Published:Updated:

`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்!'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi

`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்!'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi
`என் மண்ணில் நடந்த கொலை; சவுதி குற்றவாளிகளை தப்ப விடமாட்டேன்!'- துருக்கி அதிபர் சபதம் #JamalKhashoggi

ஜமால் கஷோகிஜி கொலை சம்பந்தமாக அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறது துருக்கி. துருக்கியின் புலனாய்வுத்  துறை அதிகாரிகள் மட்டுமே இத்தனை நாள் ஊடகங்களிடம் ஜமால் விவகாரத்தைப் பேசி வந்தனர். இந்நிலையில், முதல்முறையாகத் துருக்கி பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் நேரடியாக சவுதி அரசின் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். 


 

ஜமால் கஷோகிஜி யார்... அவருக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இந்த லின்க்கை க்ளிக் செய்யவும்... `7 நிமிடம் சித்ரவதை, பின்னர் தலை துண்டிப்பு'- சவுதி அரசால் பத்திரிகையாளர் ஜமாலுக்கு நடந்த கொடூரம் # Shocking 

ஜமால் காணாமல் போனது முதல் துருக்கி துப்பு துலக்கியது வரையிலான ஒரு குட்டி ரீகேப்..

*வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஜமால் கஷோகிஜி அக்டோபர் 2-ம் தேதி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குத் தனது திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பெற வந்தார். உள்ளே சென்றவர் வெளியே வரவேயில்லை. சவுதியிலிருந்து வெவ்வேறு ஜெட் விமானங்கள் மூலம் 15 பேர் துருக்கியின் இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர். ஜமாலை கொலை செய்வதற்காக வந்த அந்த `ஸ்பெஷல்’ டீமில் சவுதியின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உடற்கூராய்வு நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் அடக்கம். அவர்கள் திட்டமிட்டபடியே ஜமாலைக் கொலை செய்தனர்.

*கொலையைக் கண்டுபிடித்த துருக்கி அரசு, ஜமால் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறியது.


 

*ஸ்பெஷல் டீமில் இருந்த உடற்கூறாய்வு நிபுணர் ஜமாலின் உடலைத் துண்டுதுண்டாக வெட்டி கச்சிதமாக சூட்கேஸில் வைத்து அப்புறப்படுத்தியுள்ளார். ஜமால் சித்ரவதை செய்யப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தை துருக்கி வெளியிட்டது. ஜமால் கொலை செய்யப்பட்டதற்குச் சவுதி அரசு கடும் விளைவுகளைச் சந்திக்கும் என அமெரிக்கா எச்சரித்தது.


 

*முதலில் `எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று சாதித்து வந்த சவுதி அரசு, கடந்த 20-ம் தேதி `ஜமால் கஷோகிஜி துருக்கியில் உள்ள சவுதி தூதரக அலுவலகத்தினுள்தான் கொல்லப்பட்டார்’ என்று ஒப்புக்கொண்டது. அதற்காக ஒரு கதையையும் ஜோடித்தது.

*இதனிடையே துண்டிக்கப்பட்ட ஜமாலின் விரல்களை ஸ்பெஷல் டீம் சவுதி இளவரசருக்குப் பரிசாக அளித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்து வெளியிட்டன.

மொத்தத்தில் ஒரு ஹாலிவுட் த்ரில்லர் அளவுக்கு ஜமாலின் கொலை நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்கள் கடந்த நிலையில்  ஜமால் படுகொலை குறித்து துருக்கி பிரதமர் எர்டோகன் இன்று துருக்கிய நாடாளுமன்றத்தில் பேசினார். அவரது உரை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.


 

எர்டோகன் உரையின் சில துளிகள்..

 `ஜமால் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவருவோம் என்று உறுதியளிக்கிறேன். சவுதி தீட்டிய சதித் திட்டத்தை உலகுக்குத் தோலுரித்துக் காட்டுவோம். இந்தச் சம்பவம் நடந்தது சவுதி தூதரகத்தில்தான் என்றாலும் இது துருக்கி மண்ணில் நடந்த கொலை. எனவே, குற்றவாளிகளை தப்பிக்க விட மாட்டோம். சவுதி இளவரசரிடம் ஒன்று சொல்ல வேண்டும். ஜமால் கொலையை விசாரிக்கத் தனிப்படை அமைத்திருக்கிறாராம். இந்தப் படுகொலையை சவுதி விசாரிக்க வேண்டியதில்லை. துருக்கியின் எல்லைகளுக்குள் நடந்த படுகொலைக்கு துருக்கி மண்ணில்தான் தீர்ப்பு கிடைக்கும். 

சவுதி தூதரகத்துக்குள் வந்த ஜமால் மீண்டும் வெளியே சென்றுவிட்டார் என்று கூறி வந்த சவுதி அரசு, திடீரென ஜமால் சின்னத் தகறாரில் தூதரக அதிகாரிகளால் கொல்லைப்பட்டுவிட்டார் என்று கதை சொல்லியது. அந்தக் கதையை என்னால் நம்ப முடியாது. யார் உத்தரவின் பேரில் ஸ்பெஷல் டீம் துருக்கி வந்திறங்கியது. ஜமாலைக் கொல்வதற்கு உத்தரவிட்டது யார். இந்தக் கேள்விகளுக்கு எனக்கு பதில் வேண்டும். கொலை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்ட சவுதி, ஜமாலின் உடல் எங்கேயிருக்கிறது என்பதைச் சொல்ல ஏன் மறுக்கிறது. இது திட்டமிடப்பட்ட மிருகத்தனமான கொலை. பின்னணியில் இருக்கும் சக்திகளை நீதியின் முன் நிற்க வைப்போம்’ என்று கடும் கோபத்துடன் பேசினார். எர்டோகனின் பேச்சுக்குத் துருக்கி நாடாளுமன்றத்தில் கரகோஷங்கள் எழுந்தன.

ஏற்கெனவே, முட்டல் மோதல் என இருந்த சவுதியும் துருக்கியும் ஜமால் கொலையால் எதிரி நாடுகளாகவே மாறிவிட்டன. இடையில் அமெரிக்காவின் தலையீடு அந்தத் தீயில் எண்ணெய்யை ஊற்றி வருகிறது.