Published:Updated:

நீதிமன்றத்தில் ஆஜரான 13 ரெளடிகள்! - ராமஜெயம் கொலை வழக்கில் நடப்பது என்ன?!

திருச்சி நீதிமன்ற வளாகம்

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலைச் சம்பவத்தில், சந்தேக ரெளடிகள் 13 பேரில் ஒருவர்கூட மிஸ் ஆகாமல் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான 13 ரெளடிகள்! - ராமஜெயம் கொலை வழக்கில் நடப்பது என்ன?!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலைச் சம்பவத்தில், சந்தேக ரெளடிகள் 13 பேரில் ஒருவர்கூட மிஸ் ஆகாமல் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

Published:Updated:
திருச்சி நீதிமன்ற வளாகம்

தி.மு.க முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012, மார்ச் 29-ம் தேதி, திருச்சி தில்லைநகரில் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தி, கொலைசெய்யப்பட்டார். திருச்சி கல்லணை அருகேயுள்ள திருவளர்சோலை பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ராமஜெயத்தின் சடலம், தமிழகத்தையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.

கடந்த 10 ஆண்டுகளாக சிபிஐ, சிபிசிஐடி எனப் பலர் விசாரித்தும் தற்போதுவரை குற்றவாளிகள் பிடிபடாமல் போக, தற்சமயம் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு, ராமஜெயம் கொலை வழக்கைக் கையிலெடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. அந்த வகையில், ராமஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய 13 ரெளடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக நீதிமன்ற ஒப்புதல் பெற, 13 ரெளடிகளையும் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பியிருந்தது சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக் குழு.

சந்தேக ரெளடி திண்டுக்கல் மோகன் ராம்
சந்தேக ரெளடி திண்டுக்கல் மோகன் ராம்

அதனடிப்படையில், சம்மன் பெறப்பட்ட சந்தேக ரெளடிகளான சாமி ரவி (ரவிக்குமார்), திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சத்யராஜ் (சீர்காழி சத்யா), தினேஷ், திலீப் (எ) லட்சுமி நாராயணன், தென்கோவன் (எ) சண்முகம், ராஜ்குமார், சிவா (குணசேகரன்), சுரேந்தர், கலைவாணன், லெஃப்ட் செந்தில் என 13 பேரில் ஒருவர்கூட ஆப்சென்ட் ஆகாமல், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நேரில் ஆஜராகினர். காலை 10 மணி முதலே சந்தேக ரெளடிகள் ஒவ்வொருவராகத் தங்களுடைய வழக்கறிஞர்களுடன் நீதிமன்றத்துக்கு வர, 11 மணிக்குள் 12 ரெளடிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ரெளடி லெஃப்ட் செந்தில் கடலூர் மத்தியச் சிறையிலிருந்து 12:30 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தார். அதையடுத்து, ராமஜெயம் கொலை வழக்கின் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு டி.எஸ்.பி மதன் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்தேக ரெளடிகள் 13 பேர் தரப்பும், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்துழைப்பதாகவும், அதேநேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தமில்லாமல் தங்களை இணைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான எஸ்.பி-தான் மனுத்தாக்கல் செய்து அனுமதி கோர வேண்டும் என்றும், டிஎஸ்பி தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறி வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 7-ம் நடைபெறும் எனவும் நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். வரும் 7-ம் தேதி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழு எஸ்.பி ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்வார் என்னும் பட்சத்தில், நீதிபதி அதன்மேல் விசாரணை செய்து, சந்தேக ரெளடிகளின் தரப்பு கருத்துகளைக் கேட்டறிந்த பின்னர்தான், உண்மை கண்டறியும் சோதனை செய்யலாமா என்பது குறித்து உத்தரவிடுவார்.

அதையடுத்து சந்தேக ரெளடியான சத்யராஜ் (எ) சீர்காழி சத்யாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் பெறுவதற்காக 13 பேரை நேரில் அழைத்திருந்தனர். சோதனைக்கு நாங்கள் எவ்வித ஆட்சேபனையும் செய்யவில்லை. அதேநேரம் எதனடிப்படையில் இந்த 13 பேர் பட்டியலையும் தயார் செய்தார்கள் என்று புரியவில்லை. சம்பந்தமே இல்லாத ஒரு லிஸ்ட்டாக இது இருக்கிறது. ஏன் இவர்கள் 13 பேரையும் குற்றவாளியாகக் கருதுகிறார்கள் எனவும் கேட்டிருக்கிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்.

தம்பி ராமஜெயம் படத்திற்கு மலர் தூவும் அமைச்சர் கே.என்.நேரு
தம்பி ராமஜெயம் படத்திற்கு மலர் தூவும் அமைச்சர் கே.என்.நேரு

அரசியல் காரணத்துக்காகத்தான் இந்த 13 பேரையும் இப்படியான பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். ஏனென்றால், ராமஜெயத்தின் குடும்பத்தார் கொடுத்திருக்கும் தகவல்களும், வழக்கு சம்பந்தமான நிபுணர்களின் கருத்துகளும் முரண்பாடாக இருப்பதாக சிபிஐ அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமஜெயம் குடிக்க மாட்டார் என அவர்களுடைய குடும்பத்தார் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ராமஜெயத்தின் உடல் ஆய்வில் ஆல்கஹால் இருந்தது தெரியவந்திருக்கிறது. மேலும், அதிகாரிகளின் சந்தேக- பட்டியலில் இறந்து போனவரின் குடும்பத்தினர் (ராமஜெயம்) யாருமே இல்லை. அவர்களையும் சேர்க்க வேண்டும்” என்றார்.