Published:Updated:

மோட்டிவ் 6

மோட்டிவ் 6

மோட்டிவ் 6

துடிப்பான பொண்ணு... இனிப்பான பேட்டி...

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உள்துறை அமைச்சர் ஜெகன்னாத் ராயுடன் தொழிலதிபர் ஆலோக் அகர்வால் உரையாடல் தொடர்ந்தது... 

''ஐயா... நீங்க ஏழைப்பட்ட ஜனங்களுக்கு சேவை பண்றதுக்குன்னே இருக்கீங்க. உள்ளாட்சித் தேர்தலுக்காக நீங்க பிரசாரத்துக்குப் போற இடங்களில் அலை அலையா வர்ற கூட்டத்தைப் பத்தி எனக்கு தகவல் வந்துக்கிட்டே இருக்குது.''

''கூட்டம் வர்றது சரிதான்யா! அது இந்தப் பத்திரிகைக் காரனுங்களுக்குப் புரிய மாட்டேங்குதே. ஏதாச்சும் அகராதி புடிச்ச மாதிரி வம்படி பண்ணிக்கிட்டே இருக்கானுங்க. பிளட் பிரஷரை நாமளா எதுக்கு ஏத்திக்கணும்? அதான் பத்திரிகை பாக்கறதையே விட்டுட்டேன்யா!''

''ஐயா, என்னோட 'ஜோதி' சேனலை மட்டும் இந்த லிஸ்ட்ல நீங்க சேர்க்கக் கூடாதுங்க. உங்க நிகழ்ச்சிகள் அத்தனையும் விரிவா, சூப்பரா காட்டணும்னு நான் உத்தரவே போட்டிருக்கேன்!''

மோட்டிவ் 6

''அது கரெக்ட்தான். உன்னை மாதிரி ஒருசில நட்பு மீடியாக்கள்தான்யா என் மனசுக்கு கொஞ்ச மாச்சும் ஆறுதலே! என்னைப்போன்ற நல்ல அரசியல்வாதிகளை நாட் டுக்கு சிறப்பாவே வெளிச்சம் போட்டுக் காட்டுறீங்க. உங்க டி.வி-யில இருந்து ஒரு பொண்ணு வருவாளே... அவகூட ரொம்ப துடிப்பான ஆளுய்யா!''

''யாருங்க... இந்த சீமா பீஷ்ட் அப்படிங்கிற பொண்ணைச் சொல்றீங்களா? ரொம்பத் திறமையான ரிப்போர்ட்டர் தாங்க. போன வருடத்தின் சிறந்த டி.வி. நிருபர் அவார்டை நூலிழையில் மிஸ் பண்ணிட்டா!''

''திறமைக்கு ஏத்த ஜொலிப்பு இருக்கு துய்யா அவகிட்டே. இந்த ஒன்-டு-ஒன் அப்படின்னெல்லாம் சொல்றாங்களே... அந்த மாதிரி ஒரு பேட்டி என்னை எடுக்கச் சொல்லி அவளை அனுப்பி வையி! நேரா எனக்கே செல்போன்ல பேசச் சொல்லு... நான் அப்பாயின்ட்மென்ட் சொல்றேன்!''

''கட்டாயமாங்க!''

''சரி... இப்போ எதுக்கு போன் பண்ணே? அதைச் சொல்லு!''

''தாத்ரி ஏரியாவுல புதுசா ஒரு பவர் பிளான்ட் போடலாம்னு...''

''ஆமா, முந்தியே சொல்லியிருந்தியே! இந்த விஷயத்துல டாடா, அம்பானி குரூப் மட்டுமில்லே... சிங்கானியா குரூப் போட்டியும் இதுல இருக்குது... அது புரியுதா?''

''இருந்தாலும் எப்படியாச்சும்...''

''இதுக்கு முந்தி தலைமைச் செயலாளரா இருந்த மோகன் குமார் நம்ம ஆளுய்யா... நியூஸ் பேப்பரை நீட்டுனாக்கூட அதுல ஒரு கையெழுத்துப் போடுவான். இப்போ வந்திருக்கிறவன் முதல்வரோட ஆளு. அதுவும் தவிர, அந்த சிங்கானியா குரூப்பும் முதல்வரை செமத்தியா மஸ்க்கா போட்டு வெச்சிருக்கானுவ!''

''அப்ப கஷ்டம்தானுங்களா?''

''உன்னை மாதிரி விசுவாசிங்களுக்கு நன்மை செய்யணும்னா, நானும் கொஞ்சம் போராடித்தான்யா ஆகணும். ஏற்கெனவே நம்ம டெர்ம்ஸ் என்னன்னு பேசியிருக்கோம், நினைவிருக்கா? அதும்படியே நீ எனக்கு பதில் மரியாதை பண்ணிடணும் புரியுதா? பவர் பிளான்ட் புராஜெக்ட் உனக்குத்தான். அதுக்கு நான் பொறுப்பு!''

''ரொம்ப ரொம்ப நன்றிங்க. அப்ப என்னோட வெளிநாட்டு பார்ட்னர்களைவெச்சு நான் மீட்டிங் போட ஆரம்பிச்சிடறேன். உங்களை நம்பி அதுக்கான மெஷினெல்லாம் இறக்குமதி செய்ய ஆரம்பிச்சிடலாங்களா?''

''இந்த ஜெகன்னாத் ராய் சொல்லியாச்சுன்னா, மறு கேள்வி கேட்கக் கூடாதுனு கோட்டையில அத்தனை பேருக்கும் தெரியும்யா! நான் பார்த்துக்கறேன்... நீ அந்த சீமா பீஷ்ட் பொண்ணை அனுப்பு. கொஞ்சம் தனிப்பட்ட முறையில் அதுகிட்டே நான் பேட்டி கொடுக்க வேண்டியிருக்கு!''

''நிச்சயமாங்க. நன்றிங்க!''

''ஹலோ... நான் ருக்ஸானா அஃப்ஸர் பேசுறேன்... மினிஸ்டர் இருக்காருங்களா?''

''ஏங்க, உள்ளாட்சித் தேர்தல் நடக்குதில்லே... இறுதிக் கட்டப் பிரசாரத்துக்குப் போயிருக்காரு.''

''அவரு பி.ஏ-தானே பேசுறீங்க? நான் யாருனு தெரியு தில்லே?''

''நல்லாத் தெரியுதுங்க!''

''அவரோட மொபைலுக்கு ஒரு வாரமா டிரை பண்ணிகிட்டே இருக்கேன். அதையும் எடுக்க மாட்டேங்குறாரே?''

''உங்க நம்பரைப் பார்த்தும் அவர் எடுக்கலைன்னா... நீங்களாப் புரிஞ்சுக்க வேண்டியதுதானே? பொம்பளைங்க ஹேர்ஸ்டைலை மாத்துற நேரத்துக்குள்ள, எங்க மினிஸ்டர்  அவரோட கேர்ள் ஃப்ரெண்டுங்களை மாத்திடுவாரு! (வெடிச்சிரிப்பு) என்ன மேடம்... புரிஞ்சுதா நான் சொல்றது?''

டொக்!

''ஹலோ... ஹலோ! (மறுபடி பெருத்த சிரிப்பு) ''இதோட லைன் கட் ஆயிடுச்சு! மேடம் நல்லாப் புரிஞ்சுகிட்டாங்க!''

''அப்பா!''

''என்ன விக்கி... குரல் ரொம்பக் கவலையா தெரியுதே..''

''இன்னிக்கு ஒரு லெட்டர் வந்துச்சுப்பா... நக்ஸலைட் டுங்க அனுப்பினதாப் போட்டிருக்குது. தீவு ஏரியாவுல வரப்போற சிறப்புப் பொருளாதார மையத்தில் நான் ஃபேக்டரி தொடங்கினா, என்னைக் கொன்னுடுவேன்னு சொல்லியிருக்காங்க!''

''உடனே நீ பேன்ட்ல மூச்சா பேஞ்சிட்டியாக்கும். டேய், நீ யாரு புள்ளை..? சிலுத்துக்கிட்டு நிக்குற சிங்கமேசல்யூட் அடிச்சு வழிவிடுற ஜெகன்னாத் ராயோட புள்ளைடா!''

''அது சரி டாடி... ஆனா, நக்ஸலைட்டுங்க எங்கே எப்படி கண்ணி வெடிவெச்சுத் தூக்குவானுங்கனு தெரியாது. நான் ஆயிரம் இடத்துக்குப் போய் வர்றவன்... உங்க செல்வாக்கும் பாதுகாப்பும் எல்லா இடத்துக்கும் எப்படி வந்து என்னைக் காப்பாத்தும்?''

