Published:Updated:

அந்த 12 நொடி, பறிபோன தாலிபன் ஆட்சி... 17,000 DNA சாம்பிள்கள்! - 9/11 நினைவலைகள் #VikatanInfographics

9/11 தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டன. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாகக் கணக்கிடப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செப்டம்பர் 11, 2001. இரட்டைக் கோபுரம், நியூயார்க் நகரம். நேரம், காலை 8:30.

காலை உணவருந்திக்கொண்டிருந்தவர்கள், நேற்றைய வேலையை இன்னமும் செய்துகொண்டிருந்தவர்கள், நண்பர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தவர்கள், மேலதிகாரியிடம் திட்டு வாங்கிக்கொண்டிருந்தவர்கள்... என எப்போதும்போல இயங்கிக்கொண்டிருந்தது இரட்டைக் கோபுரக் கட்டடம். அடுத்த கால் மணி நேரத்தில் பயங்கரச் சத்தம். இரட்டைக் கோபுரத்தின் ஒரு பகுதியில் விமானம் ஒன்று மோதியது. மற்றொரு பகுதியில் இருந்தவர்கள் கட்டடத்தைவிட்டு வெளியேற அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சிலர் மாடியிலிருந்து குதித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மற்றுமொரு விமானம் வந்து மோதியதில் மொத்தக் கட்டடமும் தரைமட்டமானது. 9/11 தாக்குதல் நடைபெற்று இன்றோடு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.

9/11 தாக்குதலால் உருவான தூசு
9/11 தாக்குதலால் உருவான தூசு
NASA
வெளியேறிய அமெரிக்கா; கால்பதிக்கும் சீனா; தாலிபன்களால் ரத்த பூமியான ஆப்கானிஸ்தான்! - என்ன நடக்கிறது?

இன்று உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக இருக்கிறார்கள் தாலிபன்கள். அவர்களின் முந்தைய ஆட்சிக் கலைக்கப்பட்டதற்கு இந்த 9/11 தாக்குதல்தான் காரணம்! இந்தத் தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா அமைப்புக்கு தாலிபன் அரசு அடைக்கலம் கொடுத்ததாகச் சொல்லி, ஆப்கனில் களமிறங்கியது அமெரிக்கா. இதையடுத்துதான் தாலிபன்களின் கையிலிருந்த ஆட்சி பறிக்கப்பட்டது. 20 ஆண்டுகள் ஆப்கன் மண்ணில் போர் செய்த அமெரிக்கா, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறியது. இதையடுத்து தற்போது மீண்டும் ஆப்கனின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றனர் தாலிபன்கள்!

அமெரிக்காவிலுள்ள, இரட்டைக் கோபுரக் கட்டடம்தான் உலக வர்த்தக மையமாகச் செயல்பட்டது. இங்கு 50,000 பேர் பணிபுரிகிறார்கள். தினமும் சுமார் 1.4 லட்சம் பேர் இங்கு வந்து செல்வார்கள். எவரும் எதிர்பாராத நேரத்தில் இந்தத் தாக்குதலை நடத்தியது அல்-கொய்தா அமைப்பு. வெறும் 12 நொடிகளில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடைபெற்ற அதே தருணத்தில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனும் தாக்கப்பட்டது. அமெரிக்காவின் வரலாற்றில் இது மிகப்பெரிய சோகமாக பதிவானது. தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டது. ஆனால், அதில் எந்த ஒரு தகவலும் பதிவாகவில்லை.

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு 100 நாள்கள் தேவைப்பட்டன. கட்டடம் இடிந்ததால் கிளம்பிய தூசுகள் அமெரிக்காவில் பல மைல் தூரம் பயணித்ததைப் படம் பிடித்துக் காட்டியது நாசா. இதனால் ஏற்பட்ட மாசின் அளவு 1.8 மில்லியன் டன்களாக கணக்கிடப்பட்டது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற மூன்று மாதங்கள் கழித்து, அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஓசாமா பின்லேடன், இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டது அமெரிக்கா. மே 2, 2011 அன்று ஒசாமா பின்லேடனைச் சுட்டுக் கொன்றது அமெரிக்க ராணுவம். ஆகஸ்ட் 16, 2016-ம் ஆண்டு உலக வர்த்தக மையம் புதுப்பொலிவுடன் மீண்டும் திறந்துவைக்கப்பட்டது. இரட்டைக் கோபுரத் தாக்குதலில், சேதமடைந்த சுரங்க ரயில் நிலையம் ஒன்று, 17 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2018-ம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. 

9/11 தாக்குதலில் சுமார் 3,000 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் 17 கர்ப்பிணிகளும் அடங்குவர். உயிரிழந்தவர்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை யாரென்றே அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காகவே நியூயார்க் நகரில் தனியாக ஒரு பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. 17,000 பேரின் DNA சாம்பிள்களைக் கொண்டு இந்தப் பரிசோதனை நடைபெற்றுவருகிறது. 9/11 தாக்குதலுக்காகக் கடத்தப்பட்ட `ஃப்ளைட் 93'-ல் பயணம் செய்து உயிரிழந்த 40 பயணிகளின் நினைவாக, 93 அடிகள் மற்றும் 40 மணிகள் கொண்ட டவர் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. காற்று அடிக்கும்போது அந்த மணிகளிலிருந்து எழுப்பப்படும் ஓசை மக்களுக்கு மனவலிமையைக் கொடுக்கும் என்று நம்புகிறது அமெரிக்க அரசு. இந்த டவருக்கு `Tower Of Voices' என்று பெயரிட்டுள்ளனர்.

`தாலிபன், ஜெய்ஷ்-இ-முகமது சந்திப்பு'; மசூத் அஸாரின் வாழ்த்து கட்டுரை - இந்தியாவுக்கு அச்சுறுத்தலா?!
9/11 தாக்குதல் நினைவலைகள்...
9/11 தாக்குதல்
9/11 தாக்குதல்
Vikatan Infographics

மிகப்பெரிய தாக்குதலான, 9/11 தாக்குதல் மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வேண்டும் என்பதற்காக இந்த நாளை `தேசப் பற்று தினம்'-ஆகக் கொண்டாடுகிறது அமெரிக்கா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு