Published:Updated:

பிரபலங்களின் பிரச்னைகளுக்கு மட்டும்தானா #MeToo?

நாம் அனைவரும் ஒவ்வொரு முறையும் பிரபலங்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே விவாதித்து வருகிறோம். சாமானியர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

பிரபலங்களின் பிரச்னைகளுக்கு மட்டும்தானா #MeToo?
பிரபலங்களின் பிரச்னைகளுக்கு மட்டும்தானா #MeToo?

ந்தியா முழுவதும் கடந்த சில நாள்களாக அதிகம் பேசப்பட்டது, அதிகம் பேசிக்கொண்டிருக்கிறது #MeToo தான். அனைத்துப் பெண்களுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம்தான் #MeToo. பல்வேறு ஆண்டுகளாகவே பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளியில் சொல்லத் தயங்கினர். அவர்கள் தயக்கமின்றி தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் தெரிவிக்க இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் 2006-ம் ஆண்டு இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது மக்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படவில்லை. சென்ற 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் #MeToo ஹேஷ்டாக், அது பரவலான ஒன்பது நாள்களில் மட்டும் 17 லட்சம் ட்வீட்களில் பயன்படுத்தப்பட்டது. 80-க்கும் மேற்பட்ட உலகநாடுகளிலிருந்து இந்த ட்வீட்கள் வெளிவந்தன. 

இந்தியாவைப் பொறுத்தவரை, சென்ற வருடம் அக்டோபர் மாதம் #MeToo ஹேஷ்டாக்கை அமெரிக்காவில் சட்டம் பயிலும் தலித் மாணவி ரயா சர்கார் அறிமுகப்படுத்தினார். தற்போது இந்தியாவிலும், இந்த ஹேஸ்டாக் மூலம் பலரும் தைரியமாகத் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளியில் கூறிவருகின்றனர். அதிலும் குறிப்பாக, கடந்த சில மாதங்களாக இந்த #MeToo ஹேஸ்டாக் இந்திய சினிமாவில் ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். பல்வேறு நடிகைகள் தங்களுடைய சிறுவயதிலும், சினிமா வாழ்விலும் ஏற்பட்ட வன்கொடுமைகளைத் தயக்கமின்றி சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில் பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள், கவிஞர்கள், அரசியல் தரப்பினர்கள் என்று பலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பெரும்பாலும், நாம் அனைவரும் ஒவ்வொரு முறையும் பிரபலங்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி மட்டுமே விவாதித்து வருகிறோம். சாமானியர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

பதின்பருவத்தினர் பலர் கூறுவது, ``நான் படிச்சிருக்கேன், வேலைக்குப் போகிறேன், என்கிட்ட ஸ்மார்ட் போன் இருக்கு, ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுன்ட் எல்லாம் இருக்கு. #Metoo ஹேஷ்டாக் பத்தி தெரியும் அதனால் நான் தைரியமா போடுவேன்" என்று கூறலாம். ஆனால், சமூக ஊடகங்களைத் தாண்டி வெளியே ஒரு பெரிய உலகம் இருக்கிறது என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்தியாவில் பின்தங்கியுள்ள பல்வேறு கிராமங்களில் தினம் தினம் பல்வேறு கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள், மானபங்கப்படுத்தல், அவமானம், தலைக்குனிவு என்று பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகுபவர்களைப் பற்றி ஒருவருக்கும் ஒரு துணுக்கு செய்தியளவுக்கூட எட்டுவதில்லை. முட்புதர்களையும், கரடு முரடான காட்டு வழியையும் தாண்டிப் பள்ளிக்குப் போகின்ற பெண் பிள்ளைகள், குடும்ப சூழ்நிலையால் 100 நாள் வேலைக்குப் போகின்ற பெண்கள், எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்கள், பக்கத்து ஊருக்குச் சென்று வேலை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு மேல் தனியாக வரும் பெண்கள், கூலி வேலை, கட்டட வேலை, வீட்டு வேலை என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தப் பெண்களில் தினமும் பல்வேறு வகையில் பாலியல் தொந்தரவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கலாம். அவங்களுடைய குரல்கள் எல்லாம் எப்படி வெளியே கொண்டுவரப் போகிறோம். இந்தியாவில் இதுபோன்று வெளியிடங்களில் வருடத்துக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மானபங்கப்படுத்தலுக்கு உள்ளாகிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. அதில் 2014-ல் 469 பேரும், 2015-ல் 714 பேரும், 2016-ல் 523 பேரும் அடங்குவர். தெரிந்த கணக்கின்படி இவ்வளவுதான் என்று பதிவுகள் கூறலாம். ஆனால் கணக்கில் அடங்காதவை?

 

இது ஒருபுறம் இருக்க, வேலைக்குச் செல்பவர்கள் அங்கு பாதுகாப்பை உணர்கிறார்களா என்றால் அதுவும் இல்லை எனலாம். வேலைசெய்யும் இடத்தில் உயரதிகாரி, மேலதிகாரி, சக பணியாளர்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கின்றனர். ஒரு சில சூழ்நிலையைத் தவிர்க்க முடியாமல் போகுமானால், பாதிக்கப்படுபவர்களின் நிலை? இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேலை செய்யும் இடத்தில் சுமார் 500-க்கும் அதிகமானோர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுவதாக லோக்சபா அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 231 பேர் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி இரண்டாவது இடத்திலும், அடுத்தடுத்த இடத்தில் ஹரியானா, ராஜஸ்தான்,  மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பீகார் ஆகிய மாநிலங்கள் உள்ளன. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 17-லிருந்து 38 பேர் பாதிப்புக்குள்ளாவதாகக் கூறுகின்றனர். இந்திய மாநிலங்களில் வேலை செய்யும் இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தலின் பட்டியலில் இந்த ஆண்டு தமிழ்நாடு எட்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2016-ல் அலுவலக வளாகத்தில் மானபங்கப்படுத்தல் தொடர்பாக 142 வழக்குகள் பதிவாகியுள்ளன. 

இவை அனைத்தும் நாம் தினம் தினம், காதால் கேட்டும், படித்துக்கொண்டும் இருக்கிறோம். இது போன்ற குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளை அரசும் தடுத்துக்கொண்டே இருப்பதாகவும் கூறுகிறது. இருந்தும் குற்றங்கள் அதிகரிக்கின்றதே தவிர குறைந்ததாகத் தெரியவில்லை. சமூக ஊடகங்களில் மட்டும் ஆதரவு தருகின்ற பலருக்கு, சமூக ஊடகத்தைவிட்டு வெளியேறி ஆஃப்லைன் (Offline) சென்றதும் அவனுடைய கடமை அனைத்தும் முடிந்துவிடுகிறது.