Published:Updated:

பொள்ளாச்சி சம்பவத்தைக் காவல்துறை கையாண்ட விதம்... உணர்த்தும் உண்மை என்ன?

கைது செய்யப்பட்டுள்ள கும்பலுடன் தொடர்புடைய பலரும் வெளியில் சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும் போராடுபவர்களையும் ஒடுக்குவ என்று யாருடைய கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் பாண்டியராஜன்.

பொள்ளாச்சி சம்பவத்தைக் காவல்துறை கையாண்ட விதம்... உணர்த்தும் உண்மை என்ன?
பொள்ளாச்சி சம்பவத்தைக் காவல்துறை கையாண்ட விதம்... உணர்த்தும் உண்மை என்ன?

பொள்ளாச்சி பாலியல் தொடர்பான வழக்கு பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேர் மீதும், கைது செய்யப்படாமல் இருக்கும் பலர் மீதும் புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. ஆனால், இதுதொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தாமல், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நீதி கேட்டுப் போராடுபவர்களையும், அந்தச் சம்பவத்தில் அரசியல் தொடர்புள்ளவர்கள் குறித்துப் பேசுபவர்களையும் ஒடுக்குவதிலேயே போலீஸார் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்த வழக்கில் ஆரம்பம் முதலே, போலீஸாரின் செயல்பாடுகள் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

இந்தக் கும்பல் கடந்த ஏழாண்டுகளாக, இத்தகைய வக்கிரச் செயல்களில் ஈடுபட்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வசந்தகுமார் மீது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படி எத்தனை புகார்களை போலீஸ் தட்டிக் கழித்திருக்கிறது என்று தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் மற்றும் அவருடைய நண்பர்கள், பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே, அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தர்ம அடி கொடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். செல்போனில் இருந்த வீடியோ ஆதாரத்துடன்  புகார் கொடுக்கப்பட்டும் ஒரு வார காலம்வரை எந்த நடவடிக்கையும் போலீஸார் எடுக்கவில்லை. ``இந்த வழக்கில் அரசியல் தலையீடு இல்லை" என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூறிவரும் நிலையில், ஒரு வாரமாக அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது.

இந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என்று அடுத்தடுத்து உடனடியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், ஏன் அப்போதே அதைத் தமிழக அரசு செய்யவில்லை? சம்பிரதாயத்துக்காக, போலீஸ் எஸ்.பி. செய்தியாளர்களைச் சந்தித்ததுடன், அவர்கள் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டனர். மேலும் எஸ்.பி. அந்தப் பேட்டியின்போது உளறிக்கொட்டிய அடுத்த நாளே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ-டிக்கு மாற்றப்பட்டது. ``இந்த வழக்கில், நான்கு பேரைத் தவிர வேறு யாருக்கும் சம்பந்தமில்லை" என்று கிட்டத்தட்ட வழக்கு விசாரணை முடித்துவிட்டது போல எஸ்.பி. பாண்டியராஜன் பேட்டியளித்தார். இதில், நமது போலீஸார் சரியான கோணத்தில் செயல்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்படியிருக்கும்போது தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ என்று எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக வழக்கை மாற்ற வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. தங்களது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகத்தானே இந்த ஏற்பாடு என்று பலரும் கேள்வி எழுப்பியவண்ணம் உள்ளனர். 

எஸ்.பி. பாண்டியராஜன் எதற்காகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்? அதிலும், ``அரசியல் தலையீடு இல்லை. 100 சதவிகிதம் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பில்லை" என்பதை மீண்டும் மீண்டும் கூறி, ``சமூக வலைதளங்களில் இதுகுறித்து ஆதாரம் இல்லாமல் தவறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார். தடயவியல் சோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, ``இவர்கள் மட்டும்தான் குற்றவாளி, அரசியல் தலையீடு ஏதும் இல்லை" என்று எந்த அடிப்படையில் அவர் சொல்கிறார்? கைது செய்யப்பட்ட கும்பலுடன் தொடர்புடைய பலரும் வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களையும், போராடுபவர்களையும் ஒடுக்குவது என்று யாருடைய கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார் அந்த போலீஸ் எஸ்.பி? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் போராடுபவர்களைச் சமூக விரோதிகள் என்று சொல்லி வந்த பாண்டியராஜன், பின்பு சுதாரித்துக்கொண்டு சமூக ஆர்வலர்கள் என்று கூறி சமாளித்தார்.
  
பொள்ளாச்சி திருவள்ளூவர் திடலில் தி.மு.க நடத்திய போராட்டக் களத்துக்கு பாண்டியராஜனும் வந்தார். தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரை கைது செய்யப்போவதாக முதலில் கூறப்பட்டது. இதற்காக அவர்கள் போலீஸ் ஏற்பாடு செய்திருந்த வாகனத்திலும் ஏறிவிட்டனர். ஆனால், `கைது இல்லை' என்று கூறி மீண்டும் அவர்களை கீழே இறங்கச் செய்தனர். உடனே கனிமொழி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா செய்யத் தொடங்கி விட்டனர். ஒருவழியாக பேச்சுவார்த்தை நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்.

அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கேட்டு கல்லூரி மாணவ, மாணவிகள் பொள்ளாச்சியில் தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்து விடக்கூடாது என்பதற்காக, மாணவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். மாணவிகள் `தரதர'-வென இழுத்துச் செல்லப்பட்டனர். போராட்டம் மீண்டும் தீவிரமடைந்து விடக்கூடாது என்பதற்காக, பொள்ளாச்சியில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் உத்தரவின் பேரில்தான் இதுவும் நடந்துள்ளது. ஆனால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் பார் நாகராஜ் என்பவரின் டாஸ்மாக் பாரை உடைத்ததாக மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யவே தயங்கிய போலீஸார், நீதி கேட்டுப் போராடுபவர்களை ஒடுக்குவது எந்தவகையில் நியாயம் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தொடங்கி, சி.பி.ஐ விசாரணைக்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணைவரை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரைக் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன, இந்த வழக்கில் இனி யாருமே புகார் கொடுக்கக் கூடாது என்பதற்காகவா, பாண்டியராஜன் மட்டுமல்ல, 20 ஆண்டுகளாகப் பணிமாறுதல் இல்லாமல் இருக்கும் ஒரு போலீஸ் தொடங்கி, டிபார்ட்மென்ட்டில் பலரும் இந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாகவே பேசியுள்ளனர். 

இதுகுறித்து கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் கலையரசன், ``எதிரிகளை ஏன் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கவில்லை? அவர்களை எது தடுத்தது? அவ்வாறு முறையாக விசாரித்திருந்தால்தான், அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் மொத்தம் எத்தனை பேர், யார், யார் அதில் சம்பந்தப்பட்டுள்ளனர் போன்ற விவரங்கள் வெளியாகி இருக்கும். பெண்கள் மற்றும் மாணவிகளிடம் மிரட்டிப் பெறப்பட்ட பணம் மற்றும் நகைகளை அந்தக் கும்பல் எங்கே மறைத்து வைத்துள்ளது போன்ற விவரங்களும் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 15 நாள்களுக்குள் மட்டுமே அந்த நபரைக் காவல்துறை விசாரணைக்கு எடுக்க முடியும். வேறு எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றப்பட்டாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 161-ன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தினை பெண் காவல் அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், வழக்குப் பதிவு செய்து விசாரித்தது பொள்ளாச்சி கிழக்குக் காவல் நிலைய ஆண் காவல் ஆய்வாளர்தான். அவர் எப்படிப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்திருப்பார், அந்தப் பெண்ணும் எப்படி அந்த அதிகாரியிடம் தயக்கம் இல்லாமல் வாக்குமூலம் கொடுத்திருப்பார்?

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எம்.எல்.ஏ கொடுத்த புகாரை எதற்காகப் பொதுவெளியில் வெளியிடவில்லை? ஆளும் கட்சியைச் சேர்ந்த நபர், புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை அடித்ததாகக் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலையும் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரின் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை? அதற்கு எந்த அரசியல்வாதி காரணம்? புகார் வந்தால் மட்டுமே விசாரிப்போம் என்கிறார் எஸ்.பி. இந்த மாதிரி வழக்குகளில் காவல்துறையினர் புகார் அளிப்பவர்களைத் தேடிப்போக வேண்டும். வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. எதிரிகளைக் காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. அவர்களின் தொடர்பு குறித்தும் விசாரிக்கவில்லை. யாரைக் காப்பாற்ற இப்படிச் செய்கின்றார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

`மக்களின் நண்பன் காவல்துறை' என்று சொல்வார்கள். ஆனால், இந்த வழக்கில் காவல்துறை யாருடைய நண்பன் என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது.