Published:Updated:

"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்!’’ கைதான சயன்

"சி.பி.ஐ. விசாரணை கேட்டு டிராபிக் ராமசாமி போன்றவர்கள், நீதிமன்றம் போயிருக்கிறதா பேப்பர்ல நியூஸ் படிச்சோம். அதுதான் எங்க கோரிக்கையும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்".

"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்!’’ கைதான சயன்
"அடுத்து என்ன... மேத்யூ சாமுவேலுக்குத் தெரியும்!’’ கைதான சயன்

கொடநாடு எஸ்டேட் தொழிலாளர்கள் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட சயன், வாளையார் மனோஜ் ஆகிய இருவரும் இன்று, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன், இருவரும் மாயமாகி விட்டதாக தெஹல்கா இணையதள முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தன் ட்விட்டர் செய்தியில் வெளியிட்ட செய்தி பரபரப்பைப் பற்றவைத்தது. அவர்களை மீண்டும் சென்னை போலீஸார் கைது செய்திருப்பதாக யூகங்கள் கிளம்பிய நிலையில், காலை 10:30 மணிக்கு இருவரும் எந்தப் பதற்றமும் இல்லாமல் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜரான இருவரும், தங்கள் வழக்கறிஞர் பிரபாகர் மூலமாக பிணைப் பாதுகாப்பு வழங்க இரண்டு நாள்கள் அவகாசம் கோரினர். இதனை ஏற்க மறுத்த நீதிபதி மலர்விழி, மாலை 5:30 மணிக்குள் அவர்கள் பிணைப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அதன்படி, 'இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், தலா இரண்டு பேர் வீதம் மொத்தம் நான்கு பேர் ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்' என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அவர்கள் இருவரையும் சென்னை போலீஸார் டெல்லியில் கைது செய்தது தொடர்பாக, மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "தங்கள் ஆளுகைக்கு உட்படாத மாநிலத்தில், வேறொரு மாநில போலீஸார் கைது நடவடிக்கை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னரே அவர்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல முடியும். இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதா?" எனக் கேள்வி எழுப்பிய டெல்லி நீதிமன்றம், வரும் 31-ம் தேதிக்குள் டெல்லி காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தது.

எஸ்.பி.சி.ஐ.டி., ஐ.எஸ்., ஐ.பி., சென்னை காவல் ஆணையரின் உளவுப்பிரிவு என அத்தனை பிரிவுகளும் நீதிமன்றத்தை சூழ்ந்திருந்தன. ஏ.டி.எஸ்.பி. ஒருவர் தலைமையில் இரு ஆய்வாளர்கள், நான்கு உதவி ஆய்வாளர்கள், இருபதுக்கும் மேற்பட்ட காவலர்கள் என சயன், மனோஜ் ஆகியோர் பாதுகாப்பிற்காக, நீதிமன்ற அறையைச் சுற்றிலும் போலீஸார் தடுப்புச்சுவர் எழுப்பியிருந்தனர். 

ஒரே ஒரு ஆவணப்படத்தால் தமிழக அரசியலை புரட்டிப் போட்டிருக்கும் சயனும், மனோஜூம் நீதிமன்றத்தில் மிக அமைதியாக உட்கார்ந்திருந்தனர். டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டபோது, தாடியுடன் காட்சியளித்த சயன், இன்று 'க்ளீன் ஷேவ்' செய்து 'பளிச்சென்று' காட்சியளித்தார். நீதிமன்ற நடைமுறைகள் முடிவடைந்ததும் சயனிடம் பேச்சுக் கொடுத்தோம்.

"தமிழ்நாட்டையே பரபரப்பா ஆக்கிட்டீங்களே?"

"நாங்களும் ரொம்ப பரபரப்பாதான் இருக்கோம். சி.பி.ஐ. விசாரணை கேட்டு டிராபிக் ராமசாமி போன்றவர்கள், நீதிமன்றம் போயிருக்கிறதா பேப்பர்ல நியூஸ் படிச்சோம். அதுதான் எங்க கோரிக்கையும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்".

"உங்க குடும்பத்துல இப்ப யார் மீதமிருக்கிறார்கள்?"

"என்னோட அம்மா மட்டும் இருக்காங்க. அப்பா இறந்துட்டார். தன்னோட தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அம்மா தெம்போட இருக்கிறதுனால பயப்படத் தேவையில்ல".

"நீங்கள் மிரட்டப்பட்டதாகச் செய்திகள் வெளிவருதே?"

"அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. இனி நான் இழக்கிறதுக்கு என்ன இருக்கு? எதைக் கண்டும் நான் பயப்படல". 

"அடுத்ததா என்ன செய்யப் போறீங்க?"

"அதை மேத்யூ சாமுவேல்தான் முடிவு செய்யணும். நாங்க கைது செய்யப்பட்டது தொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டிருக்கார். அது சம்பந்தமாக அவர் பிஸியாக இருப்பதால் இன்னும் பேசவில்லை. இனிமேல்தான் எங்கள் பிணைக்கான நிபந்தனைகள் என்னவென்று தெரியவரும். அவரிடம் பேசிவிட்டுத்தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க வேண்டும்".

அதற்குள் சயனின் வழக்கறிஞர்கள் அவரை அழைக்கவே, அவர் நம்மிடமிருந்து விடைபெற்றார். தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்காகத்தான், கொடநாடு பங்களாவில் கொள்ளையில் ஈடுபட்டதாக, ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் தன்னிடம் தெரிவித்ததாக சயன் வாக்குமூலம் அளித்துள்ளார். கொள்ளை முயற்சியின்போது, கொடநாடு எஸ்டேட் காவலாளி, ஓம் பகதூரை மயக்கமடையச் செய்யவே தாங்கள் முயன்றதாகவும், அவரைக் கொலைசெய்யும் எண்ணத்தில் கட்டிவைக்கவில்லை என்பதும் சயனின் வாதம். 

'ஓம் பகதூர், டிரைவர் கனகராஜ், சயனின் மனைவி விஷ்ணுப்பிரியா, மகள் நீத்து, கொடநாடு எஸ்டேட் சி.சி.டி.வி. ஆபரேட்டர் தினேஷ் குமார் ஆகியோரின் மரணம் கொலைதான்' எனக் குற்றம்சாட்டும் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், இந்தக் கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேத்யூ சாமுவேலின் ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, சயன், மனோஜ் இருவரையும் டெல்லி சென்று தமிழக போலீஸார் கைது செய்தனர். அவர்களை, எழும்பூர் நீதிமன்றத்தில் ஜனவரி 14-ம் தேதி இரவு ஆஜர்படுத்தினர். இருவர் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரிதா, மனோஜையும், சயனையும் ஆஜர்படுத்திய காவல்துறையினரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தையும் பார்த்த நீதிபதி, "இவர்களது பேட்டியின் காரணமாகக் கலவரம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள். எங்குக் கலவரம் ஏற்பட்டது? எப்போது ஏற்பட்டது?" போன்ற கேள்விகளை கேட்க, பதில்சொல்ல முடியாமல் போலீஸார் திணறினர். 'புகார் அளித்தவரிடம் விசாரணை நடத்தப்பட்டதா?' என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பான விவரங்களை அளிக்குமாறு உத்தரவிட்டு, இருவரையும் சிறைக்கு அனுப்ப அன்றைய தினம் மறுத்துவிட்டார். 

இந்நிலையில் சயன், மனோஜ் இருவருக்கும் பிணைப் பாதுகாப்பு வழங்கி நீதிபதி மலர்விழி இன்று உத்தரவிட்டுள்ளார்.