Published:Updated:

தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்!

தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்!
பிரீமியம் ஸ்டோரி
News
தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்!

ஆபத்தில் தென் மாவட்டங்கள்

‘தமிழகத்தின் தென் மண்டலக் கடற்கரையில் தாதுமணல் கொள்ளை’ என்ற குற்றச்சாட்டு குறித்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நேரடி விசாரணையில் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், அடுத்தடுத்து பல்வேறு பகீர் தகவல்கள் ஆவணங்களாக வெளிப்பட ஆரம்பித்துள்ளன. அதைப் பற்றிய கட்டுரையின் கடந்த இதழ் தொடர்ச்சி இதோ...

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2017 ஜனவரியில் ஐ.ஏ.எஸ் அதிகாரி சத்யபிரதா சாஹு மேற்பார்வையில் சிறப்புக் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்தது. பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறைகளின் அதிகாரிகள் இதில் நியமிக்கப்பட்டனர். முதற்கட்டமாக, இரண்டாம் நிலை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டன. இக்குழுக்கள் மூலம் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், 2017 மே மற்றும் ஜூன் மாதங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சாஹு தலைமையில் நேரடியாக சிறப்புக்குழு மூலம் சூப்பர் செக் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, 220 (177+43) தாதுமணல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இவை ஹைதராபாத்தில் உள்ள அணுக்கனிம இயக்ககத்துக்கு, வேதியியல் மற்றும் கனிமப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அக்டோபர் இறுதியில் முதற்கட்ட அறிக்கைகளும் தயாராகின.

தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்!

அதன்பின், மோனசைட் செறிவூட்டப்பட்ட டெய்லிங்ஸ்  (கடற்கரை மணலிலிருந்து கார்னெட், இல்மினைட், ரூடைல், சில்மினைட் என கனகனிமங்கள் ஒவ்வொன்றாகப் பிரிக்கப்பட்ட பின், மோனசைட் அதிகமுள்ள தாதுமணல்தான் ‘மோனசைட் செறிவூட்டப்பட்ட டெய்லிங்ஸ்’ (Monazite Enriched Tailings) எனக் குறிப்பிடப்படுகிறது) குறித்து, 2017 நவம்பர் மாதம் அணுக்கனிம இயக்ககம் (AMD), இந்தியச் சுரங்கத் துறை (IBM), அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் (AERB) ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் இரண்டாம்நிலைக் குழுக்களின் தலைவர்களை உள்ளடக்கிய கூட்டாய்வு ஒன்று, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மதிப்பீடு செய்ய, திருநெல்வேலி மாவட்டம் திருவேம்பலபுரம் வி.வி மினரல்ஸ் கம்பெனி மற்றும் குட்டம் பீச் சாண்ட்ஸ் மினரல்ஸ் கம்பெனி ஆகிய இடங்களில் மீண்டும் ‘சூப்பர் செக்’ ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, முழுமையான ஆய்வறிக்கைகள் தயாராகின.

கணக்கு 85 லட்சம் டன்... இருப்பு 1.55 கோடி டன்!

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், பல்வேறு தாதுமணல் கம்பெனிகள் 1,55,48,680 டன் கனகனிமங்களைக் கொண்ட தாதுமணலை ஸ்டாக் என்கிற வகையில் வைத்துள்ளன. ஆனால், 85,58,734 டன் தாதுமணல் மட்டுமே ஸ்டாக் இருப்பதாக அந்தக் கம்பெனிகள் அறிவித்திருந்தன. ஆனால், அதைவிட 70 லட்சம் டன் கூடுதலாக இருக்கிறது. இது எங்கிருந்து வந்தது என்கிற கேள்வி எழுகிறது. 2013-ம் ஆண்டில், தாதுமணல் அள்ளுவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிகாரிகளின் உதவியுடன் தாதுமணல் கொள்ளை தொடர்ந்துள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

முதற்கட்ட ஆய்வில் சேகரிக்கப்பட்ட 53% மாதிரிகளில், மோனசைட் சதவிகிதச் சமன் (Percent Monazite Equivalent) மதிப்பு, 2007 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த 0.25% அளவைவிட அதிகமாக உள்ளது என்று சாஹு குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது. ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள (Finished Mineral) பல மாதிரிகளில், மோனசைட் சதவிகிதச் சமன், நிர்ணயிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு அதிகம் உள்ளதையும் இந்தக் குழுவின் அறிக்கை குறிப்பிடுகிறது. எனவே, ‘கார்னெட், இல்மினைட், ஸிர்கான் போன்ற கனகனிமங்களை அனுப்புகிறோம் என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு மோனசைட் கடத்தப்பட்டிருக்கலாம்’ என்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட சந்தேகம், இதன் மூலமாக மேலும் வலுவடைகிறது. மோனசைட் உள்ள தாதுமணல், தவறான கைகளுக்குக் கிடைத்தால், தேசத்தின் பாதுகாப்புக்கே அது அச்சுறுத்தலாக அமையலாம் என்று சாஹு அறிக்கைக் குறிப்பிடுவதையும் இங்கு சுட்டிக் காட்டுவது அவசியம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்!

நான்கு மடங்கு கூடுதல் ஸ்டாக்!

சாஹு குழுவின் அறிக்கையிலும் சரி, நீதிமன்ற அறிவுரையாளர் சுரேஷின் 2017 ஜூன் அறிக்கையிலும் சரி, வி.வி மினரல்ஸுக்கு சொந்தமான திருவேம்பலபுரம் வளாகத்தில் உள்ள மோனசைட் டெய்லிங்ஸ் கவனம் பெறுகிறது. திருவேம்பலபுரத்தில் சேமித்து வைத்திருக்கும் மோனசைட் டெய்லிங்ஸ் பற்றிய விவரங்களை, உயர் நீதிமன்ற உத்தரவின்படி அணுசக்தித் துறைக்கு (DAE) அளித்தது, வி.வி மினரல்ஸ் நிறுவனம். இதன் அடிப்படையில் 2017 ஜனவரியில், நீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலத்தைச் சமர்ப்பித்தது அணுசக்தித்துறை.

2007 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், 34 தாதுமணல் குவாரிகளிலிருந்து எடுத்த தாதுமணலிலிருந்து (சராசரியாக 28% மோனசைட் உள்ள) 80,725.05 டன் மோனசைட் டெய்லிங்க்ஸைத் தான் வைத்திருப்பதாக அணுசக்தித் துறைக்குத் தெரிவித்திருக்கிறது வி.வி மினரல்ஸ் நிறுவனம். இந்த டெய்லிங்ஸில் உள்ள மோனோசைட் சதவிகிதத்தை வைத்துப் பார்த்தால் 23,461.7 டன் அளவுள்ள மோனசைட் அந்த டெய்லிங்ஸில் இருக்க வேண்டும். வி.வி.மினரல்ஸ், தான் வைத்துள்ள 34 குவாரிகளுக்கும் தந்துள்ள மோனசைட் சதவிகிதம் மற்றும் மொத்தத் தாதுமணல் அள்ளிய விவரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிட்டால், வெறும் 5,876 டன் மோனசைட் உள்ள டெய்லிங்ஸை மட்டுமே அவர்கள் வைத்திருக்க முடியும். ஆனால், கிட்டத்தட்ட நான்கு மடங்கு கூடுதலாக வைத்துள்ளனர். ‘‘இந்தப் ‘பொருத்தமின்மை’ குறித்து வி.வி மினரல்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்’’ என்று நீதிமன்றத்தில் அணுசக்தித் துறை தெரிவித்தது.

சட்டத்துக்குப் புறம்பாக மூன்று கோடி டன் அள்ளினர்...

‘80,725.05 டன் மோனசைட் டெய்லிங்ஸ் தன்னிடம் உள்ளதாக, வி.வி மினரல்ஸ் நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது’ என்று சுட்டிக்காட்டும் நீதிமன்ற அறிவுரையாளர் சுரேஷ், ‘குறைந்தது 4.69 கோடி டன் தாதுமணலை வி.வி.மினரல்ஸ் அள்ளியிருந்தால்தான், 80,725.05 டன் மோனசைட் டெய்லிங்ஸ் கிடைத்தி ருக்கும்’ எனக் கணக்குப்போட்டு தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆனால், வி.வி. மினரல்ஸ் ‘வெறும் 98.88 லட்சம் (98,88,100) டன் தாதுமணலை மட்டுமே 2007 -16 காலத்தில் அள்ளியதாக’க் கணக்குக் காட்டுகிறது. சரக்குப் போக்குவரத்து அனுமதி விவரங்களை ஆராய்ந்தால், வி.வி மினரல்ஸ் அள்ளியிருக்கும் தாதுமணல் அளவு 92,28,100 டன்தான். இந்தக் காலகட்டத்தில் குத்தகை அனுமதி பெற்றுச் செயல்பட்ட அனைத்துக் கம்பெனிகளையும் (வி.வி.மினரல்ஸ் உள்பட) ஒன்றுசேர்த்தால்கூட, 1.51 கோடி டன் தாதுமணல் அள்ளப்பட்டதாகத் தான் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால் ஏறத்தாழ மூன்று கோடி டன் தாதுமணல், சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகிறது. ‘வி.வி.மினரல்ஸ், தான் அள்ளியிருப்பதாகக் கூறியுள்ள மொத்தத் தாதுமணல் பற்றிய விவரங்களை இந்தியச் சுரங்கப் பிரிவும், மாநில அரசும் உறுதிசெய்ய வேண்டும்’ என அணுசக்தித் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாதுமணல் விவகாரம் -2: அணு ஆயுத மூலப்பொருள்... அளவுக்கு அதிகமான ஸ்டாக்!

அணுசக்தி இயக்ககம் அனுப்பிய ஆய்வு முடிவின்படி, திருவேம்பலபுரத்தில் சராசரியாக 17.20% முதல் 17.47% வரை மோனசைட் சதவிகிதச் சமன்கொண்ட 23,608 டன் மோனசைட் உள்ள 1,35,135 டன் மோனசைட் செறிவூட்டப்பட்ட டெய்லிங்க்ஸ் இருக்கலாம் என்று கண்டறியப் பட்டுள்ளது. அதாவது, ஏற்கெனவே வி.வி.மினரல்ஸ் குறிப்பிட்டுள்ளதைவிட, சுமார் 54 ஆயிரம் டன் அதிகமாக மோனசைட் டெய்லிங்க்ஸ் ஸ்டாக்காக இருக்க வாய்ப்புள்ளது. இது குறைந்தபட்சம் 17.20% (நிர்ணயிக்கப்பட்ட 0.25% அளவை விடக் கிட்டத் தட்ட 69 மடங்கு அதிகம்) மோனசைட் சதவிகிதச் சமன் மதிப்புகொண்ட மோனசைட் டெய்லிங்க்ஸ் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

1,35,135 டன் மோனசைட் டெய்லிங்ஸ் இருக்க வேண்டுமென்றால், அதற்காக எத்தனை கோடி டன் தாதுமணல் அள்ளப்பட்டிருக்கும்? இந்தக் கேள்வி எழும் அதேநேரத்தில், அணு ஆயுத மூலப்பொருளான மோனசைட்டைத் தனியார் கம்பெனிகள் உற்பத்தி செய்யவோ, ஏற்றுமதி செய்யவோ அனுமதி இல்லாதபோது, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மோனசைட் சதவிகிதச் சமன் உள்ள மோனசைட் டெய்லிங்ஸை ஸ்டாக் என்கிற வகையில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் எப்படி வைத்திருக்க முடியும்?

- ஜூ.வி டீம்

(தொடரும்)

மோனசைட் சதவிகிதச் சமன் என்றால் என்ன?

மோ
னசைட் சதவிகிதச் சமன் (Percent Monazite Equivalent) ஒரு மாதிரியில் உள்ள மோனசைட் அளவை, அதன் கதிரியக்கத்தை அளவிடுவதன் மூலம் வரையறுப்பதே மோனசைட் சமன் (Monazite equivalent). இது பொதுவாக, அந்த மாதிரியில் உள்ள மோனசைட்டின் எடை சதவிகி தத்தைக் குறிப்பிடும் மிக நெருக்கமான கணக்கீடு ஆகும்.