Published:Updated:

"பதுக்கல் அல்ல, ஸ்மக்ளிங்..!" வி.ஐ.பி-க்களை தோலுரித்த ரெய்டு

வார விடுமுறை நாட்களில் கரன்ஸிகளை கோல்டு பிஸ்கெட்டுகளாக மாற்றும் வேலைகள், சென்னையில் சாதாரணமாக நடந்திருக்கிறது. சென்னை டூ கேரளா வரை என்றில்லாமல், கோல்டு பிஸ்கெட்டுகள், கடல் மார்க்கமாகவும் பல நாடுகளுக்குப் போயுள்ளன. ஏறக்குறைய பிஸ்னஸ் என்ற பெயரில் ஸ்மக்ளிங்தான் நடந்திருக்கிறது. 

"பதுக்கல் அல்ல, ஸ்மக்ளிங்..!" வி.ஐ.பி-க்களை தோலுரித்த ரெய்டு
"பதுக்கல் அல்ல, ஸ்மக்ளிங்..!" வி.ஐ.பி-க்களை தோலுரித்த ரெய்டு

ரெய்டு முடிந்து, ஐ.டி. பெயர் மறந்து ஒரு வாரம் ஆகிவிட்டது... அடுத்தடுத்த அரசியல் சூழ்நிலைகள் ரெய்டின் பக்கமிருந்த கேமராக்களை இடம் மாற்றி திருப்பிக் கொண்டு விட்டாலும், இன்னமும் செய்யாத்துரை அன்ட் கோ, அவர்கள் தொடர்புடைய கரைவேட்டிகள் பக்கமிருந்து ஐ.டி, நகரவில்லை. ஹீரோவை ஓப்பன் ஷாட்டில், சிங்கிளாகக் குளோஸப்பில் காட்டிவிட்டு பின்னர் 'லாங் - வியூ' வில்,  நூறுபேர் பின்னால் நிற்பது போல் காட்டுவது போலத்தான், ஐ.டி.ரெய்டில் செய்யாத்துரை குளோஸப் காட்சிகள் என்கிறார்கள். 2018, ஜூலை 16-ல் தொடங்கி ஜூல -20 முடிய அரசு ஒப்பந்ததாரர் செய்யாத் துரையின் எஸ்.பி.கே. நிறுவனத்தில் நடந்த ரெய்டே, தமிழகத்தில் ஐ.டி. எதிர்கொண்ட பெரிய ரெய்டு என்கிறார்கள். 

ஐம்பது இடங்கள், ஐநூறு அதிகாரிகள் ஒரேநேரத்தில் இறங்க, கணக்கிலேயே வராத 480 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. தொகையின் பிரமாண்டம் அதிகம் என்பதால், விவகாரம் அமலாக்கப்பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது. முதற்கட்டமாகச் சிக்கிய 183 கோடி ரூபாய், 100 கிலோ தங்கக் கட்டிகள் என்ற துவக்கமே, ரெய்டுக்குப் போனவர்களின் வேலையைத் திருப்தி ஆக்கியிருக்கிறது. பெரும்பாலான கோல்டு, கரன்ஸிகளை வீடுகளில், வங்கி லாக்கர்களில் வைக்காமல் கார்களில் ஒளித்து வைத்து, அந்தக் கார்களின் சாவிகளை, நம்பிக்கையான ஆட்களின் வங்கி லாக்கர்களில், வீடுகளில் ஒளித்து வைத்து... என்று, ஏறக்குறைய கண்ணாமூச்சு ஆட்டமே நடந்து முடிந்துள்ளது. ரெய்டு ஆட்டத்தில் இந்த ஆட்டம் முற்றிலும் புதிதாகவே இருந்திருக்கிறது. காரில் பணத்தை வைத்துக் கொண்டு ஊர்சுற்றி ஆட்டங்காட்டுகிற மெத்தேட், 2002-ம் ஆண்டில் சென்னையில் ஒரு கல்விநிறுவனத்தை ஐ.டி., வளைத்த போது கையாண்ட உத்தி என்பதால், அந்த கல்விநிறுவனம் சார்பில் 'விளையாடிய' நபர் குறித்தும் பார்வை திரும்பியிருக்கிறது. 

ரெய்டு வட்டாரத்தில், "செய்யாத்துரையின் குழுமங்களில் ரெய்டு என்று முடிவானதும்,  கார்களில் பதுக்கப்பட்டிருக்கும் கரன்ஸிகள் குறித்துத்தான் திட்டமிடல் இருந்தது. அதை மையப்படுத்தியே, 'ஆபரேஷன் பார்க்கிங் மணி' என்ற பெயரும் வைக்கப் பட்டது. கார்கள், ஒவ்வொரு ஏரியா பார்க்கிங்கில் நிறுத்தி, தார்ப்பாய் போட்டு போர்த்தியிருந்த தகவலில், முதலில் தி.நகர்ப் பகுதிதான் ரவுண்ட் செய்யப் பட்டது. அந்தக் கார்களில் 50 கோடி ரூபாய் மட்டுமே சிக்கியது. செய்யாத்துரைக்கு வேண்டப் பட்ட வீடுகளில் நிறுத்தப் பட்டிருந்த கார்களில்தான், ஏ.டி.எம். சென்டர் போல கரன்ஸிகளும், சொத்து ஆவணங்களும் மூட்டை, மூட்டையாகக் கிடைத்தன. அடுத்த கட்டமாக செய்யாத்துரையின் வீடு-அலுவலகத்தில் நடந்த சோதனையில், பென்-டிரைவ்கள், கம்ப்யூட்டர் ஹாட்- டிஸ்க்குகள் வழியாக சொத்து ஆவணங்கள் குறித்தத் தகவல்கள், கிடைத்தது. செய்யாத்துரை மகன்களான கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் வீடுகளிலும் இதேபோல் சொத்து ஆவண விபரங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்தே செய்யாத்துரை மற்றும் அவர் மகன்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப் பட்டது" என்கிறார்கள்.

ரெய்டின் உண்மை முகம் குறித்து அறிய பல்வேறு மட்டங்களில் பேசினோம். "தமிழக அரசின் 'ஏ' கேட்டகரி (முதல்நிலைத் தகுதி) ஒப்பந்ததாரர் இந்த செய்யாத்துரை. அரசு கான்ட்ராக்ட்களை எடுக்க அதிகமாய் அவர் சிரமப்பட்டதே இல்லை. அதிகாரத்தில் இருக்கும் வி.ஐ.பி.க்களை சரிக்கட்டிவிட்டு, சாதாரணமாக கான்ட்ராக்ட்களை எடுத்து விடுவார். அனைத்து வரவு செலவுக்கும் செய்யாத் துரையிடம் முறையானக் கணக்கு வழக்கு இருக்கிறது. அதிகார மையத்துக்கு வேண்டியவர்கள் என்ற அடையாளத்துடன், நேரடி பினாமிகள் சிலர், செய்யாத்துரையின் பங்குதாரர்களாக, கம்பெனியின் டைரக்டர்களாக வந்த பின்புதான் சிக்கல் ஏற்பட்டது. பல்வேறு வழிகளில் வந்த பணத்தை, செய்யாத்துரையின் 'மேன் ஃபவர்' மூலம், பத்திரமாகப் பதுக்கி வைத்துப் பாதுகாத்துக் கொடுக்கும் வேலைக்கு மட்டுமே செய்யாத்துரை பயன்பட்டிருக்கிறார். ஒவ்வொரு வாரத்தின் இறுதிநாட்களிலும், அந்த கரன்ஸிகள், கேரளாவில் இருக்கும் கோல்டு பிஸ்னஸ் சென்டருடன் இணைந்து தங்கக் கட்டிகளாக மாறியிருக்கிறது. சென்னையில்  மயிலாப்பூர், அடையாறு, தி.நகர் போன்ற இடங்களில், அந்தக் கேரள கோல்டு நிறுவனத்துக்கு நேரடியாகவும், சிஸ்டர் கன்சர்ன் ஆகவும் பல கிளைகள் உள்ள தகவல் கிடைத்துதான் அங்கெல்லாம் ரெய்டுகள் நடத்தப்பட்டன. வார விடுமுறை நாட்களில் கரன்ஸிகளை கோல்டு பிஸ்கெட்டுகளாக மாற்றும் வேலைகள், சென்னையில் சாதாரணமாக நடந்திருக்கிறது. சென்னை டூ கேரளா வரை என்றில்லாமல், கோல்டு பிஸ்கெட்டுகள், கடல் மார்க்கமாகவும் பல நாடுகளுக்குப் போயுள்ளன. ஏறக்குறைய பிஸ்னஸ் என்ற பெயரில்  ஸ்மக்ளிங்தான் நடந்திருக்கிறது. 

ஹாங்காங் போன்ற சில உலக நாடுகளில், இங்கிருந்து போய் முதலீடு செய்வது  பாதுகாப்பானது, எளிதானது. முதலீடு என்ற பேரில் பதுக்கியவருக்கு உடனடியாகப் பணம் தேவை என்றால், அதை  இந்தியக் கரன்ஸியாகவோ, கோல்டு ஆகவோ உடனுக்குடன் எடுத்துக் கொள்ளலாம் என்ற வசதி இருக்கிறது. இந்த வசதியைத்தான் தமிழகத்தின் முக்கிய வி.ஐ.பி.கள் பயன்படுத்தி, அந்தச் சொத்துகளே பல நாடுகளில் முதலீடாக, இப்போது முடங்கிக் கிடக்கிறது. அந்தத் தகவல் மொத்தமும் நடந்து முடிந்துள்ள ரெய்டில் சிக்கிக் கொண்டிருக்கிறது. கட்சியில், தொடர்ச்சியாக மாவட்டப் பொறுப்பை நிர்வகிக்கும் தமிழகப் புள்ளி ஒருவர் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர்- பாரீன் பினாமிகளின் பட்டியலும் இதில் கிடைத்திருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், செய்யாத்துரையின் ஒப்பந்தப் பணிகள் பெரியளவில் விரிவடைந்துள்ளது உண்மை. ஆனால் ரெய்டு அதை நோக்கிப் போகவில்லை. பினாமி, கோல்டு பிஸ்கெட்ஸ், வெளிநாட்டு வங்கிகளில் தங்க முதலீடுகள் குறித்தும், 'அடங்கு, அல்லது அப்ரூவர் ஆகு' என்பதை முன்னிறுத்தியும்தான்  ரெய்டு போயிருக்கிறது... இப்படிப்பட்டச் சூழ்நிலையில்  செய்யாத்துரைக்கு முழு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது" என்று அலற விடுகிறார்கள். பொதுவாகவே ஐ.டி.ரெய்டுகளின் முடிவு என்பது, மிகப்பெரிய தண்டனையை வாங்கிக் கொடுத்து விடப் போவதில்லை... கணக்கில் வராதத் தொகை 200 கோடி ரூபாய் ரெய்டில் கிடைக்கிறது என்றால், அதற்கு மொத்த அபராதமே 40 கோடி ரூபாய்தான். அந்த அபராதத்தைக் கட்டிவிட்டு, எஞ்சிய 160 கோடியை சட்டப்படி 'வொய்ட் மணி' யாகவே கையில் வைத்துக் கொள்ளலாம். கடந்த கால நூற்றுக்கணக்கான ரெய்டுகளின் க்ளைமாக்ஸ் இதுதான்... இந்த ரெய்டின் க்ளைமாக்ஸூம் ஏறக்குறைய கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது!