Published:Updated:

`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்!' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்

`இன்றைக்கு இந்த வழக்கை நான் முடிக்கப்போவதில்லை. சூப்பிரண்ட் இங்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் வாரண்ட் போட்டுவிடுவேன்' எனச் சத்தம் போட்டார் நீதியரசர் சி.டி.செல்வம்.

`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்!' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்
`ராஜபக்சே ரைட் ஹேண்ட்; சிறையில் கேங்க் லீடர்!' - புழல் சிறை எஸ்.பி பதிலால் சீறிய நீதியரசர்கள்

புழல் சிறையில் கைதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையை அறிந்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர் உயர் நீதிமன்ற நீதியரசர்கள். `எங்களையே இந்தளவுக்கு நடத்துகிறீர்கள் என்றால், சிறையில் இருப்பவர்களை என்ன பாடுபடுத்துவீர்கள்?' என புழல் எஸ்.பி-யைப் பொரிந்து தள்ளியுள்ளனர். 

தமிழக சிறைகளில் கைதிகள் சிலர் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இந்த விவகாரத்தின் அடுத்தகட்டமாக, சிறை எஸ்.பி-க்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் கோவை மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் கண்காணிப்பாளர் செந்தில்குமார். இவர் பதவியேற்ற நாளில் இருந்தே அச்சத்துடன் நாள்களைக் கடத்தி வருகின்றனர் கைதிகள். திடீர் சோதனை என்ற பெயரில் கைதிகளை அச்சுறுத்துவது, 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை வீழ்த்தியது, அடக்குமுறை என நாளுக்கு நாள் எஸ்.பி-யின் செயல்பாடுகள் அத்துமீறிச் சென்றன. இதன் நீட்சியாக, ஏ பிளாக்கில் கைதியாக இருந்த அசோக்குமார் என்பவரை மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளோடு அடைத்து வைக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த கைதி அசோக்குமாரின் மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கின் விசாரணையின்போது, அசோக்குமாருடன் அடைக்கப்பட்டுள்ள மனநலம் பாதித்த மற்றும் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 32 கைதிகளின் பெயர்ப் பட்டியலும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த நீதியரசர், `சிறையில் மாவட்ட நீதிபதி ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து புழல் சிறையில் விரிவாக ஆய்வு நடத்தினார் மாவட்ட நீதிபதி ஜெயந்தி. இந்த ஆய்வின்போது, புழல் எஸ்.பி செந்தில்குமாரின் செயல்பாடுகளை நேரில் பார்த்து கடுமையாகக் கண்டித்தார் நீதிபதி. ஆய்வில் கிடைத்த தகவல்களையும் உயர் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பி வைத்தார் ஜெயந்தி. நேற்று காலை இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. காலை 11.30 மணியளவில் நீதியரசர்கள் சி.டி.செல்வம், ராமதிலகம் ஆகியோர் முன்பு நடந்த விசாரணையில், புழல் நிர்வாகம் சார்பில் ஜெயச்சந்திரன் என்பவரும் தமிழ்வாணன் என்பவரும் ஆஜராகியிருந்தனர். 

அவர்கள் இருவரையும் பார்த்த நீதிபதி, `நாங்கள், யாரை விளக்கம் கொடுப்பதற்காக அழைத்திருந்தோம். அவர் (எஸ்.பி) எங்கே?' எனக் கேட்க, `அட்வகேட் ஜெனரல் ஆபீஸ்க்குப் போயிருக்கார். அதனால்தான் நாங்கள் இங்கு வந்தோம்' என இருவரும் பதில் அளித்துள்ளனர். இந்தப் பதிலை எதிர்பார்க்காத நீதியரசர் சி.டி.செல்வம், `ஏ.ஜி ஆபீஸ் மீட்டிங்கில் அவர் கலந்துகொள்கிறார். இங்கு வந்து ஆஜராக வேண்டும் என ஒரு மாதத்துக்கு முன்னரே ஆர்டர் போட்டுவிட்டோம். இதை நீங்கள் மதிக்க மாட்டீர்கள்... இல்லையா? இன்றைக்கு இந்த வழக்கை நான் முடிக்கப்போவதில்லை. சூப்பிரண்ட் இங்கு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் வாரண்ட் போட்டுவிடுவேன்' எனச் சத்தம் போட்டார். இந்தப் பதிலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த புழல் எஸ்.பி செந்தில்குமார், அடுத்த 45 நிமிடத்தில் நீதியரசர்கள் முன்னிலையில் ஆஜரானார். 

