடும். இதுகுறித்து நாம் சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்தால், குற்றவாளி இருக்கும் இடம் தெரிந்துவிடும்.

குற்றவாளி தப்பிச் செல்வதற்குள் மடக்கிப் பிடித்துவிடலாம். ரூபே கார்டைப் பயன்படுத்தி, இந்தியாவைத் தாண்டி வேறெங்கும் பணத்தை எடுக்கமுடியாது, பொருளை வாங்க முடியாது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பணம் எடுக்க வேண்டும் என்ற அவசியம் உள்ளவர்களுக்கான கார்டுகள்தாம், விசா, மாஸ்ட்ரோ போன்ற கார்டுகள். வெளிநாட்டிலும் பணம் எடுக்கக்கூடிய தேவை கொண்ட நபர்கள் வெறும் 3 விழுக்காட்டினர்தாம் இந்தியாவில் உள்ளனர். எஞ்சியுள்ள 97 விழுக்காட்டினர் இந்தியாவுக்குள்தான் பணத்தை எடுக்கிறார்கள், வர்த்தகத் தொடர்பும் கொண்டிருக்கிறார்கள். கூடுவாஞ்சேரியில் காய்கறி வியாபாரம் செய்கிற ஒருவருக்குக் குவைத்தில் போய் பணம் எடுக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இந்திய வங்கிகள் கொண்டிருக்கிற உலகளாவிய வர்த்தகம், அவர்களுக்கு வருகிற கமிஷன்களுக்காகப் பாமரன்களின் பணத்தை விலையாய்க் கேட்கிறது என்பதுதான் உண்மை. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூபே கார்டு வழங்க வேண்டும் என்று ஆர்.பி.ஐ ரூல்ஸ் சொல்கிறது. ரூல்ஸை இங்கே எத்தனை வங்கிகள் மதிக்கின்றன? ஏ.டி.எம்-மைப் பொறுத்தவரை அது இன்னொரு ஜெராக்ஸ் மெஷின்தான். கைவரிசை காட்டக்கூடிய நபர்கள், ஏ.டி.எம் கார்டு உள்ளே செல்லும் வழியில் ஸ்கிம்மர் எந்திரத்தைப் பொருத்தி விடுவார்கள். அந்த ஸ்கிம்மர், உள்ளே நுழையும் கார்டின் ஒரு காப்பியை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளும், வெறும் காப்பி மட்டுமல்ல, மொத்தத் தகவலும் அதில் போய்விடும். கம்பெனிகளில் என்ட்ரி ஆக பயன்படுத்தப்படும் ஆக்சஸ் கார்டுகளை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு, இந்தத் தகவலை அதில் பதிவேற்றம் செய்து கொள்வார்கள். அந்த கார்டுகளில் எந்தப் பெயரும் இருக்காது, சாதாரண ஆக்சஸ் கார்டு போலத்தான் இருக்கும்.

ஸ்கிம்மரும், சி.சி.டி.கேமராவும்

இப்போது, திருடர்களுக்குத் தேவை பின் நம்பர் மட்டும்தான். அதற்கும் வழி வைத்திருக்கிறார்கள். பின் நம்பர் போடுகிற இடத்தை வாட்ச் செய்யும் இடமாகப் பார்த்து ஒரு கேமராவை ஃபோகஸ் செய்து வைத்து விடுவார்கள், அந்த கேமரா வேலையைச் செய்து கொண்டிருக்கும். எந்த நேரத்தில் பணம் எடுக்கப்பட்டது, போடப்பட்டது என்ற `டைமிங்-மேட்ச்' வேலையும், அதன் கூடவே நடக்கும். ஏ.டி.எம்-மில் பின் நம்பரைப் போடும்போது ஒரு கையால் மூடியபடி நம்பரைப் போடச் சொல்லும், ஸ்கிரீன் திரையில் வந்தாலும், பணம் எடுக்கும் அவசரத்தில், அதை யாரும் பார்ப்பதில்லை. மோசடி ஆசாமிகள் தங்கள் திறமையைக் காட்டி, கையில் 500 கார்டும், ஐந்நூறு பின் நம்பரும் மொத்தமாக வைத்துக்கொண்டிருப்பார்கள். எந்த டைமிங்கில் எந்த கார்டு பயன்படுத்தப்பட்டது என்ற தகவலை, ஸ்கிம்மர், சி.சி.டி.வி. தரவுகளோடு ஒப்பிட்டு, அந்தந்த கார்டுகளில், கார்டுக்குச் சொந்தக்காரன் போல பதற்றமே இல்லாமல் பின் நம்பரைப் போட்டு பணத்தை எடுப்பார்கள். அடிப்படையிலிருந்தே நிறைய விஷயங்களை மாற்ற வேண்டிய பொறுப்பு நாட்டின் தலைமைக்கு இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமே ஓ.டி.பி எண் கேட்பது போன்ற பரிமாற்றங்கள் இருக்கின்றன. வேறெந்த நாட்டிலும், இந்த ஓ.டி.பி கேட்கும் சிஸ்டம் கிடையாது. தினமும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மொத்தமாக வங்கிக்கணக்கில் எடுக்க முடியாதபடி பயனாளிகளே வங்கியில் சொல்லி அதற்கேற்றபடி `ஃபிக்ஸ்' செய்து வைத்துக்கொள்ளலாம். நாம், பத்து லட்சத்தைக் கணக்கில் வைத்திருந்தாலும், திருடன்களால், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது. அந்தவகையில், நட்டத்தில் குறைந்த நட்டம் என்று ஓரளவுத் தப்பிக்கலாம். மொத்தமாகப் பணம் தேவை என்றால், வங்கிக்குப் போய் நாமே நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். இப்படியொரு சிஸ்டம் வங்கிகளில் இருக்கிறது என்பதை எத்தனை பொதுமக்களுக்கு வங்கிகள் சார்பில் தெரிவித்தார்களோ தெரியவில்லை. பணத்தைப் பறி கொடுத்ததும், ஸ்பாட்டுக்கு அத்தனை அதிகாரிகளும் வந்து விசாரிப்பார்கள். அப்போதுதான், அங்கே, சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை, `ஹாட் டிஸ்க்' கில் ஸ்டோரேஜ் நிரம்பிவிட்டதால், சி.சி.டி.வி. காட்சிகள் ஏதும், அதில் பதிவாகவில்லை என்றெல்லாம் கண்டுபிடிப்பார்கள். பணம் போனது போனதுதான்.

ஆர்.பி.ஐ.சொல்லும் கதையும், வங்கிகளின் நிலையும்...

ஆன் லைனில் வேலைதேடும் பட்டதாரி இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களிடம் ஸ்கிம்மர், கார்ட் மேட்ச்சிங், டைமர் செட்டிங் போன்ற வேலைகள் ஒப்படைக்கப்படுகிறது. அவர்களும் செய்கிறார்கள். மோசடி ஆசாமிகள், `ஒரு சர்வே எடுக்கிறோம், வீட்டிலிருந்தே அதற்கான வேலைகளைச் செய்து கொடுத்தால் போதும், நிறைய சம்பாதிக்கலாம்' என்று சொல்லி, இந்தக் `கார்டு மேட்ச்சிங்' வேலைகளை,  இளைஞர்களிடம் ஒப்படைக்கிறார்கள். வேலை இல்லாத கொடுமையில் தவிக்கும் இளைஞர்களுக்கு இதில் மறைந்துள்ள தவறுகள் குறித்து யோசிக்கவே நேரம் இருப்பதில்லை என்பது இன்னும் கொடுமையானது. வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டுவிட்டால், சம்பந்தப்பட்ட வங்கிக்கு மூன்று நாள்களுக்குள் புகார் அளித்தால், அடுத்த பத்து நாள்களில் அந்தப் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு வங்கி ஒப்படைக்க வேண்டும் என்பதும் ஆர்.பி.ஐ. விதிமுறையாக இருக்கிறது. இதுகுறித்து, 2017 ஜூலையில் ஆர்.பி.ஐ., அனைத்து வங்கிகளுக்கும் சர்க்குலரே அனுப்பியுள்ளது. அந்தத் தொகையை வங்கி இன்சூரன்ஸ் மூலம் எடுத்துக்கொள்ளலாம். வங்கியில் போய், `ஆர்.பி.ஐ-யில் இப்படி ஒரு ரூல்ஸ் இருக்கிறதே' என்று கேட்டால், `இந்த ரூல்ஸை நீங்களே டைப் பண்ணிக்கொண்டு வந்தீர்களா?' என்று கேட்கிறார்கள். அதன்பின்னர், அவர்கள் கண்முன்பாகவே, ஆர்.பி.ஐ. சைட்டில் போய் எடுத்துக்காட்டினால், ``ஆர்.பி.ஐ. சொல்லும் அத்தனை விதிகளையும் இங்கே ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்க முடியாது' என்கிறார்கள்.

