Published:Updated:

`என்னய்யா சட்டவிரோதம்; தொலைத்துவிடுவேன்!' - அரசு அதிகாரியை மிரட்டிய `ஆவின்' வைத்தியநாதன்

`என்னய்யா சட்டவிரோதம்; தொலைத்துவிடுவேன்!' - அரசு அதிகாரியை மிரட்டிய `ஆவின்' வைத்தியநாதன்
`என்னய்யா சட்டவிரோதம்; தொலைத்துவிடுவேன்!' - அரசு அதிகாரியை மிரட்டிய `ஆவின்' வைத்தியநாதன்

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி என்று கூறி அரசு அதிகாரி ஒருவரை ஆவின் வைத்தியநாதன் மிரட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த பரிக்கல் கிராமத்தில் தனியார் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து பிரிந்து சென்ற ஒருவர் அதே பகுதியில் புதியதாகப் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றை தொடங்கியிருக்கிறார். அரசிடம் அதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்ததால் விழுப்புரம் மாவட்ட உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி கதிரவன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரிய அனுமதி இல்லாமலும் சுகாதாரமற்ற முறையிலும் இயங்கி வந்ததால் அந்தத் தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விநியோகித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம் தம்பி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஆவின் வைத்தியநாதன் அந்த அதிகாரியைக் கடுமையாக விமர்சிக்கும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

வைத்தி: ``ஹலோ... சார் வணக்கம். சி.வி.சண்முகம் வீட்டிலிருந்து அவரின் பிரதர் வைத்தி பேசுகிறேன்.’’

கதிரவன்: ``சொல்லுங்க சார்...’’

வைத்தி: ``என்ன உளுந்தூர்பேட்டையில அந்தப் பையனை வைச்சு மிரட்டுறீங்க?’’

கதிரவன்: ``நானா... அப்படியா..?’’

வைத்தி: ``நீங்க என்ன டிபார்ட்மென்ட், உங்க பேரன்ட் டிபார்ட்மென்ட் என்ன?’’

கதிரவன்: ``ஃபேமிலி வெல்ஃபேர் ஹெல்த் டிபார்ட்மென்ட், புட் சேப்டி ஆபீஸரா வொர்க் பண்றேன்.’’

வைத்தி: ``எதுவாக இருந்தாலும் நோட்டீஸ் கொடுங்க, புரியுதா? சும்மா அங்கப் போயி மாலைக்குள் மூடிவிடுவேன் என மிரட்டுவதற்கு நீங்கள் யார் ?’’

கதிரவன்: ``தவறாகப் பேச வேண்டாம். நான் இன்ஸ்பெக்‌ஷன் செய்து முடித்துவிட்டேன். அங்கே முறைகேடாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்க யாராக இருந்தாலும் மாவட்ட அதிகாரிகிட்ட பேசுங்க” என்று அமைதியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே ஏக வசனத்தில் பேச ஆரம்பிக்கிறார் வைத்தி...

``என்னய்யா சட்டவிரோதம் ? தொலைத்துவிடுவேன் உன்னை. யார்கிட்ட பேசறன்னு தெரிஞ்சுக்க. மாவட்டத்திலேயே இருக்க மாட்ட நீ. நீலகிரிக்குத் தூக்கிப்போட்டுருவன். ஜாக்கிரதை, டேய் பிச்சுடுவேன். பொறுக்கி நாயே. பொறுக்கித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கியா,  எதிர்தரப்பு காசு கொடுக்கிறான் என்பதற்காக இப்படியா பண்ணுவ ? பொறுக்கித்தனம் பண்றீயா, லஞ்சம் வாங்குற நாய் நீ. அவன்கிட்ட கேட்டாலே தூக்கிப்போட்டுப் போவான். நீ எங்கடா இருக்க? நேரில் வந்தால் பிய்ச்சுடுவேன். நோட்டீஸ் கொடுத்த அந்த வேலையப் பாரு” என்று பேசிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்ட அதிகாரி கதிரவன், “நோட்டீசுக்கு அவங்க பதில் கொடுக்கட்டும் சார்” என்கிறார்.

