Published:Updated:

`உங்கள் இஷ்டத்துக்கு இப்படித்தான் செய்வீர்களா?’ - புழல் சிறையில் பொரிந்து தள்ளிய பெண் நீதிபதி

`உங்கள் இஷ்டத்துக்கு இப்படித்தான் செய்வீர்களா?’ - புழல் சிறையில் பொரிந்து தள்ளிய பெண் நீதிபதி
`உங்கள் இஷ்டத்துக்கு இப்படித்தான் செய்வீர்களா?’ - புழல் சிறையில் பொரிந்து தள்ளிய பெண் நீதிபதி

`இந்த ஒரு எஸ்.பி-யால் 700 கைதிகளும் துன்பப்படுகின்றனர். சிறைக் கைதிகளுக்கு எந்தவித கவுன்சலிங்கும் தேவையில்லை. எஸ்.பி-க்குத்தான் கவுன்சலிங் கொடுக்க வேண்டும்' எனக் கொட்டித் தீர்த்தனர் கைதிகள்.

புழல் சிறையில் கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. ``கைதிகளின் பெயரில் போலியாகக் கடிதம் தயாரிக்கிறீர்கள். இப்படித்தான் உங்கள் இஷ்டத்துக்கு நடந்து கொள்வீர்களா?" என சிறை எஸ்.பி-யை பொரிந்து தள்ளியிருக்கிறார் சென்னை மாவட்ட நீதிபதி ஜெயந்தி. 

தமிழக சிறைகளில் கைதிகள் சிலர் உல்லாச வாழ்க்கை நடத்தும் காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, மத்திய சிறைகளில் அதிரடி ஆய்வுகள் நடந்தன. தொடர்ந்து பல்வேறு சிறைகளில் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில், கோவை சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் எஸ்.பி செந்தில்குமார். அவர் பதவியேற்ற நாளில் இருந்தே அச்சத்துடன் நாள்களைக் கடத்தி வருகின்றனர் கைதிகள். கைதிகளின் அறைகளில் திடீர் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவது, இருநூறுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வீழ்த்தியது என எஸ்.பி-யின் செயல்பாடுகள் அத்துமீறிச் சென்றன. ஒரு கட்டத்தில், ஏ வகுப்பு கைதியாக இருந்த அசோக்குமார் என்பவர் மனநலம் பாதித்த கைதிகளின் பிளாக்கில் அடைக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கைதி அசோக்குமார், தன்னுடைய மனைவி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

கடந்த வாரம் இந்த வழக்கின்போது பேசிய நீதியரசர் சி.டி.செல்வம், ``கைதிகள் ஏதாவது தவறான செயலில் ஈடுபட்டால், கவுன்சலிங்தான் கொடுக்க வேண்டும். பெயில் இல்லாமல் நீண்டகாலமாகச் சிறையில் இருப்பவர்கள் எவ்வளவு கொடுமையான மனநிலையில் இருப்பார்கள். இது போன்ற செல்களில் அடைப்பதன் மூலம், அவர்களை மேலும் தவறு செய்யத்தான் தூண்டுகிறீர்கள். கைதிகள் செல்போன் வைத்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அப்படியானால், சிறையில் ஜாமர் கருவி எதற்காக இருக்கிறது?’’ எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அசோக்குமாருடன் அடைக்கப்பட்டுள்ள மனநலம் பாதித்த, ஹெச்.ஐ.வி பாதித்த 32 கைதிகளின் பெயர்ப் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நீதியரசர், மாவட்ட நீதிபதி விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார். 

இதையடுத்து, புழல் சிறையில் ஆய்வை மேற்கொண்டார் சென்னை மாவட்ட நீதிபதி ஜெயந்தி. இந்த ஆய்வின்போது, கைதி அசோக்குமாருக்கு எதிராக இன்னொரு கைதி எழுதிய கடிதம் ஒன்றைக் காண்பித்துள்ளனர் சிறை அதிகாரிகள். அப்போது, இந்த இரண்டு கைதிகளுக்குள்ளும் பிரச்னை. அதனால்தான் வேறு பிளாக்குக்கு மாற்றினோம் எனக் கூறியுள்ளனர். இதையடுத்து, அசோக்குமாரிடம் விசாரித்தார் நீதிபதி. ``அப்படி எந்தப் பிரச்னையும் இல்லை. அதிகாரிகள் குறிப்பிடும் கைதி இங்குதான் இருக்கிறார். அவரிடமே கேளுங்கள்" எனக் கூறியிருக்கிறார். அந்தக் கைதியிடம் நீதிபதி கேட்டபோது, ``எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. எனக்கு எழுதப் படிக்கவே தெரியாது. இந்தக் கடிதத்தை போர்ஜரியாகத் தயாரித்துள்ளனர்" எனக் கூறியிருக்கிறார். இதை நீதிபதி எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து அதிகாரிகளிடம் பேசியவர், ``உங்கள் இஷ்டத்துக்கு இப்படித்தான் செய்வீர்களா? உங்கள் மீது ஏராளமான புகார்கள் வருகின்றன. அனைத்துக் காரியங்களையும் நீங்கள்தான் செய்கிறீர்கள். கைதிகளுக்கு முறையாக உணவு கொடுக்கவில்லை. இது நீதிமன்றத்தையே அவமதிப்பதாகும்’’ எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விவகாரத்தை அறிக்கையாக நீதிமன்றத்துக்கு அளித்திருக்கிறார் நீதிபதி. அதில், `தனிப்பட்ட முறையில் எஸ்.பி செயல்படுகிறார்; கைதிகள் மீது எந்தத் தவறும் இல்லை' எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. 

நீதிபதியின் ஆய்வு குறித்து நம்மிடம் பேசிய சிறைக் கைதி ஒருவரின் உறவினர், ``ஆய்வு நடத்தப்பட்ட விதத்தால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர் கைதிகள். இந்த ஒரு எஸ்.பி-யால் 700 கைதிகளும் துன்பப்படுகின்றனர். 'சிறைக் கைதிகளுக்கு எந்தவித கவுன்சலிங்கும் தேவையில்லை. எஸ்.பி-க்குத்தான் கவுன்சலிங் கொடுக்க வேண்டும்' எனக் கொட்டித் தீர்த்தனர். அவர்களது குறைகளை எல்லாம் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கிறார் மாவட்ட நீதிபதி ஜெயந்தி" என்றார் பொறுமையாக. 

நீதிபதியின் அறிக்கையை அடுத்து, நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருக்கிறார் புழல் எஸ்.பி செந்தில்குமார். `பணிபுரியும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகிறார் எஸ்.பி செந்தில்குமார். அவர் மீது சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் உள்பட பலர் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?' எனக் கேள்வி எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். 

அடுத்த கட்டுரைக்கு