''முதல்ல பங்களாவுக்கு போலீஸ் பாரா போடுறேன்...''

''உங்க போலீஸ் எதுக்கும் லாயக்கில்லை. நானே டெல்லி கமிஷனர்கிட்டே கேட்டு கமாண்டோ பாதுகாப்பு வாங்கப்போறேன்!''

''நீ ஓவரா பயப்படுறே, விக்கி. இது வரைக்கும் எந்தத் தொழிலதிபரையும் நக்ஸலைட்டுங்க கொன்னதா சரித்திரமே இல்லை!''

''முதல் ஆளா நான் இருந்துடக் கூடாதில்லே! வெச்சிடேறேன்!''

''ஜெகன்னாத்... உள்ளாட்சித் தேர்தல் முடிவைப் பார்த்தீங்களா?''

''பார்த்தேன் முதல்வர் ஐயா.... நம்ம நினைச்ச மாதிரி முடிவு அமையலியே... ஓட்டுப் போடுற நாயிங்க மனசுல என்னதான் இருக்குனு புரிய மாட்டேங்குதே, ஐயா!''

''ஒண்ணில்லே ரெண்டில்லே... மொத்தம் எழுபத்தோரு ஸீட்டை நம்ம கட்சி இழந்துடுச்சி. வெற்றிதான் உறுதியாக் கிடைக்கும்னு என்கிட்டே சொல்லிக்கிட்டே இருந்தீங்களே... எங்கே தப்பு நடந்துச்சு?''

''எதிர்க் கட்சிக்காரனுங்க எக்கச் சக்கமா பணத்தைத் தேர்தல் அதிகாரிங்களுக்குக் கொடுத்திருக்கிற மாதிரி தோணுதுங்க. அதுவும் தவிர, நிறைய சுயேச்சை வேட்பாளருங்க களத்துல இறங்கிக் குட்டையைக் குழப்பிட்டானுங்க.''

மோட்டிவ் 6

''எனக்கு வந்த தகவல் அது இல்லை... கிட்டத்தட்ட 50 தொகுதியில், நாம பார்டர்ல தோத்துப்போனதுக்குக் காரணம் முஸ்லிம் ஓட்டு மொத்தமும் வழிச்சிக் கிட்டுப் போனதுதான்.''

''எதுக்கு முஸ்லிம்கள் நமக்கு எதிரா ஓட்டுப் போடணும்? நம்ம அரசாங்கம்தான் அவங்களுக்கு நல்ல விஷயங்கள் ஏராளமா செஞ்சிருக்குதே?''

''கான்பூர்ல ஒரு கலவரத்தை நீங்க தூண்டி விட்டீங்களே... அதான் காரணம்னு உளவுத் துறை சொல்லுது. கலவரம் நடந்தா, இந்துக்கள் ஓட்டு இன்னும் சாலிடா கிடைக்கும்னு நீங்க சொன்னீங்க. ஆனா, கூடுதலா ஒரு இந்து ஓட்டுகூட நமக்கு விழுந்த மாதிரியும் தெரியலை! முஸ்லிம்களும் கவுத்துட்டாங்க.''

''ஐயா, அரசியல்னா ஏத்த இறக்கம் இருக்கத்தான் செய்யும். சில கணக்குகள் தப்பத்தான் செய்யும். வரப்போற சட்டமன்றத் தேர்தல்ல கிறிஸ்துவங்க ஓட்டை அப்படியே அள்ளுறதுக்கு வரிசையா நான் திட்டங்கள் வெச்சிருக்கேன்!''

''ஜெகன்னாத் ராய்... உங்க மூளை என்ன புல்லு தின்னப் புறப்பட்டுப் போச்சா? முஸ்லிம் ஓட்டு நம்ம மாநிலத்துல 18 சதவிகிதம். கிறிஸ்டியன் ஓட்டு வெறும் 1 சதவிகிதம்தான். இதைவெச்சு எப்படி அதை ஈடுகட்ட முடியும்?''

