Published:Updated:

சங்கதியெல்லாம் புட்டுப்புட்டு சொல்லட்டா?

கிடுகிடுக்கும் குடும்ப பஞ்சாயத்து...

##~##
வழக்கமாக சினிமாவில் வில்லன், வில்லி சகஜம். சினிமாக் குடும்பத்திலேயே 'மகள் தன் அப்பாவுக்கோ... அப்பா தன் மகளுக்கோ’ வில்லங்கமாக இருந்தால்..? அப்படித்தான் இருக்கிறது நடிகர் விஜயகுமார் குடும்பத்தில் வெடித்திருக்கும் பூசல்!

 விஜயகுமார் - மஞ்சுளா கலைக் குடும்பம் தமிழகத்தில் பிரபலமானது. சினிமாப் பிரபலங் கள் பலரும் சொந்த வாழ்க்கையில் ஏதேனும் சிக்கல் வந்தால், விஜயகுமார் வீட்டில்தான் அடைக்கலம் ஆவார்கள். ஆனால், அவரது மகளான வனிதாவே 'என்னுடைய அப்பா, அண்ணனிடம் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று வீதிக்கு வந்து கதறுகிறார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விஜயகுமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த தாக வனிதாவின் கணவர் ராஜன் கைது செய்யப்பட... அப்பா விஜயகுமார், அண்ணன் அருண் விஜய் ஆகியோர் மீது வனிதா கொடுத்த புகார் போலீஸ் விசாரணையில்! இந்த நிலை யில், கடந்த புதன்கிழமை தமிழக டி.ஜி.பி-யான லத்திகா சரணிடம் புதிய புகார் ஒன்றைக் கொடுத்து இருக்கிறார் வனிதா. அவரை சந்தித்தோம்.

சங்கதியெல்லாம் புட்டுப்புட்டு சொல்லட்டா?

''அப்பா விஜயகுமாருக்கு இரண்டு மனைவி கள். முதல் மனைவிக்கு கவிதா, அனிதா, அருண் என மூன்று பிள்ளைகள். இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு நான், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று பெண்கள். என் 14-வது வயதில் 'மாணிக்கம்’ படத்தில் சினிமாவுக்கு வந்தேன். அதில் இருந்துதான் எனக்கும் பிரச்னைகள் ஆரம்பித்தன.  

உண்மையைச் சொல்லணும்னா, என் 16-வது வயதில் ஒரு முறை வீட்டைவிட்டு ஓடிப்போயிட்டேன். என்ன காரணம்னு இப்போதைக்கு வெளிப்படையா சொல்ல முடியாது. தோழி வீட்டில் நான் இருக்கிறது தெரிஞ்சு, வந்து இழுத்துட்டுப் போனாங்க. இப்படி எல்லாம் பிரச்னையாக இருந்த அந்த நேரத்தில்,

சங்கதியெல்லாம் புட்டுப்புட்டு சொல்லட்டா?

ஜெயா டி.வி-யில் அகத்தியனின் 'சிறுகதைகள்’ என்ற டெலி ஃபிலிமில் நடிச்சப்ப, என்னுடன் நடிச்ச ஆகாஷ், 'நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’னு கேட்டார். வீட்டில் இருந்து தப்பிச்சா போதும்னு, உடனே சம்மதிச்சேன். அப்பவும் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ண நினைக்காம, அன்னிக்கே அப்பாவிடம் சொன்னேன். அடிச்சாங்க, உதைச்சாங்க. ஆனா ஒரு வாரம் கழிச்சு கல்யாணத்துக்கு சம்மதிச் சாங்க.

ஆனால், கல்யாணத்துக்குப் பிறகும் நான் நிம்மதியா இல்லை. ஆகாஷ§ம் லைஃபில் செட்டில் ஆகவே இல்லை. பணப் பிரச்னை! எங்களுக்கு ஸ்ரீஹரி பிறந்தான். நித்தமும் பிரச் னைன்னு இருந்ததால், பிரிஞ்சுடலாம்னு முடிவு பண்ணினேன். 'என்னது... விவாகரத்தா? நம்ம குடும்ப மானம் என்னாகுறது?’ன்னு அப்பவும் எங்க வீட்டில் கோபப்பட்டாங்க. கட்டுப்பட்டு, அமைதியா இருந்தேன். மீண்டும் ஆகாஷ§டன் சேர்ந்து வாழ்ந்தேன். அப்பதான் எனக்கு மகள் பிறந்தாள்.

ஆனால், அவருடன் தொடர்ந்து வாழ முடியலை. எதற்கெடுத்தாலும் கோபம், அடி உதை! இந்த சண்டை அதிகமானதுக்கு எங்க அம்மாவும் ஒரு காரணம். கோபம் வந்தா உடனே ஆகாஷ் என் குடும்பத்தைப்பற்றித் தப்பா பேசுவார். நானும் பதிலடி கொடுப்பேன். பிரச்னை பெருசாகும். எங்க அம்மா மாதிரி அடுத்தவங்க லைஃப்ல பிரச்னையை உண்டாக் கக்கூடிய கேரக்டரை நீங்கள் பாத்திருக்கவே முடியாது.

கடைசியில், ஆறு ஏழு ஆண்டுகள் போராடி, விவாகரத்து முடிவுக்கு வந்தேன். என் வீட்டிலோ, 'காதலிச்சு நீதான் கல்யாணம் பண்ணினே... அவஸ்தைப்படு’ன்னு சொன் னாங்க. பிறகு, 'விவாகரத்து வேண்டாம். பிடிக்கலைன்னா பிரிஞ்சு வந்துடு. நம்ம வீட்டில் குழந்தையைப் பாத்துக்கலாம்’னு சொன்னாங்க. கூடவே, 'விவாகரத்துன்னா பத்திரிகைகளில் அப்படி இப்படினு எழுதுவாங்க. ப்ரீத்தாவை, கவிதாவை கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அடுத்து ஸ்ரீதேவி, அருண் கல்யாணத் துக்குத் தயாராகிட்டாங்க’னு சொன் னாங்க.  அப்பதான் எனக்கும் அப்பாவுக் கும் நேரடியாப் பிரச்னை அதிகம் உண்டாச்சு.

என் அக்கா கவிதாவுக்கு 16 வயசு ஆகும்போதே நடிகை விஜயகுமாரியின் மகனுக்குத் திருமணம் செஞ்சுவெச்சாங்க. ஒரு குழந்தை பிறந்துச்சு. அஞ்சு வருஷம் கழிச்சு அவங்க விவாகரத்து செய்துட்டாங்க. அதை அப்ப எங்க குடும்பம் மூடி மறைச்சது. அந்த சமயத்தில், கவிதாவுக்கு அவங்க அம்மா (விஜயகுமாரின் மூத்த மனைவி) சப்போர்ட்டா இருந்தாங்க. தன் பொண்ணை விட்டுக்கொடுக்கலை. டார்ச்சர் பண்ணலை.  சில வருடங்களில் வேற ஒரு கல்யாணமும் பண்ணிக் கொடுத்தாங்க. அந்த சுதந்திரத்தை எனக்கு மட்டும் தர மறுத்தது என்ன நியாயம்?

ஆகாஷ§டன் என்னால் வாழ முடியவில்லைன்னுதான் நான் விவாகரத்து கேட்டேன். ஆனா, 'ஏன் கவிதாவுடன் கம்பேர் பண்றே?’ன்னு அடிச்சு உதைச்சார் அப்பா. 'விவாகரத்துன்னு முடிவு எடுத்தா வீட்டைவிட்டுக் கிளம்பிடு. இங்கே இடம் இல்லை’ன்னாங்க. விவாகரத்து தர மாட்டேன்னு இழுத்தடிச்ச ஆகாஷ§ம் விவாகரத்துக்கு சம்மதிச்சார். இது நடந்தது 2007-ல்...

