Published:Updated:

கேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு!

கேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு!
கேரள முன்னாள் முதல்வர் மீது பாலியல் வழக்குப் பதிவு!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மீதான பாலியல் வழக்குகுறித்து விசாரிப்பதற்காக, சிறப்பு புலனாய்வு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார். 


கடந்த 2013-ம் ஆண்டு சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சரிதா நாயர், பிஜூ ராதா கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, ஜாமீனில் வெளியே வந்த சரிதா நாயர், கேரள முதல்வர் உம்மன்சாண்டி மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களைக் கூறினார். இது, அரசியல் வட்டாரத்தில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம்குறித்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.  சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்து ஆணையம் விசாரணை மேற்கொண்டது. சரிதா நாயர், ஆணையத்தின் முன் ஆஜராகிப் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், விசாரணை ஆணையம் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கையைத் தாக்கல்செய்தது.

இதனிடையே சரிதா நாயர், கேரள குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2013-ம் ஆண்டு, கேரள முதல்வரை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் சந்திக்கச் சென்றபோது, தனது தொழிலுக்கு உதவுவதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தார் எனக்  குற்றம் சாட்டியிருந்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர்மீது குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில டிஜிபி லோக்நாத் பெக்ரா, ``சரிதா நாயர் அளித்த  புகாரின் பேரில் இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. சட்டம் தன் கடமையைச் செய்யும்'' என்று தெரிவித்தார். சபரிமலை விவகாரத்தைத் திசைதிருப்பும் முயற்சியே தன் மீதான வழக்குப்பதிவு என உம்மன்சாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.