வங்கிகளின் இந்தப் பதிலை ஆர்.பி.ஐ-யில் போய்ச் சொன்னால், `நாங்கள் சுற்றறிக்கை அனுப்பி அதைக் கடைப்பிடிக்க மட்டும்தான் வங்கிகளிடம் சொல்ல முடியும். கடைப்பிடிக்காத வங்கிகள்மீது நாங்கள் நடவடிக்கை எல்லாம் எடுக்கமுடியாது." என்று சுற்றலில் விடுகிறார்கள். இதுதான் வங்கிகளின் நிலையாக இருக்கிறது. ஏ.டி.எம். மோசடியில் இதுவரை மக்கள் இழந்துள்ள பணம் 30 ஆயிரம் கோடி ரூபாய். டிஜிட்டல் இண்டியாவாக நாடு, மாறத் தொடங்கிய தருணத்தில் ஏ.டி.எம். மற்றும் வங்கிகளின் பெயரைச் சொல்லி மோசடியில் ஈடுபட்டவர்களின் எண்ணிக்கை, கையைவிட்டுப் போன பணம், பலமடங்கு அதிகம்.ஏ.டி.எம்-மில் கார்டை சொருகிவிட்டு வெளியே இழுக்கும் போது மவுத் சைடு சில நேரங்களில் கையோடு வெளியில் வந்து விடும். ஏ.டி.எம்-மைப் பொறுத்தவரை அது `மோல்டட்' தான். அப்படி, கையோடு வெளியில் வருவது ஸ்கிம்மர்தான்... `ஏதோ கையோடு வந்துவிட்டதே' என்று, வந்த ஸ்கிம்மரையே மீண்டும் உள்ளே தள்ளி விட்டு, மீண்டும் மீண்டும் பின் நம்பரைப் போடும் அப்பாவிகளாக மக்கள் இருப்பதின் காரணம் அறியாமைதான்! அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டியாவது, வங்கிகளின் செயல்பாடு மாறவேண்டியது அவசியம்" என்றார். 

`உடனுக்குடன் புகார்தெரிவித்தால் நடவடிக்கை'

சென்னை மத்தியக் குற்றப்பிரிவின் போலீஸ் துணை கமிஷனர் எஸ்.ஆர்.செந்தில்குமார்,  ``காவலாளிகள் இல்லாத ஏ.டி.எம்-களைக் கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையாகவே இதை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்களைப் பொறுத்தவரை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பின் நம்பரைச் சொல்லி ஏ.டி.எம்-மில் பணம் எடுத்துத் தரச் சொல்வதை கட்டாயமாகத் தவிர்க்கும்படி தொடர்ந்து சொல்லி வருகிறோம். வங்கிகளின் மேலாளர்கள், ஊழியர்கள் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டமும் அடிக்கடி சென்னை கமிஷனரேட்டில் நடத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு தருவதும், அவர்களுக்கு உதவுவதும் இந்தக் கூட்டத்தில் முக்கிய அம்சமாக விவாதிக்கப்படுகிறது. வங்கிகளிலிருந்து பேசுவதுபோல் பேசி ஓ.டி.பி நம்பர் கேட்பது, ஏ.டி.எம்-களின் வழியாகப் பணத்தை எடுப்பது போன்றவற்றில் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்கள் புகாரை உடனுக்குடன் தெரிவித்தால், நடவடிக்கையை விரைந்து எடுக்கமுடியும். எந்த அக்கவுன்ட்டிலிருந்து பணம் எடுக்கப்படவுள்ளதோ, அதை உடனே தடுத்து நிறுத்தலாம்.

வங்கிகளில் நம் அக்கவுன்ட்டிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனுக்குடன் நமக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள். `ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்' என்று, ஒரு போன் நம்பரும் அதில் கொடுக்கிறார்கள். இது சென்னை போலீஸ் கமிஷனர் வலியுறுத்தல்படி மேற்கொள்ளப்பட்ட வங்கிகளின் நடவடிக்கைதான். இப்படிப் பல அம்சங்களை நாங்கள், வங்கிகளுக்கு ஆலோசனையாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். ஏ.டி.எம்-களில் பணத்தை லோடு செய்யச் செல்லும் ஊழியர்களையும் வரவழைத்து சில அறிவுரைகள் கொடுத்துள்ளோம். அதன்படி, ஏ.டி.எம். அருகே சந்தேக நபர் நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்கவும், ஏ.டி.எம் உள்ளே, கேமரா போன்று ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணித்து, தகவல் இருந்தால் உடனுக்குடன் தெரிவிக்கும்படியும் சொல்லியிருக்கிறோம்" என்றார். காவலாளிகளே இல்லாத ஏ.டி.எம்-கள், சென்னை முழுவதும் பரவலாக இருக்கின்றன. சில ஏ.டி.எம்-கள், தனியே பாதுகாப்பான அறையில் அமைக்கப்படாமல், வெளிப்புறச் சுவரிலேயே அமைத்திருக்கிறார்கள். சி.சி.டி.வி. கேமரா கண்ணில் படுமா என்று தேடினால், ஏ.டி.எம் இயந்திரம் இருக்கும் இடத்திலிருந்து நூறாவது மீட்டரில் உள்ள ஒரு பேக்கரியில்தான் ஒரு சி.சி.டி.வி. கேமரா இருக்கிறது....

நல்ல நல்ல ஏ.டி.எம்-கள், நல்ல நல்ல வங்கிகள்...!