Published:Updated:

அந்தமான் அம்பு சொல்வது என்ன?

அந்தமான் அம்பு சொல்வது என்ன?
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தமான் அம்பு சொல்வது என்ன?

வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகப் பாய்ந்த ஆதிவாசி அம்புஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

“அவர்கள் எங்கள் காடுகளுக்குள் வந்தபோது எங்களிடம் நிலங்கள் இருந்தன.
அவர்கள் கைகளில் மதப் புத்தகம் இருந்தது.
நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்றார்கள்,
கண்களை மூடித் திறந்தபோது
எங்கள் கைகளில் மதப் புத்தகமும்
அவர்களிடம் எங்கள் நிலங்களும் இருந்தன...”


செனகல் நாட்டு அதிபரும் கவிஞருமான லியோ போல்ட் செடார் செங்குவாரின் கவிதை இது. சமீபத்தில் அந்தமான் தீவில் கொலைக் குற்றம் செய்ததாகக் கூறப்படும் சென்டினலீஸ் இன மக்களின் செயலை இதன் பின்னணியிலிருந்தும் பார்க்கலாம். அந்தமானின் சென்டினல் தீவுக்குச் சென்ற அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் சாவ், பழங்குடிகளால் அம்பு எய்து கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் ஏராளமான காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால்  அங்கு பழங்குடிகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதே சென்டினலீஸ் இன மக்களின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள் அந்தமான் நிலவரங்களை உற்று கவனித்துவரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்.

அந்தமான் அம்பு சொல்வது என்ன?

ஜான் கொல்லப்பட்டபிறகு அவரது உடலை மீட்பதற்காக, படகில் சென்டினல் தீவுக்குச் சென்ற காவல்துறையினர், அங்கு கடற்கரையில் பழங்குடிகள், வில் அம்புடன் இருந்ததைப் பார்த்தவுடன் பின்வாங்கினர். சரி, கொலை செய்யும் அளவுக்கு சென்டினலீஸ் பழங்குடியினர் கொடியவர்களா? ‘சென்டினலீஸ் பழங்குடிகள் அமைதியை விரும்புபவர்கள்; யாரையும் தேடிச்சென்று தாக்குவதில்லை. அதேசமயம், அவர்களின் எல்லைக்குள் மற்றவர்கள் நுழைவதையும் அவர்கள் விரும்புவதில்லை’ என்கிறார் மூத்த மானுடவியலாளர் டி.என்.பண்டிட். இவர்தான் முதன்முதலில் 1970-களில் அந்தப் பழங்குடிகளைச் சந்தித்தவர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அந்தமான் அம்பு சொல்வது என்ன?

1970-ல் பண்டிட் முதல்முறையாக அங்கு சென்றபோது, எவ்வளவு முயன்றும் அவரால் சென்டினலீஸ் மக்களைத்  தொடர்புகொள்ள முடியவில்லை. எப்படியாவது அவர்களின் நட்பைப் பெற வேண்டும் என்று  வாழைப்பழம், தேங்காய் ஆகியவற்றை தீவில் வைத்துப் பார்த்தார் அவர். எதற்கும் அவர்கள் மசியவில்லை. இறுதியாக, தீவை விட்டு பண்டிட் கிளம்பியபோது ஒரு பன்றிக் குட்டியைத் கரையில் பரிசாக வைத்துவிட்டுச் சென்றார். அதையும் அவர்கள் கொன்று மணலில் புதைத்து, தங்களது எதிர்ப்பை உணர்த்தினர். அதன் பிறகும் அங்கு சென்று பல்வேறு முறைகளில் தன் அன்பை பண்டிட் வெளிப்படுத்திய பின்னரே சென்டினலீஸ் இறங்கிவந்தார்கள். பல ஆண்டுகள் அவர்களுடன் தொடர்பில் இருந்தார் பண்டிட்.

1990-க்குப் பிறகு அந்தப் பழங்குடிகள் வெளியுலகத் தொடர்புகளை முழுவதுமாகத் துண்டித்துவிட்டனர். 1981-ல் பிரிம்ரோஸ் என்ற கப்பல், இந்தத் தீவில் கரை தட்டியபோது, இவர்களால் கப்பலில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர். 2006-ல் விபத்தால் அங்கு கரை ஒதுங்கிய இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, இந்திய கடற்படை அந்தத் தீவின் மூன்று கி.மீ தூரக் கடல் பகுதியை, தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.

அந்தமான் அம்பு சொல்வது என்ன?

சரி, மானுடவியலாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற சென்டினலீஸ் பழங்குடியினர், ஏன் அந்நியர்களைத் தாக்குகிறார்கள்? காரணம், அவர்களின் கடந்த காலத் துயரங்கள். 19-ம் நூற்றாண்டின் காலனி ஆதிக்கத்துக்கு சென்டினலீஸ்களும் தப்பவில்லை. அவர்கள் பிரிட்டிஷாரால் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டனர். வேட்டையாடுதல், மீன் பிடித்தல் தவிர தங்களது இயல்பிலேயே இல்லாத வேலைகளைச் செய்யத் தெரியாமல் அவர்கள் திணறியபோது, கடும் சித்ரவதைக்கு ஆளானார்கள். விடுதலைக்குப் பின்பும் இந்திய அரசு அங்கு கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியது.

1957-ல் மத்திய அரசே வங்காளிகளையும், இலங்கை மக்களையும் குடியமர்த்தியது. அந்தமான் சிறையிலிருந்து விடுதலையானவர்களும் அங்கேயே தங்கிவிட்டனர். பழங்குடிகளின் வாழ்விடங்கள் பறிக்கப்பட்டன. 

எல்லாவற்றுக்கும் மேலாக, 1990-களின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட மிகப்பெரிய வளர்ச்சித் திட்டமான தேசிய நெடுஞ்சாலை - 223 ‘அந்தமான் டிரங்க் சாலை’ ஜராவா பழங்குடிகளைக் கடுமையாகப் பாதித்தது. 230 கி.மீ தொலைவுக்கு அவர்களின் வாழ்வாதாரங்கள், காடுகள், அமைதி என அத்தனையையும் குலைத்துப்போட்டது அந்தச் சாலை. அதில் அதிவேகமாகக் கடந்து சென்ற கனரக வாகனங்களையும் சுற்றுலாப் பயணிகளின் இரைச்சல்களையும் கேட்டு நடுங்கிப் போனார்கள் பழங்குடியினர். தொடர்ந்து படிப்படியாக அரசு, பழங்குடிகளுக்கு இலவசத் திட்டங்கள் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்து அவர்களின் வாழ்விடங்களை அழித்தது. இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். ஒருகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கப் பழங்குடியினர் விலங்குகளைப்போல் காட்சிப்பொருளாக ஆக்கப்பட்டதுதான் கொடுமையின் உச்சம். 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் ட்ரங்க் சாலையில் போக்குவரத்துக்குத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். அப்போதும் நிலைமை மாறவில்லை. இதை எல்லாம் உணர்ந்துதான், சென்டினலீஸ் இன மக்கள் தங்களை மேலும் மேலும் தனிமைப்படுத்திக் கொண்டனர். அவர்களும் எல்லை தாண்டிச் செல்வதில்லை. யாரையும் எல்லை தாண்ட அனுமதிப்பதில்லை.

அந்தமான் அம்பு சொல்வது என்ன?

ஆனால், தற்போதைய பி.ஜே.பி அரசு நிலைமையை இன்னும் மோசமாக்கிவருகிறது. 2,100 கோடி ரூபாய் செலவில் அந்தமான் டிரங்க் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ‘நான்கு லட்சமாக உள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகையை 12 லட்சமாக உயர்த்துவோம்’ என்று இலக்கு நிர்ணயித்துள்ளனர், வளர்ச்சித் திட்ட வல்லுநர்கள். காடுகள், நீர் நிலைகள் அழிக்கப்பட்டு, பெரும் கட்டடங்களும் தீவுகளை இணைக்கும் பிரமாண்ட பாலங்களும் அமைக்கப்படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, 29 தீவுகள் உட்பட மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டவர் செல்வதற்கு நீண்டகாலமாக இருந்த தடையை, வளர்ச்சி என்ற பெயரில் 2018 ஆகஸ்ட் மாதம் தளர்த்தியது மத்திய அரசு. அப்படி விலக்கு அளிக்கப்பட்ட தீவுகளில் வடக்கு சென்டினலும் ஒன்று. அங்குதான் ஜான் சென்றிருக்கிறார். எல்லை தாண்டியவரைக் கொன்றிருக்கிறார்கள் சென்டினலீஸ் பழங்குடியினர்.

இறுதியாக ஒன்று... வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் நாட்டில் இதுவரை சுமார் 85 லட்சம் பழங்குடிகள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அந்தமான் தீவுகளில் வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு அவ்வாறு இடம் பெயரக்கூட வேறு வாழ்விடம் இல்லை. கொலையை நியாயப்படுத்த முடியாது. அது தவறுதான். ஆனால், ஒருகாலத்தில் 5,000 பேருக்கு மேல் வசித்த சென்டினலீஸ் இனத்தில், இன்று வெறும் 90 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். அவர்கள் செய்ததின் பெயர் கொலை எனில் இன அழிப்பின் பெயர் என்ன சட்டமா?

அந்தமான் அம்பு சொல்வது என்ன?
அந்தமான் அம்பு சொல்வது என்ன?
அந்தமான் அம்பு சொல்வது என்ன?
அந்தமான் அம்பு சொல்வது என்ன?

- கே.ராஜு
தொகுப்பு:பெ.மதலை ஆரோன்,
இன்ஃபோகிராபிக்ஸ்: எம்.மகேஷ்

தலையிடாமை, குறுக்கிடாமை!

டந்த காலத்தில் மத்தியில் இருந்த அரசுகள், அந்தமானில் வளர்ச்சித் திட்டங்களை மேற்கொண்ட அதேசமயம், அங்கு பழங்குடி மக்களின் பாதுகாப்புக்கும், வாழ்வுரிமைக்கும் முன்னுரிமை வழங்கின. 1956-ல் நிறைவேற்றப்பட்ட அந்தமான் நிகோபார் பூர்வக்குடிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், வெளியாட்கள் குறுக்கீட்டைத் தடுத்து, வாழ்வாதார உரிமைகளை உறுதி செய்தது. 1957-ல் மத்திய அரசு பழங்குடிகளின் ஒரே விருப்பமான ‘தலையிடாமை, குறுக்கிடாமை’ கொள்கையை நடைமுறைப்படுத்தியது. அவர்களின் இடங்களில் வெளியாட்கள் விவசாயம் செய்யவும், குத்தகைக்கு விடவும் தடை விதித்தது. 2012-ல் ஆதிவாசிகள் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்பட்டு, மேலும் கடுமையாக்கப்பட்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத்தான் வளர்ச்சித் திட்டங்களால் பழங்குடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேவை விழிப்பு உணர்வு!

ந்தமானைச் சேர்ந்த தொழிலதிபரான டி.எஸ்.ஜி.பாஸ்கரிடம் பேசினோம். “ஜான், சென்டினலீஸ் இனத்தவரிடம் ஏன் சென்றார் என்பது புரியவில்லை. ஷோம்பென், ஜரவா, ஓங்கே இன மக்கள் தனிமையில் வசித்தாலும், வெளியுலகத் தொடர்பில் 9உள்ளனர். ஆனால், சென்டினலீஸ் மக்கள் அப்படியல்ல. நோய் பரவக்கூடாது என்பதற்காக சென்டினலீஸ் இன மக்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதை அரசு தடை செய்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, சூழல் விழிப்பு உணர்வைச் சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்’’ என்றார்.