இந்த சமயத்தில்தான் அருணுக்குக் கல்யாணம்... அதுக்கு  15 நாள் இருக்கப்ப, 'நீ வீட்டை விட்டுக் கிளம்பிடு’னு சொல்லிட்டாங்க. என் எல்லாப் பொருட்களையும் தூக்கி வெளியே போட்டாங்க. அப்போ, ஆகாஷிடம் இருந்த என் பையனை மீட்கும் போராட்டம் ஒரு பக்கம்... விவாகரத்து வழக்கு மறு பக்கம்... அநாதையாக் கைக் குழந்தையுடன் நடுத் தெருவில் நின்னேன்.

ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்காக அப்பாகிட்ட பேசியும், அவர் சம்மதிக்கலை. 'வெளியே போ’ன்னு இரக்கமே இல்லாமல் விரட்டிட்டார்.

என் ஃப்ரெண்டு வீட்டில் குழந்தை யோடு தனியாத் தங்குனேன். ஒரே சோகம்... என்னை வந்து கூட்டிட்டுப் போவாங்கனு தினமும் காத்திருந்தேன். சொந்த அக்கா, அருண், தங்கச்சி, அம்மா, அப்பான்னு யாருமே என்னைக் கல்யாணத்துக்குக் கூப்பிடலை. 'சொந்தம் அவ்வளவுதான்’னு  முடிவு பண்ணினேன்.

தனியா ஒரு வீடு பார்த்துத் தங்கினேன். ரெண்டு மாசம் கழிச்சு, 'நீ வரலைன்னா நான் மேல் மாடியிலிருந்து குதிக்கப் போறேன். எனக்குப் பேரக் குழந்தைங்களைப் பார்க்கணும்’னு திடீர்னு எங்க அம்மா போன் பண்ணினாங்க. எனக்கு சிரிப்புதான் வந்துச்சு. வீட்டுக்குப் போயிட்டு வந்துட்டு இருந்தேன்.

அப்போதான் ராஜனை சந்திச்சேன். இருவ ருக்கும் ஈடுபாடு இருந்ததால் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

2007-ல் எங்க கல்யாணம் ஹைதராபாத்தில் நடந்துச்சு. எளிமையான பதிவுத் திருமணம். நண்பர்கள் மட்டுமே வந்தாங்க. ராஜனோடும் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.

அந்த சமயத்தில், ஆகாஷிடம் இருந்த மூத்த பையன் ஸ்ரீஹரியை சென்னைக்கு வந்து அழைச்சுட்டுப் போனேன். உடனே, நான் ஏதோ குழந்தையைக் கடத் திட்டதா சொன்னாங்க.  ஹைதராபாத்திலேயே வழக்குப் போட்டேன். ஸ்ரீஹரியை நிரந்தரமா என்னோட தங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்ப எனக்கு ராஜன் மட்டுமே பக்கபலம்.

பல்வேறு பிரச்னைகளில் சிக்கி நிம்மதி இழந்து இருந்த சமயத்தில், வெளிநாட்டில் செட்டிலாகிடலாம்னு முடிவு செஞ்சு நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் இரண்டு குழந்தைகளோட ராஜனும் நானும் செட்டில் ஆனோம். வாழ்க்கை நிம்மதியா இருந்துச்சு. அப்பாவும் அம்மாவும்கூட எங்களோட வந்து ஒரு மாதம் தங்கினாங்க. பிறகு சென்னையில் செட்டிலாகிடலாம்னு நினைச்சு இங்கே வந்தோம்.

அப்பா பெயரில் 'விஜயகுமார் மீடியா’ன்னு நிறுவனம் தொடங்கி, இப்பவும் நடத்திட்டு வர்றேன். வாராவாரம் என் குழந்தைகளை வெள்ளிக்கிழமை அழைச்சுட்டுப் போய் ஞாயிற்றுக்கிழமை இரவில் கொண்டுவந்து விடுவார் அப்பா. அப்படித்தான் தீபாவளிக்கு அழைச்சுட்டுப் போனார். ஆனா, திருப்பி அனுப்பலை.

