Published:Updated:

`என் மகன் எங்கே?’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகமதின் தாய் #VikatanInfographics

நஜீப் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டுக்குப் பிறகு, கடந்த மே 11 அன்று, வழக்கில் குற்றம் எதுவும் நிகழவில்லை என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

`என் மகன் எங்கே?’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகமதின் தாய் #VikatanInfographics
`என் மகன் எங்கே?’ - இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கும் நஜீப் அகமதின் தாய் #VikatanInfographics

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகம் ஒன்றில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காணாமல் போகிறார்.  அவருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்புக்கும் தகராறு ஏற்பட்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் அவர் திடீரென மாயமானதுக்கு முன் நடக்கவில்லை. காணாமல் போன மாணவரின் தாய் உயர்நீதிமன்றத்தை அணுகினார்; மாபெரும் போராட்டங்கள் நடந்தன; சி.பி.ஐ விசாரித்தது. இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்றன. இன்று வரை அவர் கிடைக்கவில்லை. 

2016 ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பிரிவின் ஆய்வு மாணவர் நஜீப் அகமது காணாமல் போனார். அவர் காணாமல் போவதற்கு முந்தைய நாளான அக்டோபர் 14 அன்று, பல்கலைக்கழகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பி.ஜே.பியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்த மாணவர்களோடு தகராறு ஏற்பட்டு, அவரோடு கைகலப்பில் ஈடுபட்டனர். 

நஜீப் அகமது தங்கியிருந்த மஹி-மந்தவி விடுதியில் உணவகத்தில் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் எனவும், `முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்' எனவும் எழுதியிருந்தது, இந்தச் சண்டைக்குக் காரணமாக அமைந்தது எனக் கூறப்படுகிறது. 

அன்றிரவு, நஜீப்பின் அறைக்கு வெளியே நிகழ்ந்த சண்டையைப் பற்றி விடுதிக் காப்பாளர் விசாரணை செய்த போதும், மீண்டும் நஜீப் தாக்கப்பட்டிருக்கிறார். காப்பாளர் தலையீட்டால், சமாதானம் செய்து வைக்கப்பட்டது. எனினும் மறுநாள் காலை 10 மணிக்கு மேல் நஜீப் அகமதுவை யாரும் காணவில்லை. அவரது செல்போன்,பர்ஸ் உட்பட உடைமைகள் அனைத்தும் அவரது அறையிலேயே இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 

நஜீப்பின் தாயார் பாத்திமா நபீஸ் காணாமல் போன தன் மகனைக் கண்டுபிடித்துத் தரக் கோரி, டெல்லி காவல்துறையில் வழக்குப்பதிவு செய்தார். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நஜீப்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட, செய்தி நாடு முழுவதும் பரவியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டு, நஜீப்பைக் கண்டுபிடிக்க டெல்லி காவல்துறையைச் சிறப்புப் படை அமைக்குமாறு உத்தரவிட்டார். 

டெல்லியில் இந்தியா கேட் பகுதியில், ``நஜீப் எங்கே?" என்ற முழக்கத்தோடு ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மாணவர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்ட ஒழுங்கைக் காரணம் காட்டி, நஜீப்பின் தாய் பாத்திமா உட்பட, அனைவரும் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டனர். ஒரு மாதம் கழிந்தும், சிறப்புப்படையினரால் நஜீப் கண்டுபிடிக்கப்படாததால், பாத்திமா நபீஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். 

உயர்நீதி மன்றம் ``டெல்லி காவல்துறை நஜீப்பைக் கண்டுபிடிப்பதில் அரசியல் தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும்" என உத்தரவிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜே.என்.யூ வளாகம் முழுவதும் மோப்ப நாய்கள் உதவியோடு, 600 காவலர்கள் நஜீப்பைத் தேடி, சோதனையில் ஈடுபட்டனர். மேலும் உயர்நீதி மன்றம் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் தேவைப்பட்டால் உண்மை அறியும் சோதனையில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தியது.

``குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கையில், டெல்லி காவல்துறையினர் இரவு நேரத்தில் எங்கள் வீட்டில் புகுந்து, முறையான அனுமதியின்றி சோதனையில் ஈடுபடுகின்றனர்" என நஜீப்பின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதற்கிடையில் நஜீப்பின் உறவினருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. ``நஜீப்பைக் கடத்தியது நான்தான்; 20 லட்சம் ரூபாய் கொடுத்தால், நஜீப்பை ஒப்படைக்கிறேன்" என ஒரு நபர் பேசினார். 

நஜீப்பின் குடும்பத்தினர் காவல்துறையிடம் இந்தத் தகவலைத் தர, டெல்லியைச் சேர்ந்த ஷமீம் என்பவர் பணத்துக்காகப் பொய்யாக மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

2017 ம் ஆண்டு மே 16 அன்று, டெல்லி காவல்துறையால் நஜீப்பைக் கண்டுபிடிக்க முடியாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணையில் குற்றத்தோடு தொடர்புடையவர்களின் செல்போன்கள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்படாமல் இருப்பதை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சுட்டிக்காட்டி 6 மாதங்கள் கழிந்த பின்பும், செல்போன்கள் சோதனை செய்யப்படாமல் இருப்பதைக் கேள்வி எழுப்பி, சிபிஐ வழக்கு விசாரணையில் கவனமற்று இருப்பதாகக் கண்டித்தது.

நஜீப் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு ஏறத்தாழ ஒரு ஆண்டுக்குப் பிறகு, கடந்த மே 11 அன்று, வழக்கில் குற்றம் எதுவும் நிகழவில்லை என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கில் அனைத்து விதமான விசாரணைகளும் செய்துவிட்டதாகவும், துப்பு துலங்கவில்லை எனவும் சிபிஐ கூறியது. அதன்படி வழக்கை முடித்து வைக்கும்படி நீதிமன்றத்தில் கோரியது. கடந்த அக்டோபர் 8 அன்று, டெல்லி உயர்நீதிமன்றம் நஜீப் காணாமல் போன வழக்கை முடித்து வைக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டது. 

இரண்டு ஆண்டுகளாகக் காணாமல் போன தன மகனைக் கண்டுபிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்திய நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ், ``இந்த வழக்கு சிறப்புப் புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டெல்லி காவல்துறை, சிபிஐ ஆகிய இரண்டும் இந்த வழக்கு விசாரணையில் எந்த அளவுக்கு அரசியல் தலையீடுகளுக்கு ஆளாகியுள்ளன என்பது இதன்மூலம் புலனாகிறது. எனக்கு இன்னும் நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. நான் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வேன். எப்படியாவது என் மகனை மீட்பேன்" எனக் கூறியுள்ளார். 

இந்த வழக்கு விசாரணை பற்றி ஜே.என்.யூ மாணவர் தலைவர்களுள் ஒருவரான உமர் காலித் அவர்களிடம் பேசிய போது, ``உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவு ஏமாற்றமளிக்கிறது; எனினும் டெல்லி காவல்துறை, சிபிஐ ஆகியோரின் விசாரணையின் போக்கைப் பார்த்ததால், இப்படித்தான் தீர்ப்பு வரும் என யூகிக்க முடிந்தது. பி.ஜே.பி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஏ.பி.வி.பி மாணவர்களைக் காப்பாற்றி வருகிறது. இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் தலையீட்டைக் கொண்டு இயங்குவதையே இந்தத் தீர்ப்பும் உறுதிப்படுத்துகிறது.  இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் நடக்கின்றன. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பின்புலங்களிலிருந்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். தலித், சிறுபான்மை மாணவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருக்கின்றனர். அவர்களின் மீது செலுத்தப்படும் இவ்வகையான வன்முறை, பின்னாளில் அதே சமூகங்களைச் சார்ந்த மற்ற மாணவர்கள் உயர்கல்வி பயிலக் கூடாது என விடுக்கப்படும் மிரட்டலே ஆகும்." என்றார்.