Published:Updated:

`என்னை பல்துலக்கக் கூட விடல!' - ஆணையரின் புகாரால் பொன்.மாணிக்கவேலுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கலிலுல்லா.ச
`என்னை பல்துலக்கக் கூட விடல!' - ஆணையரின் புகாரால் பொன்.மாணிக்கவேலுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
`என்னை பல்துலக்கக் கூட விடல!' - ஆணையரின் புகாரால் பொன்.மாணிக்கவேலுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

முன்னாள் அறநிலையத்துறை ஆணையரைக் கைது செய்தது தொடர்பாக விளக்கமளிக்கக் கோரி,  சிலைத்தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.77 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக, தலைமை ஸ்தபதியாக இருந்த முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணியும் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து, தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வீரசண்முகமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வீரசண்முகமணிக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ ஏ எஸ் அதிகாரியை எந்தக் காரணமும் தெரிவிக்காமல் கைது செய்ததை விளம்பரத்துக்காக என்றுதான் கருத முடியும் எனக் கண்டனங்களைத் தெரிவித்தார்.

மேலும், இனிவரும் காலங்களில் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி விசாரணை நடத்த சிலைத் தடுப்புப் பிரிவுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில், வீரசண்முகமணி, தான் கைது செய்யப்பட்டதும், விசாரணை என்ற பெயரில் நடத்தப்பட்டதும், மனித உரிமை மீறல் என்று கூறி மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார்.

அந்த மனுவில் அவர், ``தன்னை விசாரணைக்கு அழைத்துச் சென்ற சிலைத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மோசமான முறையில் நடத்தினர். என்னை பல்துலக்க கூட விடவில்லை. குற்றவாளி போலவே அவர்கள் நடத்தினர். ஒருவரை கைது செய்யும் முன் பின்பற்றப்படும் அடிப்படை சட்டவிதிகள் எதையுமே அவர்கள் பின்பற்றவில்லை. எதற்காக கைது செய்தனர் என்பது குறித்து எந்த விளக்கமும் எனக்கு கூறப்படவில்லை. உச்சநீதிமன்றம் கூறியுள்ள குறைந்தபட்ச வழிகாட்டுதலைக்கூட சிலைத்தடுப்பு அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை'' என புகார் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியை கைது செய்யும் முன், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டதா?. உண்மையில் மனித உரிமை மீறல் நடந்ததா?. உள்ளிட்டவை குறித்து 4 வார காலத்துக்குள் விளக்கமளிக்க கோரி, மனித உரிமை ஆணையம் சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.