சமூகம்
Published:Updated:

குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?

குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?
பிரீமியம் ஸ்டோரி
News
குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?

குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?

திருப்தியில் உள்ளவர்களுக்குக் கட்சிப் பொறுப்புகள், கூட்டுறவுச் சங்கப் பதவிகள் என்று பாஸிட்டிவ் எனர்ஜியுடன் ஆளுங்கட்சியான அ.தி.மு.க சுதாரிக்கத் தொடங்கியுள்ள தருணம் இது. இந்த நிலையில்தான், ‘குட்கா விவகாரத்தின் துருப்புச் சீட்டாகக் கருதப்பட்ட முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மனம்திறக்கப் போகிறார்’ என்ற தகவல், ஆளுங்கட்சியை மிரள வைத்திருக்கிறது.

‘குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று தி.மு.க எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. ‘சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசு தயங்குவதால், இந்த வழக்கை ஆழ்ந்து விசாரிக்க வேண்டியிருப்பதாகவே தோன்றுகிறது. ஏதோ தீவிரம் அல்லது சிக்கல் இருப்பதாகவே கருதுகிறோம்’ என்று விசாரணையின்போது சொன்னார்கள் நீதிபதிகள். எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வெளியாகும் என்பதுதான் இப்போதைய நிலை. இந்தச் சூழலில்தான், ‘சமீபத்தில் ஓய்வுபெற்ற ஜார்ஜ், இந்த விவகாரத்தில் தனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லத் தயாராகி விட்டார்’ என்ற தகவல் வெளியாகியுள்ளது.     

குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?

குட்கா விவகாரம் குறித்த ஒரு சின்ன ப்ளாஷ்பேக்: பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களைத் தமிழகத்தில் விற்க, 2013 மே 8-ம் தேதி தடை விதித்தார் ஜெயலலிதா. 2016-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி, செங்குன்றம் எம்.டி.எம் குட்கா நிறுவனத்தின் குடோன்களில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அங்கே, தடை செய்யப்பட்ட குட்கா டன் கணக்கில் சிக்கியது.  அதைத் தொடர்ந்து எம்.டி.எம் குட்கா நிறுவனத்தின் பங்கு தாரர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா மற்றும் கணக்காளர் யோகேஸ்வரி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். யோகேஸ்வரி வீட்டில் கைப்பற்றப்பட்ட கணக்கு வழக்கு நோட்டில், ‘சட்டவிரோதமாக குட்கா பிசினஸ் செய்ய, யார் யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப்பட்டது’ என்பது குறித்த தகவல்கள் இருந்தன. லஞ்சம் வாங்கிய நபர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள் அந்த நோட்டில் சங்கேத வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, அந்தக் கணக்கு நோட்டின் நகலையும், மாதவ ராவ் கொடுத்த வாக்குமூலத்தின் நகலையும் வருமானவரித் துறை புலனாய்வுப் பிரிவு முதன்மை இயக்குநர், தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார். 2016 ஆகஸ்டு 11-ம் தேதி இதற்கான கடிதங்கள் தமிழகத் தலைமைச் செயலாளருக்கும், தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-க்கும் நேரில் தரப்பட்டன. (இவற்றில் டி.ஜி.பி-க்கு அனுப்பப்பட்ட கடிதம், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா தங்கியிருந்த அறையிலிருந்து பிற்பாடு கைப்பற்றப்பட்டது தனிக்கதை!)  

குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?

வருமானவரித் துறை அனுப்பிய இந்தக் கடிதங்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ், ‘வருமானவரித் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், 2011 முதல் 2016 வரை குட்கா விற்பனையில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளிடம், நேர்மையாகவும் ஒளிவுமறைவு இல்லாமலும் விசாரணை நடத்த வேண்டும். சென்னை போலீஸ் இடம்பெறாத, வேறு அமைப்பு இந்த விசாரணையை நடத்த வேண்டும்’ என்று ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தக் கடிதத்தைக் கடுமையாக விமர்சித்தார். ‘‘2016 டிசம்பர் 21-ம் தேதி அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமானவரித் துறை சோதனை நடத்தியது. அதற்கு அடுத்த நாளே, ‘குட்கா விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்’ என போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஒரு கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு எழுதியிருக்கிறார். 2016 ஆகஸ்ட் 11 அன்றே இதுகுறித்து தலைமைச் செயலாளருக்கு வருமானவரித் துறை கடிதம் எழுதியிருக்கிறது. நான்கு மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த ஜார்ஜ், தலைமைச் செயலாளரான ராமமோகன ராவ். அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடந்த அடுத்த நாளே, இப்படி ஒரு கடிதம் எழுதியிருப்பதே நாடகம்தான்’’ என்றார் ஸ்டாலின்.

குட்கா விவகாரம்... உண்மைகளைச் சொல்ல ஜார்ஜ் ரெடி?

‘குட்கா விவகாரத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டி.ஜி.பி ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்குத் தொடர்புள்ளது. இதை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்துவிட்டது.

இந்த நிலையில், ‘‘ஜார்ஜுக்குக் கிடைக்கவிருந்த பணி நீட்டிப்புடன் கூடிய பதவி உயர்வைக் கெடுக்கவே, குட்கா விவகாரத்தில் அவரைச் சிக்க வைக்கும் சதித்திட்டம் போடப்பட்டிருக்கிறது. அந்தக் கணக்கு நோட்டில் ஜார்ஜ் பெயரை வேண்டுமென்றே யாரோ சேர்த்துள்ளனர். மாதம் 20 லட்சம் ரூபாயை குட்கா அதிபர்கள் அவருக்குக் கொடுத்தது போல கோத்துவிட்டுள்ளனர். இதன் பின்னணியில், குட்காவால் ஆதாயம் பெற்ற பல  உயரதிகாரிகள் உள்ளனர். கூடுதல் கமிஷனர் அந்தஸ்தில் இருந்த ஓர் அதிகாரி, ஒரு துணை கமிஷனர் ஆகியோர் ஜார்ஜுக்கு எதிராகச் செயல்பட்டனர். ‘இனியும் உண்மைகளைச் சொல்லாமல் இருந்தால் தனக்குத்தான் சிக்கல்’ என்பதை உணர்ந்த ஜார்ஜ், சி.பி.ஐ அதிகாரி களிடம் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லத் தயாராகிவிட்டார்’’ என்கிறார்கள் சில போலீஸ் அதிகாரிகள்.

ஜார்ஜ் சொல்லும் உண்மைகள் யாரையெல்லாம் மாட்டிவிடுமோ? 

- ந.பா.சேதுராமன்