Published:Updated:

"ரீட்டா மேரி வழக்கு போல ஒரே வாரம்... பொள்ளாச்சி வழக்கில் சாதிக்குமா போலீஸ்?!" திலகவதி ஐ.பி.எஸ்.

``பாலியல் தொழிலில்  ஈடுபட்ட பெண்களின் தகவல்களையே வெளியிடக்கூடாது என்பதுதான் சட்டம். அப்படியிருக்கும்போது  புகார் அளித்த பெண்ணின் பெயர் மற்றும் மற்ற விவரங்களை அவர் வெளியிட்டது பெரிய தவறு. இச்செயல், மேற்கொண்டு புகார் அளிக்க வருபவர்களை அச்சுறுத்தவே செய்யப்பட்டிருக்கிறது."

"ரீட்டா மேரி வழக்கு போல ஒரே வாரம்... பொள்ளாச்சி வழக்கில் சாதிக்குமா போலீஸ்?!" திலகவதி ஐ.பி.எஸ்.
"ரீட்டா மேரி வழக்கு போல ஒரே வாரம்... பொள்ளாச்சி வழக்கில் சாதிக்குமா போலீஸ்?!" திலகவதி ஐ.பி.எஸ்.

பொள்ளாச்சி சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இதுபோன்ற விஷயத்தில் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தியுள்ளது. இவ்விவகாரத்தில் இதுவரையிலான காவல்துறையின் செயல்பாடுகளால் மக்கள் பெரிதும் நம்பிக்கையை இழந்துள்ளனர். இந்நிலையில் இந்தப் பிரச்னை தொடர்பாக வெளிப்படையாகப் பேசுகிறார், ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் திலகவதி ஐபிஎஸ்.

``பொள்ளாச்சி சம்பவத்தில் காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி உங்கள் கருத்து...’’

``மனிதக் குலத்தின் மனசாட்சியை உலுக்கும் செயல் இது. இதுவரை நான்கு பேர் மட்டுமே கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் பலரும் நிச்சயம் இருப்பார்கள். அதனால்தான் பல ஆண்டுகளாக இத்தகைய மோசமான காரியத்தைத் தைரியமாகச் செய்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செயல்பட்ட விதம் மிகத் தவறானது. அவர் இந்த வழக்கின் தன்மையை உணராமல், மேம்போக்காக நடந்துகொண்டார். அதை, அவரின் பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் நன்கு உணர முடிந்தது. இதுபோன்ற சிக்கலான வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதுதான் மிகவும் முக்கியமானது. இது தெரிந்த காவல்துறை அதிகாரியான அவர், புகார் மீது உரிய விசாரணையை நடத்தவில்லை. ஆனால், இதில் அரசியல்வாதிகள் யாருக்கும் சம்பந்தமில்லை எனக் கூறியதன் மூலம் அவர் மீதான நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் தகவல்களையே வெளியிடக் கூடாது என்பதுதான் சட்டம். அப்படியிருக்கும்போது  புகார் அளித்த பெண்ணின் பெயர் மற்றும் மற்ற விவரங்களை அவர் வெளியிட்டது பெரிய தவறு. இந்தச் செயல், மேற்கொண்டு புகார் அளிக்க வருபவர்களை அச்சுறுத்தவே செய்யப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாட்டில் எனக்கும் திருப்தியில்லை. பாண்டியராஜன் மட்டுமே காவல்துறையின் அடையாளமாக நினைக்கக் கூடாது.  வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், உடனடியாக ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு மூத்த பெண் காவல்துறை அதிகாரியைத் தலைவராகக் கொண்ட ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.’’

``பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் காவல்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும்?’’

`` `பாதிக்கப்பட்ட பெண்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ, குறுஞ்செய்தி மற்றும் மெயில் வாயிலாகவோகூட புகார் அளிக்கலாம்' எனக் காவல்துறை அறிவிப்பு வெளியிட வேண்டும். தங்கள் புகார் குறித்த விஷயங்கள் வெளியில் பகிரப்படாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். குற்றத்தைச் செய்தவர்கள்தான் தலைகுனிய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பினர், அச்சப்படவோ, பதற்றமடையவோ அவசியமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் பொதுவானவர்தான். மேற்கொண்டு மற்ற பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் வரக்கூடாது என நினைத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம். அதற்கான நம்பிக்கையையும் தைரியத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது காவல்துறை மற்றும் அரசின் கடமை.

தகவல் தொழில்நுட்ப பிரிவு காவல்துறை அதிகாரிகளின் துணையுடன், பாதிக்கப்பட்ட பெண்களை எளிதில் கண்டறிய முடியும். உடனடியாக அவர்களின் ஃபேஸ்புக் பக்கங்களை முடக்கிவைக்க வேண்டும். அதனால் அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியே வருவது தடுக்கப்படும். கைது செய்யப்பட்ட நால்வரின் செல்போன்களைக் கைப்பற்றி, கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் யார் யாருடன் பேசியிருக்கிறார்கள், எத்தகைய குற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை எளிதில் தெரிந்துகொள்ள முடியும். திறமையான, நேர்மையான, நுட்பமான முறையில் செயல்படக்கூடிய காவல்துறை அதிகாரிகளை நியமித்து விசாரித்தால் மட்டுமே உண்மையைக் கண்டறிய முடியும்.’’

``தற்போது கிடைத்திருக்கும் ஆவணங்களே போதுமானவைதானே! மேற்கொண்டு புகார்கள் வந்தால்தான் இவ்வழக்கு பலம் பெறுமா?’’

``இதுபோன்ற பாலியல் ரீதியான வழக்குகளில் அதிகம் பாதிக்கப்படுவது, பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும்தான். நம் நாட்டில் கற்பு என்பது உயிருக்கு இணையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கற்பு சம்பந்தப்பட்ட விஷயத்தை வெளியுலகில் சொல்வதால் குடும்ப மானம் சீர்குலைந்துவிடும்; மேற்கொண்டு இந்தச் சமூகத்தில் இயல்புடன் வாழ்வது எளிதல்ல என்று நினைப்பார்கள். இது சிக்கலான விஷயம். இப்படியே நினைத்து எல்லோரும் வீட்டில் உட்கார்ந்துகொண்டால், குற்றவாளிகளுக்கு எப்படி உரிய தண்டனை பெற்றுத்தர முடியும்? இதனால், சட்டத்தில் தங்களுக்குச் சாதகமான வழிகளின் மூலம் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுவார்கள். குற்றம் நடந்திருப்பது உண்மை என்றாலும், போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் பல வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகப் புகார் அளிக்க வேண்டும். அல்லது குற்றவாளிகளுக்கு எதிரான தங்களுக்குத் தெரிந்த தகவல்களைச் சொல்லலாம். அப்போது குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

அதேநேரம், இது மிக முக்கியமான வழக்கு என்றாலும், சிக்கலான வழக்காகத் தெரியவில்லை. ஏற்கெனவே, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகளுக்கு எதிரான வீடியோக்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, அவர்கள் குற்றம் செய்திருப்பது நிரூபணமாகிறது. இதுவே போதுமான ஆவணங்கள்தான். இதை வைத்தே குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும். பொள்ளாச்சி வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் பலரும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. இவை நிரூபிக்கப்பட்டால், அது கொலை வழக்காக மாறும். அதனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும். இந்த நால்வர் தவிர, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவர்களை இயக்கியவர்கள், அவர்களால் இறுதியாகப் பயனடைந்தவர்கள் வரை எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும்.’’ 

``இதுபோன்ற அரசியல் பின்னணி கொண்ட பெரிய குற்ற வழக்குகளில் விரைவாக நீதி கிடைப்பதில்லையே...’’

``அது உண்மைதான்! அதிகாரத்தில் உள்ளவர்களின் தலையீட்டால் பல வழக்குகளில் விரைவாகத் தீர்ப்பு வெளியாவதில்லை. சில நேரங்களில் உண்மையான குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவதில்லை. இதுதான் பெரிய சிக்கலாக இருக்கிறது. இவ்வழக்கில் உரிய விசாரணை நடத்தி ஒரு வாரத்தில்கூட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். திண்டிவனம் ரீட்டா மேரி வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த நான், ஒரு வாரத்துக்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால், அதன் நடவடிக்கையில் குடியரசுத் தலைவரே தலையிட முடியாது. எனவே, நேர்மையான பெண் காவல்துறை அதிகாரியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, விரைந்து நீதிமன்றத்தில் வலுவான ஆதாரங்களுடன் அறிக்கையைத் தாக்கல் செய்தால், குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. அப்போதுதான் காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும்.’’

``இதுபோன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்க, பெண்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்?’’

``இன்றைய காலத்தில் ஆண் - பெண் நட்பு தவிர்க்க முடியாதது. அந்நட்பு நாகரிக எல்லைக்குள் இருக்கும் வரை யாருக்கும் பிரச்னையில்லை. `எந்தப் புற்றில் பாம்பு இருக்கும்’ என்பதைக் கண்டறிவது சிக்கலானதுதான். அந்த அளவுக்கு ஆசை வார்த்தைகளைக்கூறும் சில ஆண்கள், பெண்களைத் தங்கள் ஆசைக்கு இரையாக்கிவிடுகின்றனர். இதுபோன்ற `நாடகக் காதல்; நாடக நட்பி'ன் உண்மைத் தன்மையை உணர்ந்து, பெண்கள் ஆண்களிடம் விழிப்புடன் பழக வேண்டும். அந்த ஆண் நபரைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காதலர்கள், திருமணத்துக்கு முன்பு வரம்பு மீறாத கண்ணியமான பழக்கத்தில் இருக்க வேண்டும். காதலர்/நண்பர் என்றாலும், ஆண் நபர் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் பெண்கள் நம்பிச் செல்லாமல் இருக்க வேண்டும். அதற்காகப் பெண் குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கும் பிற்போக்குத்தனமான செயல்களிலும் பெற்றோர் ஈடுபடக்கூடாது. பெண்களுக்குச் சுதந்திரத்துடன் செயல்பட விடுவதுடன், சமூகத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டிய விதத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.’’