Published:Updated:

` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா?' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்

`அறிக்கையைப் பார்க்காமல் எங்கள் முன்னால் எப்படி சமர்ப்பித்தீர்கள். உங்களிடம் வந்த பிறகுதானே எங்களுக்கு வரும்' எனக் கோபப்பட்டார் நீதியரசர் சி.டி.செல்வம்.

` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா?' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்
` என்ன விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறீர்களா?' - புழல் எஸ்.பி-யை எச்சரித்த நீதியரசர்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தின் தொடர் கண்டனத்துக்கு ஆளாகி வருகிறார் புழல் சிறை எஸ்.பி செந்தில்குமார். ` கைதிகளிடம் நடந்து கொண்ட விதத்துக்கு ஆதாரம் இருக்கும்போது, இப்படியொரு அறிக்கையை எப்படி எங்கள் முன்னால் வைக்கலாம்' எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர் நீதியரசர்கள். 

தமிழக சிறைகளில் கைதிகளில் சிலர் உல்லாச வாழ்க்கை நடத்துவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்தவகையில், கோவை சிறையில் இருந்து சென்னை, புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் எஸ்.பி செந்தில்குமார். இவர் பணியில் சேர்ந்த நாள் முதலாக கைதிகளிடம் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாகப் புகார் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக `ஏ பிளாக்' கைதியாக இருந்த இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை மனநலம் பாதித்த கைதிகள் தங்கியிருக்கும் பிளாக்கில் அடைத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அவருக்கு சத்துள்ள உணவை வழங்காததால் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவரின் மனைவி. இதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதி ஜெயந்தி தலைமையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டனர் நீதியரசர்கள். அவரும் புழல் சிறையில் நேரடியாக ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார். இந்த ஆய்வின்போது, எஸ்.பி செந்தில்குமாரைக் கண்டிக்கவும் செய்தார். 

கடந்தவாரம் இந்த வழக்கின் விசாரணை நீதியரசர்கள் சி.டி.செல்வம், ராமதிலகம் ஆகியோர் அமர்வு முன்பாக வந்தது. அப்போது விசாரணையில் ஆஜராகாமல் எஸ்.பி போக்கு காட்டியதால், கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர் நீதியரசர்கள். இதையடுத்து, 45 நிமிடத்தில் ஆஜரான செந்தில்குமார் எஸ்.பி, `அந்தக் கைதி ராஜபக்சேவுக்கு ரைட் ஹேண்டாக இருக்கிறார். சிறையில் இருப்பவர்களுக்கு அவர்தான் கேங்க் லீடர். அதனால்தான் செல்லுலர் பிளாக்கில் வைத்தோம். இருப்பினும், நான் தெரியாமல் செய்துவிட்டேன். இனி அப்படிச் செய்ய மாட்டேன்' எனத் தெரிவித்தார். இந்தப் பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள், 17-ம் தேதிக்கு (இன்று) வழக்கை ஒத்தி வைத்தனர். இன்று மதியம் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது கைதி அசோக்குமார் விவகாரம் தொடர்பாக விளக்க அறிக்கையை சமர்ப்பித்தார் புழல் எஸ்.பி செந்தில்குமார். அந்த அறிக்கையில், ` கைதி அசோக்குமாரை வேறு பிளாக்குக்கு மாற்றவில்லை. அவர் தான் மிக மோசமாக நடந்துகொள்கிறார்' எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதைப் பார்த்த நீதியரசர் சி.டி.செல்வம், ` இந்த விவகாரத்தில் நடந்த அனைத்துக்கும் ஆதாரங்கள் இருக்கும்போது, இப்போதும் அப்படியெல்லாம் இல்லை என அறிக்கை கொடுக்கிறீர்கள். அவர் விஷயத்தில் நடந்ததைக் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருந்தால்கூட பரவாயில்லை. என்ன நினைத்துக்கொண்டு இப்படிச் செய்கிறீர்கள். என்ன விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறீர்களா?' என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார்.

இதற்குப் பதில் கொடுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், ` அவர் கொடுத்த அறிக்கையை நான் பார்க்கவில்லை' எனக் கூற, `அறிக்கையைப் பார்க்காமல் எங்கள் முன்னால் எப்படி சமர்ப்பித்தீர்கள். உங்களிடம் வந்த பிறகுதானே எங்களுக்கு வரும்' என சத்தம் போட்டுவிட்டு, `மீண்டும் நாளைக்கு வாருங்கள்' என எஸ்.பி-யிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து பேசிய நீதியரசர் சி.டி.செல்வம், ` இதுபோல் தொடர்ந்து செய்வதால் கஜா நிவாரணத்துக்கு 25,000 நிதியைக் கொடுக்குமாறு கூற வேண்டியது வரும்' என வாய்மொழியாக கூறியிருக்கிறார். `இந்த வார்த்தையை உத்தரவாக அவர் குறிப்பிடவில்லை. எஸ்.பி-க்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே நீதியரசர் இவ்வாறு கூறியதாக' அசோக்குமார் தரப்பினர் தெரிவித்தனர்.