உடனே சூடாகும் வைத்தி,``பாக்குறதுக்கு நீ இருந்தாதானே ? ஆவின் நிறுவனத்தில் போய் ஆய்வு பண்ணுவியா, முடியுமா உன்னால்? உன்னை வேற மாதிரி டீல் பண்ணிடுவேன். தொலைச்சு கட்டிவிடுவேன். நீ வேணும்னா மூடி பாருடா. தைரியம் இருந்த அங்க வாடா பார்க்கலாம். ஹெல்த் செக்ரட்டரிக்கிட்டக்கூட நான் பேசுவேன். அது என்னோட வேலை. டெல்லியில்கூட பேசுவேன், புட் சேஃப்டி துணை இயக்குநர் ஆபீஸர் அலெக்ஸ்கூட பேசுவேன். இப்ப அவரு ஆவீன்ல இருக்கிறாரு. லஞ்சம் கேட்கிறாய் எனச் சொல்லி உன்னை என்ன பண்றேன் பாரு” என்று மிரட்டுகிறார்.

அவரைத் தொடர்ந்து ``நான் ஆவின் மகேஷ் பேசுகிறேன்” என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், ``அ.தி.மு.க-வில் நான் மாவட்டப் பொருளாளராக இருக்கிறேன். உங்களுக்கு அந்த இடத்துல வேலையே இல்லை சார். ஏன் நோட்டீஸ் கொடுத்தீங்க. அமைச்சர் சி.வி.சண்முகம் எங்க பெரியப்பா பையன்தான்” என்றவரிடம், ``அந்த இடம் சுகாதாரமற்று இருந்தது. அதுபோல் இருக்கக் கூடாது என மாவட்ட அதிகாரியிடம் லெட்டர் கொடுத்தேன். இதற்கு நாம் அனுமதி தரும் வரை நிறுத்திவைக்கும்படி அவர் கூறினார். அதற்காக நான் லஞ்சம் வாங்கியதாகக் கூறுவது தவறானது” என்கிறார் கதிரவன்.

அதற்கு மகேஷ் என்பவர், ``லஞ்சம் வாங்காத அதிகாரியே இல்லைங்க சார். வந்தீங்களா 2,000 வாங்கிட்டுப் போங்க. பி.எம்.சி உங்க கட்டுப்பாட்டில் வராது. நீங்க நோட்டீஸ் கொடுத்தா உங்க மேல மான நஷ்ட வழக்குப் போடுவோம்” என்றார்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தம்பி வைத்தி என்று பேசும் இவர்தான் ஆவின் வைத்தி என்று அறியப்படுபவர். ஆவின் பால் கலப்பட முறைகேடு வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் இவர்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல்துறை எஸ்.பி ஜெயக்குமாரிடம் பேசினோம். ``இரண்டு நாள்களுக்கு முன்புதான் வைத்தி மீது கதிரவன் புகார் அளித்திருக்கிறார். அதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

அமைச்சர் சி.வி.சண்முகத்தைத் தொடர்புகொண்டோம். அவர் மீட்டிங்கில் இருப்பதாகப் பேசிய அவரின் உதவியாளர், ``அமைச்சருக்கும் அவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர்கள் யார் என்றுகூட அவருக்குத் தெரியாது. அதிகாரியை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கும்படி அமைச்சர் கூறிவிட்டார்” என்றார்.

ஆவின் வைத்தியநாதனின் வழக்கறிஞர் விஜய்யிடம் பேசினோம். ``இந்தக் குற்றச்சாட்டை வைத்தி, மகேஷ் இருவருமே மறுக்கிறார்கள். அந்தக் குரல் அவர்களுடையது அல்ல. தன் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் வைத்தி முடித்துக்கொண்டு வருகிறார். மேலும், அவர் அ.தி.மு.க-வில் இல்லை. அ.ம.மு.க-வில் இருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் இந்த ஆடியோ தற்போது பரப்பப்பட்டு வருகிறது. சட்டப்படி இதை எதிர்கொள்வோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு