Published:Updated:

``மோடிக்கு எதிரா பேசுவியா?’’ - மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த பா.ஜ.க தலைவர்; அலட்சியம் காட்டிய போலீஸ்

``மோடிக்கு எதிரா பேசுவியா?’’ - மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த பா.ஜ.க தலைவர்; அலட்சியம் காட்டிய போலீஸ்
``மோடிக்கு எதிரா பேசுவியா?’’ - மாற்றுத்திறனாளியை அடித்து உதைத்த பா.ஜ.க தலைவர்; அலட்சியம் காட்டிய போலீஸ்

உத்தரப்பிரதேசத்தில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடியைத் தவறாகப் பேசிய மாற்றுத்திறனாளி இளைஞரை பா.ஜ.க தலைவர தடியால் அடித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் தொகுதியின் பா.ஜ.க தலைவராக இருப்பவர் முகமது மியான். கடந்த திங்கள் கிழமையன்று, பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரது செயல்பாடுகளை விமர்சித்ததாக கூறி மாற்றுத்திறனாளியான மனோஜ் குஜ்ஜார் என்ற இளைஞரை, முகமது மியான் தடியால் தாக்கியுள்ளார். அவர் தடி கொண்டு தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திங்கள் மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு சம்பால் தொகுதி பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் சின்ஹால் உடன் பா.ஜ.க நிர்வாகிகள் உள்ளே சென்றுவிட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது மாற்றுத்திறனாளியான குஜ்ஜார், முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சித்துப் பேசியுள்ளார். அகிலேஷ் யாதவுக்கு நாங்கள் ஓட்டளிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க தலைவர் முகமது மியான் தடி ஒன்றை எடுத்து, மாற்றுத்திறனாளியான குஜ்ஜார் வாயில் அடித்து மிரட்டியுள்ளார். இதையடுத்து மாற்றுத்திறனாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரி யமுனா பிரசாத் கூறுகையில், `இது தொடர்பான முதல்கட்டட விசாரணை நடந்து வருகிறது. கலெக்டர் அலுவலகம் முன்பு இப்படி நடைபெற்றதால் மாற்றுத்திறனாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பா.ஜ.க தலைவர் தாக்கியதாகக் கூறும் வீடியோ குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது'' என்றார். மாற்றுத்திறனாளி குஜ்ஜாரின் தங்கை மஞ்சு கூறுகையில், `என் அண்ணன், செருப்பு மற்றும் ஷூவிற்பனைக்கு நாள்தோறும் அங்கே செல்வார். ஆனால், அவர் திங்கள் அன்று மாலையாகியும் வீடு திரும்பவில்லை. அவரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர் என்பதை, பத்திரிகையாளர்கள் மூலம் அறிந்துகொண்டோம்'' என்றார்.