அவரைப் பார்த்துப் பேசிய நீதியரசர் சி.டி.செல்வம், ` உங்களைக் கூப்பிட்டால் ஏ.ஜி ஆபீஸ் மீட்டிங்குக்கு போவீர்களா? கோர்ட்டில் வழக்கு இருக்கிறது என ஏ.ஜி-யிடம் சொல்ல வேண்டியதுதானே... எங்களையே நீங்கள் இந்தளவுக்கு நடத்துகிறீர்கள் என்றால், சிறையில் இருப்பவர்களை என்ன பாடுபடுத்துவீர்கள்? உங்கள் இஷ்டத்துக்குத்தான் எதையும் செய்வீர்களா?' எனக் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க, அப்படியே ஒடுங்கிப் போய் நின்றார் எஸ்.பி செந்தில்குமார். நீதிபதியின் கோபத்தைக் கண்ட வழக்கறிஞர் கண்ணதாசன், எஸ்.பி அருகில் போய் நின்றிருக்கிறார். அவரைப் பார்த்த நீதிபதி, `என்ன கண்ணதாசன்? எஸ்.பி வந்ததும் வந்துவிட்டீர்கள். கொஞ்சம் தள்ளி நில்லுங்கள்' எனக் கூற, `நான் சும்மாதான் சார் வந்தேன்' எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார். 

இதன் பின்னர், இலங்கையைச் சேர்ந்த சிறைவாசி அசோக்குமாருக்கு நடத்தப்பட்ட கொடுமைகளைப் பற்றிய வாதம் நடந்தது. இதற்குப் பதில் கொடுத்த எஸ்.பி, `அந்தக் கைதி ராஜபக்சேவுக்கு ரைட் ஹேண்டாக இருக்கிறார். சிறையில் இருப்பவர்களுக்கு அவர்தான் கேங்க் லீடர். அதனால்தான் செல்லுலர் பிளாக்கில் வைத்தோம். இருப்பினும், நான் தெரியாமல் செய்துவிட்டேன். இனி அப்படிச் செய்ய மாட்டேன்' எனத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, `உங்களுக்கு அவர் ஏதாவது பிரச்னை செய்தாரா? சிறையில் ஏதாவது பிரச்னை செய்தாரா... அவரிடம் விசாரித்தால் உங்கள் மீது புகார் சொல்கிறார். இனி எதாவது தவறு நடந்தால் எங்கள் ரியாக்சன் வேறு மாதிரி இருக்கும்' என எச்சரித்துவிட்டு, திங்கள்கிழமைக்கு வழக்கை ஒத்தி வைத்தார். 

கைதி அசோக்குமாரின் உறவினர்களிடம் பேசினோம். ``நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது, ஆரோக்கியமான உணவு இல்லாமல் அசோக்குமார் அவதிப்படுவது குறித்துத் தெரிவித்தோம். நீதிபதிகளும், `மருத்துவர் பரிந்துரைத்த உணவுகளைக் கொடுக்கலாம்' எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று காலை புழல் சிறைக்கு சிறு தானியங்கள், பேரீச்சம் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு போனோம். `இதை அனுமதிக்க முடியாது' என சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவைக் காட்டியும் அவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இந்த விவகாரத்தை எஸ்.பியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் கைதி அசோக்குமார். `அதெல்லாம் முடியாது. எந்தக் கோர்ட்டும் எனக்கு ஆர்டர் போட முடியாது. அந்த உணவை அனுமதிக்க முடியாது' எனக் கூறி எரிச்சல் காட்டியிருக்கிறார் எஸ்.பி. நீதியரசர்களின் கண்டிப்பையும் அவர் பொருட்படுத்தவில்லை. நீதிமன்றத்தை மட்டும்தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். இந்த வழக்கில் தொடக்கத்தில் உத்தரவிட்ட கீழமை நீதிமன்ற நீதிபதி ஐயப்பன், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆகியோருக்குப் பெரிதும் நன்றிக்கடன்பட்டுள்ளோம். நீதிபதிகளின் கண்டிப்புகளால்தான் சிறைக் கைதிகளுக்குக் குறைந்தபட்ச நியாயமாவது கிடைத்திருக்கிறது" என்கின்றனர் நெகிழ்வுடன்.