நான் நவம்பர் 7-ம் தேதி போய்க் கேட்டப்ப, 'ஸ்ரீஹரி இங்க இருக்கட்டும். மத்த ரெண்டு குழந்தைகளையும் அழைச்சுட்டுப் போ’னு சொன்னார். அதனால், எங்களுக் குள் வாய்த் தகராறு... அப்பதான் அருண் விஜய் என்னைக் காட்டுத்தனமா அடிச்சார். உடனே மதுரவாயல் ஸ்டேஷனில் இது பத்தி புகார் கொடுத்தேன்.

சங்கதியெல்லாம் புட்டுப்புட்டு சொல்லட்டா?

நவம்பர் 20-ம் தேதி கணவர் ராஜனுடன் போய், 'நாளைக்கு எக்ஸாம் இருக்கு. படிக்கவைக்கணும். தங்கச்சி ஸ்ரீதேவியை ரெண்டாம் கிளாஸோட ஸ்கூலைவிட்டு நிப்பாட்டின நீங்க, இவனை மட்டும் எப்படி ஒழுங்காப்  படிக்கவைப்பீங்க?’ன்னு அப்பாவிடம் கேட்டேன். அவர் என்னை அடிக்க, என் கணவர் தடுத்தப்ப, 'நீ யாருடா?’னு கேவலமா என் கணவரைத் திட்டினார். இதுதான் அன்னிக்கு நடந்துச்சு.

ஆனா, கொலை மிரட்டல்னு அப்பா போலீஸில் புகார் தர... ராஜனைக் கைது செஞ்சுட்டாங்க. ஆனா, அருண் விஜய் அடிச்சதாக் கடந்த 7-ம் தேதி கொடுத்த புகார் மீது இதுநாள் வரை நடவடிக்கையே இல்லை. இதுதான் காவல் துறையின் நியாயமா?'' என்று மூச்சு விடாமல் பேசிய வனிதா...

''நான் லைஃப்ல ஒரு பொண்ணா இதுநாள் வரை வாழவே இல்லை. ஆணாத்தான் எதிர்த்துப் போரா டிட்டு இருக்கேன். என் மீது விபசார வழக்குப் போட்டு உள்ளே தள்ளக்கூட தயங்க மாட்டாங்க. 'வனிதா பல உண்மைகளைப் புட்டுப் புட்டு வெளியே சொல் வேன்னு சொல்லிட்டாளே... குடும்ப ரகசியங்கள் என்னாகுமோ?’ன்னு பலர் தூக்கம் இல்லாமத் தவிக்கி றாங்க. என் மானம் போனா பரவாயில்லை... என் புள்ளைங்க, புருஷன் செத்தா பரவாயில்லை... அவங்க அஞ்சு பொண்ணுங்க மானம் மட்டும் போயிடக் கூடாதா? ச்சே, என்ன அப்பா, என்ன அம்மா..?

என் வாழ்க்கையே இதனால் அழிஞ்சாலும் பரவாயில்லை. எதிர்கொள்ள நான் தயாரா இருக்கேன். எனக்கு தில் இருக்கு. எத்தனை பொய் கேஸ் போட்டாலும் தாங்குவேன். ஆனா உங்க (விஜயகுமார்) காலில் விழணும்னு நினைச்சீங்களா... தற்கொலை பண்ணுவேனே தவிர அந்தத் தப்பை மட்டும் பண்ணவே மாட்டேன்!'' - சொல்லி முடித்தார் வனிதா!  

'டாப் ரேட்டிங்’ சீரியல் பார்த்த கிறுகிறுப்பில் இருந்த நம்மிடம், ''இரு தாரம், ஏராளமான சொத்துக்கள், ரெண்டுபட்ட வாரிசுகள் இருக்கும் குடும்பத்தில் இதெல்லாம்தான் பிரச்னையா இருக்கும்னு நினைக் கிறீங்களா சார்? இதெல்லாம் சொத்துக்கு நடக்குற சண்டைதான்!'' என்று பொளேரென்று புட்டு வைத்தார் ஒரு சினிமா பி.ஆர்.ஓ.