Published:Updated:

`மாபெரும் வரலாற்றுத் துரோகம்!' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்! #RememberingJanuary23

`மாபெரும் வரலாற்றுத் துரோகம்!' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்! #RememberingJanuary23

ஜனவரி 17 தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினா கடற்கரையில் எந்த வன்முறையும் இல்லாமல் நடந்தது.

`மாபெரும் வரலாற்றுத் துரோகம்!' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்! #RememberingJanuary23

ஜனவரி 17 தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் மெரினா கடற்கரையில் எந்த வன்முறையும் இல்லாமல் நடந்தது.

Published:Updated:
`மாபெரும் வரலாற்றுத் துரோகம்!' - மெரினா போராட்ட இறுதி இரவின் சாட்சியம்! #RememberingJanuary23

மெரினா காமராஜர் சாலை `உலக முதலீட்டாளர்கள் மாநாடு' நடைபெறுவதற்காகத் தூய்மைப்படுத்தப்பட்டு, அலங்காரமயமாகியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வந்துள்ள கார்ப்பரேட் முதலாளிகளை மகிழ்விக்க, மெரினாவில் ராட்சத பலூன்களும், பிரமிட் வடிவங்களும் எழுப்பப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்நாளின் விடியல் இப்படியான வரவேற்புகளுக்கு இடம் தரவில்லை. `உலக முதலீட்டாளர்கள்' உலா வரும் மெரினாவின் காமராஜர் சாலையை, அந்நாளில் ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்த்தது. 

`தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும்; காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளை நீக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு தொடங்கியது தமிழக இளைஞர்களின் போராட்டம். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை முதலானவற்றில் மக்கள் கூடும் இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. பணமதிப்பு நீக்கம், காவிரிப் பிரச்னை, கூடங்குளம், மீத்தேன் திட்டம், கெயில் குழாய் பதிப்பு, நியூட்ரினோ முதலான பிரச்னைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், ஜல்லிக்கட்டுத் தடையைக் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகப் பார்த்தது. 

அன்றைய முதல்வர் ஜெயலலிதா மரணம், பின்னாள்களில் மக்களுக்குத் தெரிய வந்த சசிகலா - ஓ. பன்னீர்செல்வம் இடையிலான முரண்பாடு முதலியன அரசு இயந்திரத்தை அமைதி காக்க வைத்தன. வாழ்நாளில் ஒரு போராட்டத்தையும் காணாத நடுத்தர வர்க்க இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் இறங்க, அரசின் இந்த மௌனம் உதவியது. ஜனவரி 17 தொடங்கிய போராட்டம் மெரினாவில் எந்த வன்முறையும் இல்லாமல் நடந்துகொண்டிருந்தது. 

ஜனவரி 22 அன்று மாலை போராட்டத்தில் பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. தொடர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசி, மாணவர்களுடன் நின்ற `ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் நிலைப்பாட்டில் உள்ள மாற்றத்தை ஃபேஸ்புக் நேரலையில் வெளிப்படுத்தினார். போராட்டத்தில் மதப் பிரச்னை ஏற்படுவதாக, ஹெச்.ராஜா அதற்கு சில நாள்கள் முன்பு வெளிப்படுத்திய கருத்தை ஆதியும் வெளிப்படுத்தினார். எனினும் `வாடிவாசல் திறக்காமல் கலையப் போவதில்லை' என்ற உறுதியோடு மெரினாவில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. 

அந்த இரவின் முற்பகுதியில், மெரினாவில் இருந்த சில மீட்டர்கள் தொலைவில் இருந்த சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், `ஹிப்ஹாப் தமிழா' ஆதி, கார்த்திகேய சிவசேனாபதி, பி.ராஜசேகரன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் எனவும், பன்னாட்டுக் குளிர்பானங்களைப் பற்றிப் பேசக் கூடாது எனவும் கூறினர். ஃபேஸ்புக் நேரலையில் கூறியது போல, மீண்டும் போராட்டத்தில் மதப் பிரச்னைகள் நிகழ்வதாகக் குற்றம் சாட்டினார் ஆதி. போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், சட்ட நகல் இரண்டு நாள்களில் கிடைக்கும் எனவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்ததை அறிந்த இளைஞர்களிடையே அதிர்ச்சி மட்டுமே நிலவியது. ஜல்லிக்கட்டு நடைபெறாமல், சட்ட நகலைப் பார்க்காமல், எப்படிப் போராட்டத்தை முடித்துக்கொள்வது என்ற தயக்கத்தோடு அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு அணுகப்பட்டது. இது ஒரு புறம் இருக்க, அமைதியாக அறவழியில் மெரினாவில் நடந்துகொண்டிருந்த போராட்டத்தில், அதன் இறுதி இரவில், அமைதிக்கு இடையூறு நிகழ்ந்தது. 

பி.ஜே.பி.யின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த விவேகானந்தர் இல்லம், குடிசைமாற்று வாரியம் முதலான இடங்களில் நிற்காமல், சற்று தொலைவில், திருவல்லிக்கேணி கோயில் வளைவு முன் நின்றபடி, தேசியக் கொடிகளுடன் வந்து, `ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்தியாவைத் துண்டாடுகிறது’ என முழக்கம் எழுப்பினர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடியிருந்த இந்தப் போராட்டத்தில் எழுந்த எதிர்ப் போராட்டம், சட்ட ஒழுங்கு நிலவரங்களையும் மீறி அசம்பாவிதத்தை உருவாக்கியது.

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிலர் அந்த எதிர்ப் போராட்டத்தைக் கேலி செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்குள் வாக்குவாதம் எழ, பல இளைஞர்கள் எதிர் போராட்டத்துக்கு எதிராகக் கூடினர். கைகலப்பு ஏற்பட்டு, பி.ஜே.பி மாணவர் அமைப்பினர் விரட்டியடிக்கப்பட்டனர். சாலையிலிருந்து கடற்கரையின் இருட்டினுள் புகுந்து அந்த மாணவர்கள் ஓடினர்.

போராட்டம் மீண்டும் வழக்கப்படி தொடர்ந்தது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான முழக்கங்களை வைத்தபடி இளைஞர்களும், மாணவர்களும் சாதி, மதம், பாலினம் முதலான எந்தப் பிரிவினையும் இல்லாமல் அமர்ந்திருந்தனர். நள்ளிரவு வரை, இது இப்படியே தொடர்ந்தது.

அதிகாலை 3.30 மணிக்கு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் முன், காவல்துறையினர் மெதுவாக, அமைதியாகத் திரண்டனர். காவல்துறையின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருந்தது. மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அதிகாலை 5.30 மணிக்கு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு டீயும், பிஸ்கட்களும் வழங்கப்பட்டன. போராடுபவர்களுக்குக் கொண்டுவந்த டீயையும், பிஸ்கட்களையும் கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர் காவலர்கள். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு அச்சம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டது. 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் முன்பு, மைக் கட்டிய ஆட்டோ ஒன்றின் முன் நின்றபடி, `போராட்டக்காரர்கள் கலைந்து போக வேண்டும்; தமிழகக் காவல்துறை, மிகவும் கண்ணியமான காவல்துறை' என அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, இளைஞர்கள் காவல்துறையால் விரட்டப்பட்டனர். மெரினா கடற்கரையில் அந்த விடியல் வன்முறையுடன் தொடங்கியது. இளைஞர்களும், மாணவர்களும் கடலை நோக்கி, காவல்துறையினரால் அடித்து விரட்டப்பட்டனர். 

காவல்துறை உயர் அதிகாரி பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்களைக் கலைந்து போகும்படி, வாகனத்தில் இருந்தவாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தார். போராட்டத்தில் இருந்தவர்கள் சட்ட நகலைப் பார்த்து, படிக்கக் கால அவகாசம் கேட்டனர். எனினும் காவல்துறை வாகனம் அறவழியில் போராடிய மக்கள் கூட்டத்தினுள் நுழைந்தது. 

இப்படியான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே வேளையில், போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டார்கள்; இரண்டு முறை தேசிய கீதம் பாடினார்கள். காவல்துறை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிதறி ஓடினர். கடலை நோக்கிச் சிலரும், ஊரை நோக்கிச் சிலரும் திருப்பிவிடப்பட்டனர். காவல்துறையினரால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர்; கேமராக்கள் உடைக்கப்பட்டன.     

சென்னையின் மீனவர்கள், தலித்கள், இஸ்லாமியர்கள் முதலான விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதிகளுக்குள் விரட்டப்பட்டனர் இளைஞர்கள். மற்ற பகுதிகளுக்கான வழிகள் அடைக்கப்பட்டிருந்தன. கறுப்புச் சட்டை அணிந்திருந்த அனைவரையும் தாக்கக் கூறியது காவல்துறையின் உத்தரவு. காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மத்தியில், கறுப்புச் சட்டை அணிந்து, போராட்டத்தை வன்முறையாக்கினர். 

நடுக்குப்பம், ரூதர்புரம், மாட்டாங்குப்பம், மெக்காபுரம், லாயிட்ஸ் காலனி முதலான பகுதிகளுக்குள் நுழைந்த காவல்துறை அனைவரையும் மூர்க்கமாகத் தாக்கியது. கர்ப்பிணிப் பெண் ஒருவர் தாக்கப்பட்டார்; 14 வயதுச் சிறுவன் ஒருவனது கண் பார்வை காவல்துறையின் தடியடியால் பறிக்கப்பட்டது. குடிசைகளும், மீன் மார்க்கெட்டும், எளிய மக்களின் உடைமைகளும் எரிக்கப்பட்டன. 

காவல்துறையின் வன்முறைக்கு, சென்னையில் மட்டும் சுமார் 200 பேர் பாதிக்கப்பட்டனர். எதிரி நாட்டின் மீது படையெடுத்தது போல, காவல்துறை செயல்பட்டது. அந்த ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் பின்னணியை விளக்கி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் இயக்கிய ஆவணப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை விசாரிக்க அரசு, நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் ஆணையம் அமைத்தது. எந்தக் காவல்துறை மக்களைத் தாக்கியதோ, அதே காவல்துறையுடன் அவர் அந்த மக்களைச் சந்தித்தார். ராஜேஸ்வரன் ஆணையத்தில் சாட்சி சொல்ல முயன்ற பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையினரால் மிரட்டப்பட்டனர்.  

இன்று `உலக முதலீட்டாளர்கள் மாநாடு' கொண்டாடுவதில் மும்முரமாக இருக்கிறார் அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். போராட்டத்திலிருந்து விலகியதாக அறிவித்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கவே இல்லை. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுச் சிறப்பாக நடைபெற்றது; `தமிழர்'களால் அறவழியில் போராடிப் பெறப்பட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பிய தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ஆதிக்கத்துடன் தாக்கப்பட்டு வருகின்றனர். வாழ்நாளில் ஜல்லிக்கட்டு விளையாட்டையோ, காளையையோ பார்க்காத சென்னையின் எளிய மக்கள் இன்றுவரை நீதி கிடைக்காமல் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்து வருகின்றனர்.