''ஐயா, ஓட்டுல வேணா அவங்க குறைஞ்சவங்களா இருக்கலாம். ஆனா, எனக்கென்னவோ கிறிஸ்துவ சமுதாய மக்கள் மேலே இப்பல்லாம் அபரிமிதமான ஒரு அன்பு சுரக்குதுய்யா... அவங்க ரொம்ப நல்ல ஜனங்க மாதிரி தோணுதுய்யா!''

''நான் ஓட்டு பத்தி பேசிட்டிருக்கேன். நீ ஏதோ உன் சொந்த சென்டிமென்ட் பேசுறே? உள்ளாட்சித் தேர்தலுக்கு உன்னை பொறுப்பாளரா நம்ம கட்சித் தலைமை போட்டதுதான் முதல் தப்பு!''

''சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... எல்லாமே என் தப்புதானா? இந்த மாநிலத்தை ஆளுற முதல்வர் நானா, நீங்களா? இந்த ஆட்சி மேலே ஜனங்களுக்கு இருக்கிற அதிருப்தியை ஈடு கட்டி இந்தளவுக்காச்சும் ஓட்டு வாங்கிக் கொடுத்தேனே... அதைப் பாராட்டுங்க. அதுவும் தவிர, தேர்தல் வியூகமா நான் போட்ட பல திட்டங்களை உங்களோட எடுபிடிங்க குறுக்கே பூந்து பாழ் பண்ணிட்டாங்க. இதுக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?''

''உங்ககிட்டே பேசி பிரயோஜனம் இல்லை ஜெகன்னாத் ராய். நீங்க போனை வெச்சிடுங்க!''

''ஹலோ... 'ஜோதி' சேனல்ல இருந்து, சீமா பீஷ்ட் பேசுறேங்க... உள்துறை அமைச்சரோட பேசணும்...''

''வெயிட் பண்ணுங்க!''

பீப்... பீப்... பீப்...

''ஹலோ சீமா... லேண்ட் லைன்ல ஏம்மா வந்தே? ஆலோக் உன்கிட்டே என் மொபைல் நம்பரைக் கொடுக்கலியா?''

''கொடுத்தாரு சார். ஆனா, இதுக்கு முந்தி உங்களை நான் பார்த்ததில்லை. எடுத்ததுமே மொபைல்ல கூப்பிட்டா, உங்களுக்கு நான் யாருன்னு புரியாமப் போயிடுமேன்னுதான்...''

''ஓ, என்னை நீ இதுக்கு முந்தி நேர்ல பார்த்ததே இல்லையா? அப்படின்னா பார்த்துடுவோம். பிரமாதமா ஒரு பேட்டி கொடுத்திடறேன், ஓகே-தானே?''

''தேங்க்ஸ் சார்... உங்களுக்குப் போட்டியா வளர்ந்து வந்த லக்கண் தாகூர் எம்.எல்.ஏ-வோட மரணம்பத்தி உங்ககிட்டே கருத்து கேட்கத்தான் இப்ப அவசரமா போன் பண்ணேன்!''

''என்னது? லக்கண் தாகூர் செத்துப்போயிட்டாரா?''

''ஆமா சார்... எங்க 'ஜோதி' சேனல்ல இப்ப அதான் பிரேக்கிங் நியூஸா ஓடிக்கிட்டிருக்கு. ஒரு மணி நேரத்துக்கு முந்தி அவரோட வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, மர்ம மனிதர்கள் அவரை சுட்டுக் கொன்னுட்டாங்க.''

''யாரையாச்சும் அரெஸ்ட் பண்ணி இருக்காங்களா?''

''இது வரைக்கும் இல்லை சார். ஆனா, டி.ஜி.பி-யோட அறிக்கை வந்திருக்கு... காடுகளில் மரம் வெட்டிக் கடத்துற கும்பலின் வேலையா இது இருக்கலாம் அப்படின்னு சந்தேகப்படுதாம் போலீஸ்!''

''சரி, நம்ம பேட்டி எப்ப வெச்சுக்கலாம் சொல்லு?''

''நீங்க சொல்லுங்க சார்?''

''கோமதி நகர்ல எனக்கு பிரமாதமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் இருக்குது. இன்னிக்கு ராத்திரி பத்து மணிக்கு நீ அங்கே வந்துடு!''

''சார்... அது ரொம்ப லேட்டா இருக்குமே...''

''டின்னர் மீட்டிங்கா வெச்சுக்கலாம்மா... நீ வந்துடு!''

''சரி சார்...''