Published:Updated:

`2 வாரத்துக்குள் சரணடையுங்கள்!’ - பாலகிருஷ்ணா ரெட்டியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

`2 வாரத்துக்குள் சரணடையுங்கள்!’ - பாலகிருஷ்ணா ரெட்டியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்
`2 வாரத்துக்குள் சரணடையுங்கள்!’ - பாலகிருஷ்ணா ரெட்டியின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

இளைஞர் விளையாட்டு நலன்துறை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி.1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்பனையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகப் பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இதே வழக்கில் 108 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீண்ட நாள்களாக நடந்து வந்தது. சமீபத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பதவியைப் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலகிருஷ்ணா ரெட்டி மேல் முறையீடு செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலகிருஷ்ணா ரெட்டியின் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அமைச்சருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளது. மேலும், 2 வார காலத்துக்குள் காவல்துறையினிரிடம் சரணடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.